Saturday, January 21, 2023

கிபியோனியர்களுக்கும் நியாயம் செய்த கர்த்தர்.!

            கர்த்தர் நியாயம் செய்கிற தேவன். ஐயோ! எனக்கு நீதி மறுக்கப்படுகிறதே! நான் அநியாயமாக துன்பப்படுத்தப்பட்டு கொண்டிருக்கிறேனே! நிந்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறேனே! என்று கலங்கிக்கொண்டு இருக்கிறீர்களா? தைரியமாக இருங்கள். கர்த்தர் உங்களுக்கு நியாயம் செய்வார்.

            இஸ்ரவேல் தேசத்தில் கிபியோனியர்கள் என்ற சிறு கூட்டம் ஜனங்கள் வெகு காலமாக வசித்து வந்தார்கள். அவர்கள் இஸ்ரவேலர்கள் அல்ல. இஸ்ரவேலின் தேவனை ஆராதிக்க கூடியவர்களும் அல்ல. ராஜாவாகிய சவுலின் காலகட்டத்தில் அவர்கள் மிகக்கடினமாக நடத்தப்பட்டனர். அவர்களில் அநேகர் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். விளைவு, இஸ்ரவேல் தேசத்திலே கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. அநீதி செய்த சவுலின் குடும்பத்தார் தண்டிக்கப்படும் வரை பஞ்சம் தேசத்தில் நீடித்தது.

தான் அபிஷேகித்த சவுல் என்றோ தான் தெரிந்து கொண்ட இஸ்ரவேல் ஜனங்கள் என்றோ கர்த்தர் பாரபட்சம் பார்க்கவில்லை. தேவனை அறியாத, அவரை ஆராதிக்காத, ஒரு சிறு கூட்டம் ஜனங்களுக்காக தன் சொந்த ஜனமாகிய இஸ்ரவேலர்களிடத்திலேயே நியாயம் விசாரித்த தேவன்; இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினாலே மீட்கப்பட்ட தேவனுடைய பிள்ளைகளாக மாற்றப்பட்டு இருக்கக்கூடிய உங்களுக்கும் எனக்கும் நியாயம் செய்யாமல் இருப்பாரா? நிச்சயமாய் செய்வார். ஆண்டவர் இரக்கம் உள்ள தேவனே தவிர அநீதிக்கு துணை நிற்கக்கூடிய தேவன் அல்ல.

 அவர் (கர்த்தர்) பட்சபாதம் பண்ணுகிறவரும் அல்ல. பரிதானம் வாங்குகிறவரும் அல்ல. என்று உபாகமம் 10 :13 இல் நாம் காண முடியும். வெள்ளை அங்கி போட்ட ஐயா ஆயிற்றே; வாத்தியக்கருவிகளை இசைத்து பாடுகிறவர் ஆயிற்றே; ஒழுங்காக சபைக்கு வருகிறவர் ஆயிற்றே; அதிகமாக காணிக்கை போடுகிறவர் ஆயிற்றே என்றெல்லாம் கர்த்தர் வித்தியாசம் பார்ப்பதில்லை. யாராக இருந்தாலும் அவர் நீதியுள்ள நியாயாதிபதியாக இருக்கிறார். அவரை ஆராதிக்க கூடியவர்களாக இருந்தாலும் ஆராதிக்காதவர்களாக இருந்தாலும் கர்த்தர் நீதியாக நியாயம் தீர்க்கக்கூடிய தேவன். நீங்கள் யாராக இருந்தாலும் ஒடுக்கப்படுகிறவர்களாக நீதி மறுக்கப்பட்டவர்களாக காணப்படுவீர்களேயானால் கர்த்தர் உங்களுக்கு நியாயம் செய்யக் கூடியவராக இருக்கிறார்.

        லூக்கா-18: 7,8 வசனங்களில் இயேசு கிறிஸ்து சொல்லுகிறார், "அந்தப்படியே தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுபவர்களாகிய தம்மால் தெரிந்து கொள்ளபட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயம் செய்யாமல் இருப்பாரோ? சீக்கிரத்திலே அவர்களுக்கு நியாயம் செய்வார்".

No comments:

Post a Comment

உங்களுக்கு எதிரானவர்கள் சத்தியத்துக்கு எதிரானவர்கள்.!

சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கிவைக்கிற மனுஷருடைய எல்லாவித அவபக்திக்கும் அநியாயத்துக்கும் விரோதமாய், தேவகோபம் வானத்திலிருந்து வெளிப்படுத்தப்...