Sunday, January 29, 2023

எந்தப் பிரயாசத்துக்கும் பலன் உண்டு.! அவர் அளிக்கும் பலன் அவரோடே கூட வருகிறது.

....இதோ அவர் அளிக்கும் பலன் அவரோடே கூட வருகிறது; அவர் கொடுக்கும் பிரதிபலன் அவருடைய முகத்துக்கு முன்பாக செல்லுகிறது.  ஏசாயா 40:10

            பிரயாசப்படுகிற எல்லா மனிதர்களும் ஏதோ ஒரு பலனை எதிர்பார்த்து தான் பிரயாசப்படுகிறார்கள். ஒரு மரத்தை நடுகிறவர்கள் அந்த மரத்திலிருந்து ஒரு கனியை எதிர்பார்க்கிறார்கள். விதையை விதைக்கிறவர்கள் அறுவடையை எதிர்பார்க்கிறார்கள். எந்த பிரயாசங்களை மேற்கொண்டாலும் ஒரு குறிப்பிட்ட காலம் வரைக்கும் அதன் பலனை பெற்றுக் கொள்ளும்படி காத்திருக்க நேரிடுகிறது. 

             தேவனுடைய ஜனங்கள் பரலோக ராஜ்யத்திற்கென்று படக்கூடிய அனேக பிரயாசங்கள் மனித கண்களுக்கு நகைப்புக்குரிய காரியமாக காணப்படலாம். நோவா என்று ஒரு மனிதர் இருந்தார் அவர். அந்த காலகட்டத்திலே வாழ்ந்த எல்லா மனிதர்களையும்விட நீதிமானாக காணப்பட்டார். அந்த காலத்திலே இருந்த ஜனங்கள் தேவனை துக்கப்படுத்தக்கூடிய விதத்திலே அநேக காரியங்களை செய்தார்கள். ஆகவே தேவன் இந்த உலகத்தை அழிக்கும்படி முடிவு செய்தார். நோவாவை கூப்பிட்டு அநேக காரியங்களை அவர் சொன்னார். அதன்படி நோவா செயல்பட தொடங்கினார். 

            அவர் கொப்பேர் மரத்தினாலே ஒரு பேழையை உருவாக்கினார். சகல விதமான மிருகங்களையும் அந்த பேழைக்குள்ளாக அவர் சேர்த்துக் கொண்டார். தேவையான உணவுப் பொருட்களை எல்லாம் பேழைக்குள்ளே சேர்த்துக் கொண்டார். நோவாவின் செயல்கள்  மனிதர்களுடைய கண்களுக்கு முன்பாக வேடிக்கையாக வினோதமானதாக இருந்திருக்கும். ஒரு பைத்தியக்காரனை போல அநேகராலே பார்க்கப்பட்டிருந்திருப்பார் . ஆனால் அவர் கர்த்தர் சொன்ன காரியங்களை மாத்திரம் கருத்தாக செய்து கொண்டிருந்தார். குறிப்பிட்ட நாள் வந்தபோது நோவாவும் குடும்பத்தினரும் கர்த்தருடைய வார்த்தையின் படியே அந்த பேழைக்குள்ளாக ஏறிக் கொண்டார்கள். உலகம் முழுவதும் தண்ணீரால் நிரம்பத்தக்கதாக பேரழிவு உண்டானது. நோவாவும் குடும்பமும் அந்த பேழையிலிருந்த ஜீவஜந்துக்களும் மாத்திரம் உயிர் தப்பினார்கள். 

            இன்றைக்கும் கூட நம்முடைய செயல்கள் உலக பிரகாரமான மனிதர்களுடைய கண்களுக்கு முன்பதாக வேடிக்கை பொருளைப் போல காணப்படலாம். கர்த்தரை நோக்கி ஜெபிக்க கூடிய அனுபவம்; வேதத்தை அதிகமாக வாசித்து தியானிக்க கூடிய அனுபவம்; ஓய்வு நாட்களிலே நேரத்தை வீணாக செலவிடாமல் தேவனுடைய ஆலயத்திற்கு சென்று அவரை ஆராதிக்க கூடிய  அனுபவம். இப்படிப்பட்ட காரியங்கள் உலக வாழ்க்கையின் இன்பங்களை நுகரத்தெரியாத மனிதர்கள் என்று தேவனுடைய பிள்ளைகளை பார்த்து உலக மனிதர்கள் சொல்லத்தக்கதான சூழலை உருவாக்குகிறது. ஆனாலும் நீங்கள் இப்படிப்பட்ட காரியங்களை கேட்கும்போது நாம் திரும்பிப் பார்க்க வேண்டிய இடம் நோவாவின் வரலாறு.

             அன்றைய நோவா தாத்தாவைப் போல நம்முடைய செயல்கள் இன்றைக்கு நாம் பேழையை கட்டிக் கொள்ளக்கூடிய ஒரு அனுபவமாக இருக்கிறது. நாள் ஒன்று வரும் அந்த நாளிலே நாம் இன்று பட்ட பிரயாசங்கள் நம்மை நித்திய நியாயத்தீர்ப்புக்கு விலக்கி மீட்டுக் கொள்ளக் கூடியதாக காணப்படும். ஆகவே சபை கூடி விடுதலை சிலர் விட்டு விடுகிறது போல நாமும் விட்டு விடாமல் ஒருவருக்கொருவர் புத்தி சொல்லக்கடவோம். நாம் இன்று கர்த்தருக்கு என்று செய்யக்கூடிய காரியங்களின் பலனை உணராவிட்டாலும் கூட நிச்சயமாகவே ஆபத்து காலங்களிலே கர்த்தருடைய பாதுகாப்பு நம்மை காக்கக்கூடியதாக இருக்கும் ஆகவே உலக கவலைகளை மறந்து தைரியமாக கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம். கர்த்தர் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக.

No comments:

Post a Comment

உங்களுக்கு எதிரானவர்கள் சத்தியத்துக்கு எதிரானவர்கள்.!

சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கிவைக்கிற மனுஷருடைய எல்லாவித அவபக்திக்கும் அநியாயத்துக்கும் விரோதமாய், தேவகோபம் வானத்திலிருந்து வெளிப்படுத்தப்...