கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன். அவர் என்னிடமாய் சாய்ந்து என் கூப்பிடுதலைக் கேட்டார்.
சங்கீதம் 40:1
நம்முடைய தேவன் தம்முடைய பிள்ளைகளின் கூப்பிடுதலை செவிகொடுத்துக் கேட்கும் தேவன். நம்முடைய வாழ்க்கையிலே கர்த்தருடைய கிரியைகள், செயல்கள் நமக்கு அனுகூலமாக வெளிப்படும் படிக்கு நாம் பொறுமையோடு காத்திருக்க வேண்டியது அவசியம். நாம் பொறுமையோடு இருக்கும்போது கர்த்தர் நமக்கு நன்மை செய்வார் என்பதான விசுவாசத்தை உடையவர்களாக இருக்கிறோம் என்பதை நம்மையும் அறியாமல் வெளிப்படுத்துகிறோம். ஒரு காரியம் நடக்கவே வாய்ப்பு இல்லை என்று தெரிந்த பிற்பாடு அது நடக்கும் என்று யாரும் காத்திருப்பதில்லை. நிச்சயமாக தேவன் நன்மையை செய்வார் என்ற விசுவாசம் நமக்கு இருப்பதால் மட்டுமே நம்மால் பொறுமையாக இருக்க முடிகிறது.
கர்த்தருக்காக பொறுமையோடு காத்திருந்த அநேகர் அவர்களுடைய தகுதிக்கும் திறமைக்கும் அப்பாற்பட்ட உயர்வுகளை கர்த்தருடைய கரத்திலிருந்து பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். யோசேப்புக்கு தகப்பன் கொடுத்த பல வருட அங்கியை சகோதரர்கள் பிடுங்கிக் கொண்டார்கள். அவனை குழியிலே போட்டார்கள். 20 வெள்ளிக்காசுக்கு அடிமையாக விற்று போட்டார்கள். அவர் எகிப்துக்கு அடிமையாக கொண்டு செல்லப்பட்டார். எஜமான் கொடுத்த அடிமை வஸ்திரத்தை எஜமானின் மனைவியே பிடுங்கிக் கொண்டாள். செய்யாத தவறுக்கு அவர் குற்றம் சாட்டப்பட்டவராக தண்டனை அனுபவிக்க கூடியவராக மாற்றப்பட்டார். சிறைச்சாலையில் போடப்பட்டார். கர்த்தரோ யோசேப்போடு இருந்தார் என்று வேதம் சொல்லுகிறது.
என்றைக்கு விடுதலை என்று தெரியாவிட்டாலும் கர்த்தர் அவரோடு இருக்கிறார் என்ற விசுவாசத்தோடு அந்த இடத்தில் உண்மையுள்ளவராக காணப்பட்டார். குறிப்பிட்ட நாள் வந்தபோது கர்த்தர் அவருக்கு ராஜரிக வஸ்திரத்தை கொடுத்தார் கடைசிவரை யாரும் அதை பிடுங்கிக் கொள்ள முடியவில்லை. ராஜரிகம் பண்ணுகிறவராக முழு எகிப்து தேசத்திற்குமே அதிகாரியாக அவர் மாற்றப்பட்டார்.
யோசேப்பை போல உங்கள் வாழ்க்கையில் நீங்கள் பெற்றிருக்கக் கூடிய நன்மைகளை அநியாயமாக இழந்து போனவர்களைப் போல நீங்கள் காணப்பட்டாலும், என்ன இழப்புகள் உங்களுடைய வாழ்க்கையில் நேரிட்டிருந்தாலும் கர்த்தர் அனைத்தையும் கவனித்துக் கொண்டிருக்கிறார் நல்ல ஈவுகள் உங்களுடைய வாழ்க்கையிலே கடந்துவரும் யாரும் பறித்துக் கொள்ள முடியாதபடி சிறப்பு வாய்ந்த காரியங்களை கர்த்தர் உங்களுக்கு நல்ஈவாக தருவார்.
கர்த்தர் உங்களுக்கென்று வைத்திருக்கக்கூடிய உயர்வுகள் நிச்சயமாகவே ஏற்ற வேளையிலே நிறைவேறும். அதை கொடுக்கிறவர் கர்த்தராக இருக்கிறபடியினாலே அதை யாரும் உங்களிடத்தில் இருந்து பறித்துக் கொள்ள முடியாது.ஆகவே கர்த்தருக்கென்று பொறுமையோடு காத்திருங்கள். கர்த்தர் உங்களுக்கென்று ஆயத்தப்படுத்தி வைத்திருக்க கூடிய பெரிய உயர்வுகளை நிச்சயமாகவே பெற்றுக் கொள்வீர்கள்.
No comments:
Post a Comment