கர்த்தாவே உம்முடைய வழிகளை எனக்குத் தெரிவியும்; உம்முடைய பாதைகளை எனக்கு போதித்தருளும்.
சங்கீதம் 25 :4
சேனைகளின் கர்த்தரை நோக்கி பக்தன் தாவீது ஏறெடுக்கும் ஒரு விண்ணப்பமாக இந்த வசனம் காணப்படுகிறது. கர்த்தருடைய வழிகள் ஆச்சரியமானவைகள்; அவை மனித சிந்தைக்கு அப்பாற்பட்டவைகள்; திசை தெரியாமல், முன்னேற வழி தெரியாமல் அங்கலாய்த்துக் கொண்டிருக்கும் தம்முடைய பிள்ளைகளுக்கு அவை காரிருளில் வெளிச்சம்போல நம்பிக்கை தரக்கூடியவை; கண்ணீரைத் துடைத்து ஆறுதல் தரக்கூடியவை.
இஸ்ரவேல் ஜனங்கள் 400 ஆண்டு அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டவர்களாக கானானை நோக்கி சென்று கொண்டிருந்தார்கள். விடுதலை கொடுத்து விட்டாலும் கூட பார்வோனால் அந்த விடுதலையை சகித்துக் கொள்ள முடியவில்லை. அடிமைகள் சென்று விட்டால் இனி யார் சம்பளம் இன்றி கடினமான வேலைகளை செய்வார்? அடிமைகள் தங்களுக்கென்று ஒரு ராஜ்ஜியத்தை உருவாக்கி அதில் சந்தோஷமாக சுதந்திரமாக வாழ்வதா? என பல்வேறு கேள்விகள் அவரது மனதை துளைத்தெடுத்தது. அடிமைகளிடத்தில் ஏது ஆயுதம் ? அடிமைகளுக்கு ஏது போர் பயிற்சி? ஆகவே நிச்சயமாகவே மேற்கொண்டு விடலாம் என்று எண்ணி இஸ்ரவேல் ஜனங்களை பின்தொடர்ந்து செல்ல முடிவு செய்தார். ஆனால் அவர் சிந்திக்க மறந்த ஒரு காரியம் இருந்தது.இஸ்ரவேல் ஜனங்கள் தங்களுக்கென்று தாங்கள் ஏற்படுத்திக் கொண்ட பாதையில் செல்லவில்லை. மாறாக கர்த்தர் காட்டின வழியில் கானானை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள் என்பதே அது.
பார்வோனும் சேனையும் இஸ்ரவேலை நெருங்கினது. முன்னால் செங்கடல், பின்னால் பார்வோனும் சேனையும் என்ற இக்கட்டான நிலையில் காணப்பட்டார்கள். ஆண்டவர் தங்களுக்கு அடுத்து என்ன செய்யப் போகிறார் என்பதை அறியாததினாலே அவர்கள் கலங்கிப் போயிருந்தார்கள். மோசே கர்த்தரை நோக்கி கூப்பிட்டார். கர்த்தர் காட்டின பாதையில் நடந்து கொண்டிருந்த ஜனங்களுக்காக உலகம் தோன்றினது முதல் நடக்காத பெரிய அற்புதத்தை அவர்கள் கண்களுக்கு முன்பாக கர்த்தர் செய்தார். செங்கடல் இரண்டாகப் பிளந்து அவர்களுக்கு வழி கொடுத்தது. அவர்கள் மறுகரையை அடைந்தார்கள்.
கர்த்தர் காட்டும் பாதையிலே; வசனம் காட்டும் பாதையிலே; நீதியில் பாதையிலே நடக்கும் தம்முடைய பிள்ளைகளுக்கு வழிகாட்ட எப்போதும் கர்த்தர் அவர்கள் மீது கண்ணோட்டமாக இருக்கிறார். எப்படிப்பட்ட பார்வோனின் சேனை உங்களை பின் தொடர்ந்தாலும், எப்படிப்பட்ட செங்கடல்கள் உங்களுக்கு எதிராக நின்று கொண்டு இருந்தாலும் நீங்கள் கர்த்தரை நோக்கி கூப்பிடுங்கள். அவர் தமது வழிகளை உங்களுக்குத் தெரிவிப்பார் பாதைகளை காட்டுவார்.
No comments:
Post a Comment