மனுஷனுடைய இருதயத்தின் எண்ணங்கள் அநேகம்;
ஆனாலும் கர்த்தருடைய யோசனையே நிலை நிற்கும்.
நீதிமொழிகள் 19:21
மனிதர்கள் ஒவ்வொருவரும் தங்களை குறித்தும் தாங்கள் சார்ந்த மற்றவர்களை குறித்தும் பல விதமான எண்ணங்களை வைத்திருப்பார்கள். சிலர் மற்றவர்களுடைய உயர்வுக்கு ஏதுவான எண்ணங்களை மனதில் வைத்துக் கொண்டிருக்கக் கூடிய நேரத்தில் வேறு சிலர் எப்படி தீங்கு செய்வது என்பதான கொடிய எண்ணங்களோடும் காணப்படுகின்றனர். கர்த்தருடைய யோசனையே நிலைநிற்கும் என்று வேதம் சொல்லுகிறது. கர்த்தருடைய யோசனைகளுக்கு விரோதமாக சுய திட்டங்களை முன்னிறுத்தக்கூடியவர்கள் தங்களை அறியாமலே தங்களுக்கு பெருத்த அழிவையும் இழப்புகளையும் ஏற்படுத்திக் கொள்கின்றனர்.
அப்போஸ்தலனாகிய பவுல் ராயனுக்கு முன்பாக நிற்க வேண்டும் என்பது தேவனுடைய சித்தமாக இருந்தது. அவர் ஒரு நூற்றுக்குஅதிபதியின் தலைமையில் கப்பலில் இத்தாலியாவை நோக்கி கொண்டுசெல்லப்பட்டுக் கொண்டிருந்தார். அவர் அந்த கப்பலில் இருந்தவர்களுக்கு தேவனுடைய ஆலோசனையை தெரிவித்தார். மனுஷரே இந்த யாத்திரையினாலே சரக்குக்கும் கப்பலுக்கு மாத்திரமல்ல நம்முடைய ஜீவனுக்கும் வருத்தமும் மிகுந்த சேதமும் உண்டாயிருக்கும் என்று காண்கிறேன் என்பதாக அந்த எச்சரிக்கை இருந்தது.
ஆதி கிறிஸ்தவர்களுக்கும் நமக்கும் தான் பவுல் ஒரு மிகப்பெரிய அப்போஸ்தலர். நூற்றுக்கு அதிபதிக்கும் கப்பல் எஜமானுக்கும் மாலுமிக்கும் எல்லாம் அவர் ஏதோ ஒரு சாதாரண கைதி தானே!. தேவனுடைய ஆலோசனை, கர்த்தருடைய எச்சரிப்பு புறக்கணிக்கப்பட்டது. கப்பல் எஜமான் மற்றும் மாலுமின் யோசனையின்படி அவர்கள் முன்னேறிச் செல்ல தொடங்கினார்கள். சிறிது நேரத்தில் யூரோகிலிதோன் என்னும் கொடுங்காற்று அந்த கப்பலில் மோதியது. கப்பலில் இருந்தவர்கள் மரண பயத்தினால் நிறைந்தவர்களாக, நடுக்கத்தோடும், திகிலோடும் உணவு கூட அருந்தாமல் நடுங்கிக் கொண்டிருந்தார்கள். தேவனுடைய யோசனைக்கு எதிரான ஒரு யோசனை அந்த யோசனை கூறின மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் கப்பலில் இருந்த அனைவருக்கும் ஆபத்தாக முடிந்தது.
அந்த நேரத்தில் பவுல் எழுந்து அனைவருக்கும் ஆறுதலையும் தைரியத்தையும் கொடுக்கக்கூடிய வார்த்தைகளை சொன்னார். காரணம் என்ன? கர்த்தருடைய தூதன் ராத்திரியிலே பவுலை சந்தித்து பவுலே பயப்படாதே , நீ ராயனுக்கு முன்பாக நிற்க வேண்டும். இதோ உன்னுடனே கூட யாத்திரைப் பண்ணுகிற யாவரையும் தேவன் உனக்கு தயவு பண்ணினார் என்றான்.
கர்த்தருடைய வார்த்தையின் படியே கப்பல் ஒரு தீவின் அருகாமையில் சென்று தரைதட்டியது. பலத்த அலைகளினாலே கப்பலின் ஒரு பகுதி உடைந்து போனது. அதில் இருந்த பயணிகள் பவுல் உட்பட அனைவரும் தீவில் கரைஏறி தங்களை காப்பாற்றிக் கொண்டார்கள். தேவனுடைய ஆலோசனையை புறக்கணித்து தன்னுடைய ஆலோசனையின் படி செயல்பட முடிவெடுத்த கப்பல் எஜமான் தன் கப்பலை இழந்து நிராதரவாக நின்று கொண்டிருந்தார். அங்கிருந்து சில காலங்களுக்குப் பின்பு பவுல் வேறு கப்பலில் ஏறி ரோமை நோக்கி சென்றார். அவர் வெற்றிகரமாக தேவன் தனக்கு நிர்ணயித்து வைத்திருந்த அந்த இலக்கை அடைந்தார். தேவனுடைய திட்டம் நிறைவேறியது.
உங்களுடைய சூழ்நிலைகளை பார்த்து ஐயோ! கர்த்தருடைய யோசனை என்னுடைய வாழ்க்கையில் நிறைவேற முடியாதபடி அனேகர் தடையாக இருக்கிறார்கள். மற்றவர்களுடைய தவறான முடிவுகளால் நான் பாதிப்படைந்து கொண்டிருக்கிறேனே என்றெல்லாம் எண்ணி கலங்காதிருங்கள். தைரியமாக கர்த்தரை நோக்கிப் பாருங்கள் கர்த்தர் உங்களுக்காக தன்னுடைய கிரியைகளை வெளிப்படுத்துவார். நிச்சயமாகவே கர்த்தர் உங்களுக்கு என்று வைத்திருக்கக்கூடிய உயர்வுகளை அடைவீர்கள்.
No comments:
Post a Comment