மனிதர்கள் வெளித் தோற்றத்தைப் பார்த்து, உலகப் பிரகாரமான சிறப்புகளை பார்த்து ஒரு மனிதனை மதிப்பிடுகின்றனர். கர்த்தர் வெளித்தோற்றத்தை பார்க்கிற தேவன் அல்ல. அவர் இருதயங்களையும் உள்ளிந்திரியங்களையும் சோதித்தறிகிற தேவன். மற்றவர்களுடைய பார்வையில் மட்டுமல்ல தங்கள் சொந்த பார்வையிலேயே சிறியவர்களும் அற்பமானவர்களும் என்று எண்ணிக் கொண்டிருந்த, நம்பிக்கொண்டிருந்த மனிதர்களை அவர் கைதூக்கி எடுத்து அவர்கள் மூலமாக பெரிய காரியங்களை செய்தவராக இருக்கிறார். ஆகவே கலங்காதீர்கள் அவர் உங்களுக்கு துணை நிற்கிறார். பயப்படாதே நான் உனக்கு துணை நிற்கிறேன் என்று கர்த்தருடைய வசனம் சொல்லுகிறது.
வானத்தையும் பூமியையும் நாம் காணும் யாவற்றையும் ஞானமாய் படைத்த நம் ஆண்டவர் நமக்கு துணை நிற்கிறார் என்பது சாதாரண விஷயமா? எவ்வளவு பெரிய பாக்கியம் அது.
- சவுல் இஸ்ரவேலின் ராஜாவாக அபிஷேகம் பண்ணப்படுவதற்கு முன்பு அவர் நான் இஸ்ரவேல் கோத்திரத்திலே சிறிதான பென்னியமின் கோத்திரத்தான் அல்லவா? பென்னியமின் கோத்திரத்து குடும்பங்களிலெல்லாம் என் குடும்பம் அற்பமானது அல்லவா? என்று சாமுவேல் தீர்க்கதரிசியை பார்த்து கூறினார்.
- ராஜாவாக அபிஷேகம் பண்ணப்படும்படி தேடினபோது தன் தகுதியைப் பற்றி சந்தேகப்பட்டவராக என்னால் இது கூடுமா? என்று அச்சப்பட்டவராக ஓடி ஒளிந்து கொண்டார்.
- அவர் ராஜாவாக அபிஷேகம் பண்ண பட்ட பிற்பாடு பலர் இந்த சவுலா நம்மை இரட்சிக்கப் போகிறான்.? இந்த சவுலா நமக்கு ராஜாவாக இருக்கப் போகிறான்? என்றவர்களாக அவனை அசட்டை பண்ணினார்கள்.
சவுல் அவருடைய பார்வையில் எப்படி அற்பமாக இருந்தாரோ அப்படியே அநேக ஜனங்களது பார்வையிலும் இருந்தார். சில மாதங்களுக்குள்ளாக நாகாஸ் என்னும் அம்மோனியன் வந்து இஸ்ரவேலின் ஒரு பட்டணத்துக்கு விரோதமாக முற்றுகை போட்டான். அந்த பட்டணத்து மனிதர் மிகவும் கலங்கினார்கள். கர்த்தருடைய ஆவியானவர் சவுலின் மீது இறங்கினார். கர்த்தர் அவருக்கு துணை நின்றார் அவர் சத்துருக்களுக்கு எதிராக பெரிய வெற்றியை பெற்றுக் கொண்டார். இந்த சவுலா நமக்கு ராஜாவாக இருக்கப் போகிறான் என்ற ஜனங்கள் நடுநடுங்கத்தக்க விதத்தில், தேவன் தெரிந்து கொண்ட தன்னையே அற்பமாக எண்ணின சவுல் ஆச்சரியப்படத்தக்கவிதத்தில் காரியங்கள் மாறுதலாக முடிந்தது.
மனிதர்கள் உங்களுக்கு எதிராக என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும், ஏளனம் செய்யட்டும், உங்கள் தகுதிகளை திறமைகளை குறித்து கேள்வி எழுப்பட்டும். அமைதியாக இருங்கள். நாளொன்று வரும். கர்த்தர் உங்களுக்கு துணை நிற்பதை, கர்த்தர் உங்களோடு இருப்பதை அவர்கள் சொந்த கண்களாலே காண்பார்கள். நிச்சயமாகவே நீங்கள் அதிசயப்பட்டு பூரிப்பீர்கள். கர்த்தர் பெரிய காரியங்களை செய்வார்.
No comments:
Post a Comment