கொடூரமானவர்களின் சீறல் மதிலை மோதியடிக்கிற பெருவெள்ளத்தை போல் இருக்கையில் நீர் ஏழைக்கு பெலனும் நெருக்கப்படுகிற எளியவனுக்கு திடனும் வெயிலுக்கு ஒதுங்கும் நிழலுமானீர். ஏசாயா -25 :4
வானத்தை பூமியையும் சகலத்தையும் சர்வ வல்லமையுள்ள தேவன் துன்பப்படுகிற பிள்ளைகளுக்கு பெலனாக திடனாக வெயிலுக்கு ஒதுங்கும் நிழலாக இருக்கிறார் என்றால் எவ்வளவு பெரிய பாதுகாப்புக்கு உள்ளாக அவர்கள் இருக்கிறார்கள் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும் . ஆகவே அய்யோ எல்லாரும் எதிராக இருக்கிறார்களே என்றெல்லாம் எண்ணி அங்கலாக்க வேண்டியதில்லை. கர்த்தர் உங்களுக்கு பாதுகாப்பு அரணாக காணப்படுகிறார்.
இஸ்ரவேல் தேசத்தின் எல்லைகளில் எல்லாம் ஓடி ஓடி ஒளிந்து சோர்ந்து போனவனாக பெலிஸ்தியரின் தேசத்து காத்தின் ராஜாவின் இடத்தில் சென்று அடைக்கலம் புகுந்தார். காத்தின் ராஜாவாகிய ஆகீஸ் அவருக்கு சிக்லாக் என்னும் பகுதியை குடியிருக்கும் படி கொடுத்தார். வெகு நாட்கள் நன்றாக சென்று கொண்டிருந்தது குறிப்பிட்ட ஒரு சூழ்நிலையிலே தாவீது காத்தின் ராஜாவை சந்திக்கச் சென்று திரும்பி வந்து பார்க்கும்போது சிக்லாக் சுட்டெரிக்கப்பட்டதாக அதில் உள்ள அனைத்து பொருட்களும் கொள்ளையிடப்பட்டதாக தாவீது மற்றும் அவரது மனிதர்களுடைய குடும்பத்தினர் குழந்தைகள் அனைவரும் சிறைபிடிக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டிருப்பதை கண்டு அதிர்ந்து போனார்கள். தாவீதுக்கு என்ன பிரச்சனையோ அதே பிரச்சினை தான் தாவீதோடு கூட இருந்த 600 பேருக்கும் காணப்பட்டு இருக்கும் ஆனால் அவர்கள் எல்லாம் தாவீதுக்கு எதிராக முறுமுறுக்கக் கூடியவர்களாக தாவீதை கல்லறிய வேண்டும் என்று ஆலோசனை செய்பவர்களாக மாறி போனார்கள்.
சில சூழ்நிலைகள் எப்பேர்பட்ட நண்பர்களையும் பகைவர்களாக மாற்றி விடக் கூடியது எப்பேர்பட்ட உறவினர்களையும் விரோதிகளாக மாற்றி விடக் கூடியது. இங்கே 600 பேர் ஒருமித்து தாவீதுக்கு எதிராக எழும்பி இருக்கிறார்கள். தாவீது தனி ஒருவனாக அவர்கள் நடுவிலே காணப்படுகிறார். தாவீதோடிருந்த 600 பேரும் இஸ்ரவேலின் பிரமுகர்களோ பிரபுக்கள் வம்சத்தை சார்ந்தவர்களோ அல்லர். அவர்கள் ஒடுக்கப்பட்டவர்களாக கடன்பட்டவர்களாக இஸ்ரேலில் தேசத்துக்குள்ளே குடியிருக்க முடியாதவர்களாக தாவீதோடு கூட சேர்ந்து கொண்டவர்கள். ஆனால் சூழ்நிலை தாவீதிடத்தில் இருந்து பெற்ற நன்மைகளை எல்லாம் மறக்க பண்ணி அவர்களை சத்துருக்களாக மாற்றிவிட்டது.
யாரோ சிலர் நமக்கு எதிராக எழும்புகிறார்கள் என்பதெல்லாம் நம்மை பெரிய அளவில் பாதிப்பதில்லை ஆனால் நாம் நம்பியிருக்கக்கூடிய நம்மை நேசிக்க கூடிய மனிதர்கள் நமக்கு எதிராக எழும்புவது நம்மை மிகவும் சோர்வடையச் செய்வதாகக் காணப்படும். இந்த இக்கட்டான சூழ்நிலையிலே தாவீது தன்னை கர்த்தருக்குள் திடப்படுத்திக் கொண்டார். அவ்வளவுதான் கல்லெறிந்து கொல்ல வேண்டும் என்றெல்லாம் தாவீதுக்கு எதிராக ஆலோசனை பண்ணிக் கொண்டிருந்த மனிதர்கள் தாவீதோடு கூட சேர்ந்து சத்துருக்களை பின்தொடர்ந்து செல்ல துவக்கினார்கள். அவர்கள் இழந்த அனைத்தையும் திருப்பிக் கொண்டார்கள்.
பெருவெள்ளத்தைப் போல உங்களை மோதி அடிக்கக்கூடிய சூழ்நிலைகள், சுற்றி இருக்கக்கூடிய அனைவருமே சத்துருக்களாக மாறக்கூடிய சூழ்நிலைகளின் வழியாக கூட நீங்கள் கடந்து போனாலும் கர்த்தரை மட்டுமே நோக்கி பாருங்கள். அவர்கள் அவரை நோக்கி பார்த்து பிரகாசம் அடைந்தார்கள் என்று வேதம் சொல்லுகிறது.
No comments:
Post a Comment