நான் உன்னை பேர் சொல்லி அழைத்து நீ என்னை அறியாதிருந்தும் உனக்கு நாமம் தரித்தேன்.
ஏசாயா 45:4
நாம் ஆண்டவரை மிகவும் நெருங்கி அறிந்திருக்காவிட்டாலும் கூட கர்த்தர் நம்மை அறிந்திருக்கிறவராக, நம்மை பெயர் சொல்லி அழைக்கிறவராக காணப்படுகிறார். மனிதர்களுடைய முகத்துக்கு முன்பாக அவர்களது பெயரை சொல்லி கூப்பிடக்கூடிய அநேகர் முதுகுக்குப் பின்பாக வேறு பலவற்றையும் சொல்லி அவர்களை அழைப்பதுண்டு. அவை பொதுவாக அந்த மனிதர்களை மட்டம் தட்ட கூடிய பெயராக, ஏதோ ஒரு குறையை சொல்லிக் காட்டக்கூடிய ஒரு பெயராக காணப்படும். ஆனால் நம்முடைய கர்த்தர் அவற்றுக்கு அப்பால் நம்மை விசேஷித்த பெயர் சொல்லி அழைக்கக் கூடியவராக காணப்படுகிறார்.
லூக்கா - 13:11 ல் - பதினெட்டு ஆண்டுகளாக பலவீனப்படுத்தும் ஆவியை கொண்ட ஒரு ஸ்திரீயை நாம் பார்க்க முடியும். அந்த ஸ்திரியினுடைய பெயர் அங்கு சொல்லப்படவில்லை. அந்த நற்செய்தியை எழுதிய சீஷன்கூட கண்டுபிடிக்க முடியாதபடி அவளுடைய பெயர் மறக்கப்பட்டு அவளுடைய பலவீனமே அவளுடைய அடையாளமாக மாறிப் போயிருந்தது.
18 ஆண்டுகளாக வேதனைப்படுத்திக் கொண்டிருக்கும் பிசாசின் கட்டுகள் ஒருபக்கம், உண்மையான பெயர் தெரியாத அளவுக்கு அவளுடைய வேதனையை அடையாளம் ஆக்கிய ஜனங்கள் ஒருபக்கம், மற்றொரு பக்கத்திலே ஓய்வு நாளிலே இந்த ஸ்திரியை இயேசு குணமாக்குவாரா ?அப்படியானால் எப்படியாகிலும் அவர் மீது நாம் குற்றம் சாட்ட வேண்டும் என்று சொல்லி பார்த்துக்கொண்டிருக்கக்கூடிய பரிசேயர்களின் கூட்டம் ஒரு பக்கம். இப்படி பலவிதமான சூழ்நிலைகளின் நடுவிலே இயேசுவும் அந்த ஸ்திரீயும் நின்று கொண்டிருந்தனர்.
இயேசு அந்த ஸ்திரியை குறித்து "இதோ சாத்தான் 18 வருஷமாய் கட்டி இருந்த ஆபிரகாமின் குமாரத்தியாகிய இவளை ஓய்வு நாளில் இந்த கட்டில் இருந்து அவிழ்த்து விட வேண்டியது இல்லையா?" என்று அவர்களுக்கு எதிராக ஒரு கேள்வியை முன்வைத்தார். பரிசேயர்கள் பதிலின்றி பரிதவித்துக் கொண்டிருந்தார்கள். உலகத்தின் பார்வையிலே அவள் ஒரு நிமிர்ந்து பார்க்கக்கூடாத கூனியாயிருக்கலாம், ஆனால் நம்முடைய கர்த்தரும் இரட்சிகரமாய் இருக்கிற இயேசு கிறிஸ்துவினுடைய பார்வையிலே அவள் ஆபிரகாமின் குமாரத்தியாக காணப்படுகிறார்.
உலகம் உங்களை பலவிதமான குறைகளை, பலவீனங்களை சொல்லி அடையாளப்படுத்த கூடும். ஆனால் நம்முடைய ஆண்டவர் உங்களைப் பார்த்து இவன் ஆபிரகாமின் குமாரன், இவன் என்னுடைய இரத்தத்தால் மீட்கப்பட்ட என்னுடைய பிள்ளை என்று உரிமை பாராட்டி அழைக்கிறவராக, உங்களை எல்லா நிந்தைக்கும் நீங்கலாக்கி விடுவிக்கிறவராக காணப்படுகிறார். ஆகவே கர்த்தர் உங்களைக் குறித்து என்ன சொல்லுகிறார் என்பதை கர்த்தருடைய வசனத்தின் மூலமாக தெரிந்து கொள்ளுங்கள். உலகம் உங்களைக் குறித்து சொல்ல கூடிய வசை மொழிகளை, ஏளனங்களை தூக்கி ஓரத்திலே போட்டு விடுங்கள். ஏனென்றால் ஆண்டவர் சொல்லுவது தான் நிறைவேறும், அதுதான் இறுதியானது, ஆகவே தைரியமாக இருங்கள் கர்த்தர் பெரிய காரியங்களை செய்வார்.
No comments:
Post a Comment