Tuesday, January 24, 2023

தடைகளுக்கு பின்னால் மறைந்திருக்கும் சிறந்த நன்மைகள்.!

            தாவீதைக் காவல் பண்ணி காலையில் கொலை செய்யும்படி சவுல் அவரது வீட்டுக்கு ஆட்களை அனுப்பினார். அந்த சூழ்நிலையைப் புரிந்து கொண்ட தாவீதின் மனைவி மீகாள் தாவீதுக்கு எச்சரிக்கை கொடுத்தது மட்டுமின்றி அவரது உயிரை காப்பாற்றுவதற்கான ஒரு யோசனையும் கொடுத்தார். அப்படியே தாவீது ஜன்னல் வழியாக இறக்கி விடப்பட்டு தப்பி ஓடி தன் உயிரை காப்பாற்றிக் கொண்டார். கர்த்தர் தாவீதுக்கு அறிவுக் கூர்மையுடைய, நல்லாலோசனை கொடுக்கக்கூடிய அளவுக்கு ஞானமுள்ள, அவனை நேசிக்க கூடிய மனைவியை கொடுத்திருந்தார். அவளது உதவியுடன் தேவன் அவனை அபிஷேகம் பண்ணின நோக்கத்தை நிறைவேற்ற முடியாதபடி சத்துரு உருவாக்கிய தடையை அவர் மேற்கொண்டார்.

            இப்படிப்பட்ட ஆசீர்வாதமான ஒரு குடும்பத்தை அடைவதற்கு தாவீது கடந்து வந்த பாதைகள் ரோஜா மலர்கள் தூவப்பட்டவையாக இருக்கவில்லை. மாறாக துரோகத்தின் முட்களும், நிந்தையின் கற்களும், திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஏமாற்றத்தின் குழிகளும் நிறைந்தவையாக இருந்தது. கர்த்தரை மட்டுமே அவர் நம்பி இருந்ததால் கடந்து வந்த பாதைகள் அவரது பயணத்தை தடைபடுத்தவில்லை. மாறாக தடைகள் யாவும் நன்மைக்கு ஏதுவாக மாறிப்போனது.

  • கோலியாத்தை மேற்கொள்பவனுக்கு ராஜாவின் மகள், அவன் தகப்பன் குடும்பத்துக்கு இஸ்ரவேலிலே சர்வமானியம் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அப்படி ஏதும் நடந்ததாக அறிய முடியவில்லை: ஏமாற்றம்.
  •  என் மூத்த குமாரத்தியாகிய மேராவைத் தருவேன் என்று சவுல் சொன்னார். மேராப் தாவீதுக்கு கொடுக்கப்படும் நாட்கள் வந்த போது மேகோலாத்தியனாகிய ஆதரியேலுக்கு மனைவியாக கொடுக்கப்பட்டாள்: துரோகம், திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஏமாற்றம். 
  • இவையெல்லாம் ஏதோ ஊர் பேர் தெரியாத இரண்டு குடும்பங்களுக்கிடையே அல்லது இரு நபர்களுக்கு இடையே நடந்த சம்பவங்கள் அல்ல. தாவீது கோலியத்தை வீழ்த்தியதினாலே முழு இஸ்ரவேல் தேசத்துக்கும் நன்கு அறிமுகமான நபர்.சவுல் இஸ்ரவேலின் ராஜா. இந்த நிகழ்வுகள் முழு இஸ்ரவேல் தேசத்திலும் பேசப்பட்டிருக்கும்: மிகுந்த நிந்தை.

            இவற்றை எல்லாம் கடந்துதான் கர்த்தர் கொடுத்த ஈவாக மீகாள் தாவீதின் வாழ்க்கையில் கடந்து வந்தாள். ஏதோ சில காரியங்களில் மிகுந்த தடை, மிகுந்த ஏமாற்றம், துன்பங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கலாம் தைரியமாக அப்படிப்பட்ட காரியங்களை கடந்து செல்லுங்கள். கர்த்தருக்கு தெரியாமல்  உங்கள் வாழ்க்கையில் எதுவும் நடந்து விட முடியாது. எப்படிப்பட்ட தீமையான காரியங்கள் நடந்தாலும் கர்த்தர் அதை உங்கள் நன்மைக்கு ஏதுவாக முடியப்பண்ணுவார்.

ரோமர்-8:28
 அன்றியும் அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்பு கூறுகிறவர்களுக்கு சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறது என்று அறிந்திருக்கிறோம்.

No comments:

Post a Comment

உங்களுக்கு எதிரானவர்கள் சத்தியத்துக்கு எதிரானவர்கள்.!

சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கிவைக்கிற மனுஷருடைய எல்லாவித அவபக்திக்கும் அநியாயத்துக்கும் விரோதமாய், தேவகோபம் வானத்திலிருந்து வெளிப்படுத்தப்...