சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கிவைக்கிற மனுஷருடைய எல்லாவித அவபக்திக்கும் அநியாயத்துக்கும் விரோதமாய், தேவகோபம் வானத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.
ரோமர் 1:18
மனிதர்கள் உண்மையான இரட்சிப்பை அடையும்படி தேவ வசனம் பிரசிங்கிக்கப்படுவதும் அவற்றை கேட்டு மனிதர்கள் மனம் திரும்புவதும் அவசியமாக இருக்கிறது. கர்த்தருடைய வசனமே சத்தியம். மேலோட்டமாக பார்த்தால் தேவ வசனம் பிரசங்கிக்கப்படுவதை தடுப்பவர்களுக்கு மேலாக தேவகோபம் வரும் என்பதைப்போல தோன்றினாலும் கர்த்தரை ஆவியோடும் உண்மையோடும் ஆராதிக்க கூடிய ஒவ்வொரு மனிதர்களுக்கும் எதிராக வரக்கூடிய சகலவித போராட்டங்களும் கர்த்தருடைய வசனத்திற்கு எதிரான அடக்குமுறைகளாகவே கர்த்தரால் பார்க்கப்படுகிறது.
ஆச்சரியமாக இருக்கிறதா?
முதலாவது நூற்றாண்டில் வாழ்ந்த அப்போஸ்தலர்கள் முதற்கொண்டு இன்றைய நாள்வரையுள்ள தேவமனிதர்கள் கர்த்தருடைய வார்த்தையை, சத்தியத்தை மனிதர்களுக்கு தங்களுடைய வார்த்தையினாலே எடுத்துக் கூறுவதன் மூலமாக அவர்களை இரட்சிப்பு நேராக வழிநடத்தக்கூடியவர்களாக காணப்படுகிறார்கள். ஆனால் திரள்கூட்டமான ஜனங்கள் அவரை பின்பற்றக் கூடியவர்கள்; ஆராதிக்கக் கூடியவர்கள், வசனத்தை பிரசங்கிக்கிறவர்களாக இல்லாவிட்டாலும்கூட வசனத்தின்படி வாழ்கிறவர்களாக அந்த வசனத்தை தங்கள் வாழ்க்கையின் மூலமாக வெளிப்படுத்தக் கூடியவர்களாக காணப்படுகிறார்கள். சுவிசேஷமே நுழைய முடியாத இடத்திலும்கூட ஆண்டவருடைய பிள்ளைகள் வசனத்தின் படி வாழ்கிறவர்களாக; நீதி நேர்மை உள்ளவர்களாக; சாட்சியுள்ள வாழ்க்கை வாழ்கிறவர்களாக காணப்படும் போது, அங்கு அவர்களையும் அறியாமல் அவர்களது வாழ்க்கையில் மூலமாக கிறிஸ்துவின் வார்த்தை (அ) சத்தியம் வெளிப்படுத்தப்படுகிறது. அந்த வகையில் தங்கள் வாழ்க்கையின் மூலமாக சத்தியத்தை வெளிப்படுத்துகிறவர்களுடைய எண்ணிக்கை இந்த உலகில் அதிகமாக இருக்கிறது என்று கூற முடியும்.
- இன்றைய காலகட்டத்திலே தங்களுடைய முன்னேற்றத்திற்காக மற்றவர்கள் மீது பொய்யான காரியங்களை உண்மை போன்று கூறக்கூடிய மனிதர்கள் பெருகி இருக்கிறார்கள். இப்படிப்பட்ட பொய்யர்கள் தங்களுடைய நடக்கையின் மூலமாக தேவனுடைய பிள்ளைகளுக்கு எதிராக செயல்படும் போது அவர்கள் சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கி வைக்கிற மனிதர்களாக மாறி விடுகிறார்கள்.
- தங்களுடைய கையிலே அதிகாரம் இருப்பதினாலே தாங்கள் சொல்லக்கூடிய காரியங்களை மற்றவர்கள் கேட்கிறார்கள் என்பதினாலே வசனத்தின் படி வாழுகிற தம்முடைய பிள்ளைகளுக்கு எதிராக செயல்படுபவர்கள் சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கி வைக்கிற மனுஷராக மாறுகிறார்கள்.
- தங்களுக்கு பிடித்தவர்கள், தங்களை சார்ந்தவர்களை முன்னிறுத்துவதற்காக உண்மையும் நேர்மையுமுள்ள சத்தியத்தின்படி வாழுகிற தேவனுடைய பிள்ளைகளுக்கு எதிராக செயல்படுகிறவர்கள் சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கி வைக்கிறார்களாக காணப்படுகிறார்கள்.
நீங்கள் தேவனை ஆராதிக்கிறவர்களாக கர்த்தருடைய வசனத்தின் படி வாழுகிறவர்களாக உங்கள் நற்சாட்சி உள்ள நடக்கையின் மூலமாக வாழ்க்கையின் மூலமாக சத்தியத்தை பிரதிபலிக்கிறவர்களாக காணப்படும் போது, உங்களை ஒடுக்குவதற்காக ஒதுக்குவதற்காக ஓரங்கட்டுவதற்காக செய்யப்படக்கூடிய எல்லா மனித செயல்களும் வசனத்துக்கு எதிரானதாக சத்தியத்துக்கு எதிரானதாக இயேசு கிறிஸ்துவுக்கு எதிரானதாக காணப்படுகிறது. அநீதியாக உங்களை துன்பப்படுத்துகிறவர்களுக்கு எதிராக தேவகோபம் வானத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்டு இருக்கிறது என்று வசனம் நிகழ்காலத்தை குறித்து கூறுகிறது. உலகமே உங்களுக்கு எதிராக இருந்தாலும் கர்த்தர் மட்டும் உங்கள் பட்சத்தில் இருந்தால் நீங்கள் தான் நிச்சயமாக வெற்றி பெறுவீர்கள். தைரியமாக கர்த்தருடைய முகத்தை நோக்கி பாருங்கள் அவர் உங்களுக்காக அற்புதங்களை செய்வார்.
No comments:
Post a Comment