Tuesday, January 31, 2023

கர்த்தர் தரும் நன்மைகள் நிரந்தரமானவை.!

 என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்.
எரேமியா 31:14

            குறிப்பிட்ட சூழ்நிலையில் ஆகார் மற்றும்  அவளது குமாரன் ஆகியோர் ஆபிரகாமின் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டனர். ஆபிரகாம் அதிகாலையிலே எழுந்து ஒரு துருத்தி தண்ணீரையும் அப்பத்தையும் எடுத்து ஆகாரிடத்தில் கொடுத்து அவர்களை வழி அனுப்பி வைத்தார். அவர்கள் எங்கு செல்வது என்று தெரியாமல் பெயர்சேபா வனாந்தரத்தில் அலைந்து திரிந்தார்கள். துருத்தியிருந்த தண்ணீர் முழுவதுமாக செலவழிந்து போயிற்று. இப்போது அவர்களது உயிரை காப்பாற்றிக்கொள்ள தண்ணீர் தேவை. ஆகாரை விட  ஆகாரின் குமாரனாகிய இஸ்மாயிலுக்கு  அந்தத் தேவை  அதிகமாக இருந்தது. 

            தன் சொந்த குமாரனுக்கு உதவி செய்ய முடியாதவளாக ஆகார் திகைத்து நின்று கொண்டிருந்தாள். தன்னுடைய குமாரனை ஒரு செடியின் நிழலில் விட்டு விட்டு சற்று தொலைவில் சென்று, என் குமாரன் சாவதை நான் பார்க்க மாட்டேன் என்று சப்தமிட்டு அழத்துவங்கினாள். பிள்ளையின் சத்தத்தை கர்த்தர் கேட்டார் என்பதாக வசனம் சொல்லுகிறது. யார் கூப்பிடுகிறார்கள்? எவ்வளவு சத்தமாக கூப்பிடுகிறார்கள்? என்பதை எல்லாம் விட யார் உண்மையான மனவேதனையோடு  கூப்பிடுகிறார்கள் என்பது இங்கு அதிக முக்கியத்துவத்தை பெறுகிறது. 

            மனிதர்கள் தங்களுடைய தகுதிக்கு ஏற்ப  தங்களால் இயன்ற அளவு உதவியை செய்வார்கள். அந்த உதவி ஒருவேளை உதவி பெறுபவரின் தேவையை நிறைவேற்றக் கூடியதாக இருக்கும். அநேக நேரங்களில் அவ்வாறு இருப்பதில்லை.  மனிதர்கள் கொடுக்கும் வாக்குறுதிகள் அவற்றை நம்பி பயணம் செய்யக் கூடியவர்களுக்கு அநேக நேரங்களில் நடுவழியில் சிக்கலை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கக்கூடும். மனிதர்கள் சில நேரங்களில் வாக்கு மாறக் கூடியவர்கள். சில நேரங்களில் நமக்கு உதவி செய்ய விரும்புபவர்கள் நினைக்கக்கூடிய விதத்திலே காரியங்கள் இருக்காது. ஏதோ ஒரு விதத்தில் அவர்கள் உதவி செய்ய முடியாதவர்களாக மாற்றப்பட்டு விடுவார்கள்.

             திரளான செல்வங்களை உடைய ஆபிரகாமால் குறிப்பிட்ட அந்த சூழ்நிலையில் கொடுக்க முடிந்தது ஒரு துருத்தி தண்ணீரும்  அப்பவும் மட்டுமாக இருந்ததை நாம் கவனிக்க முடியும்.  பிள்ளையின் சத்தத்தை கேட்ட கர்த்தர் ஒரு துரவைக் காட்டினார். ஆகார் ஓடிச்சென்று அந்த துரவிலிருந்து துருத்தியிலே தண்ணீரை நிரப்பி தன் மகனுக்கு கொடுத்தார். ஆபிரகாமால் ஒரு துருத்தி தண்ணீர் தான் கொடுக்க முடிந்தது. அது வனாந்தரத்தில் தீர்ந்தும் போய்விட்டது. கர்த்தர் காட்டின துரவிலிருந்து ஆயிரக்கணக்கான துருத்திகளை நிரப்பிக் கொள்ள முடியும். 

ஆபிரகாம் கொடுத்த நீர் தீர்ந்து போய்விடக் கூடியது ஆனால் கர்த்தர் கொடுத்த அந்த துரவு வற்றாத நீரூற்றாக காணப்படக்கூடியது. எத்தனை காலம் அந்த இடத்திலே குடியிருந்தாலும் அத்தனை காலத்துக்கும் போதுமான தண்ணீர் அந்த துரவிலே வந்து கொண்டே இருக்கும். கர்த்தர் தரக்கூடிய உதவிகளும் இப்படிப்பட்டவைதான் அது ஏதோ கொஞ்ச நேரத்திற்கு என்று அல்லாமல் அது நிரந்தரமாக நம்முடைய வாழ்க்கையிலே காணப்படும். 

            நொறுங்குண்ட இருதயம் உள்ளவர்களுக்கு கர்த்தர் சமீபமாய் இருக்கிறார்.  ஆண்டவர்  உங்களுக்கு சமீபமாக இருக்கிறார். நிச்சயமாகவே நிரந்தரமான ஒரு தீர்வை கட்டளையிடுவார். 

No comments:

Post a Comment

உங்களுக்கு எதிரானவர்கள் சத்தியத்துக்கு எதிரானவர்கள்.!

சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கிவைக்கிற மனுஷருடைய எல்லாவித அவபக்திக்கும் அநியாயத்துக்கும் விரோதமாய், தேவகோபம் வானத்திலிருந்து வெளிப்படுத்தப்...