Sunday, January 22, 2023

துன்பத்தின் மத்தியிலும் உங்கள் தகுதியை உயர்த்திக்கொள்ளுங்கள்.!

            உரிய முக்கியத்துவம் அளிக்கப்படாத போது; புறக்கணிக்கப்படுவதாக, துன்பப்படுத்தப்படுவதாக உணரும்போது; சோர்ந்து போய் விடுவது மனித இயல்பு. நம்முடைய தேவன் சோர்ந்து போகிறவர்களுக்கு பெலன் அளித்து சத்துவம் இல்லாதவர்களுக்கு சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறவர்.

            புறக்கணிப்புகளை, துன்பங்களை எப்படி கையாள வேண்டும்? என்பதை வேதம் நமக்கு நன்கு கற்றுத் தருகிறது. 

            தாவீதின் சகோதரர்களில் பலர் ராணுவத்திலும் மற்ற பல வேலைகளிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது, தாவீது மட்டும் வனாந்தரத்திலே ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். ராஜாவை விட மதிக்கப்படக்கூடிய சாமுவேல் தீர்க்கதரிசி, ஈசாயின் வீட்டுக்கு வந்தபோது, தாவீது என்று ஒரு குமாரன் இருக்கிறார் என்பதையே மறந்து விட்டவர்களாக அவரது பெற்றோரும் சகோதரர்களும் காணப்பட்டனர். அபிஷேகிக்கப்பட்ட பின்பும் கூட குறிப்பிட்ட காலம் வரை அவரை ஆட்டுமந்தையிலே தான் நாம் பார்க்க முடிகிறது.

            பொதுவாக பலர் புறக்கணிப்புகள், தோல்விகள் போன்ற கடந்தகால கசப்பான அனுபங்களைை நினைத்து, தங்களது நிகழ்காலத்தில் செய்ய வேண்டிய காரியங்களை செய்யாமல் சோர்ந்து போனவர்களாக; தங்களை தாங்களே வருத்திக் கொள்கிறவர்களாக; வேதனைப்படுபவர்களாக மாறிவிடுகின்றனர்.  தாவீதை குறித்து நாம் பார்க்கும் போது அவர் எதைக்குறித்தும் கவலைப்படாமல் தன்னுடைய பொறுப்புகளை சரியாக நிறைவேற்றுகிறவராக காணப்பட்டார்.  ராஜ சமூகத்திலே இருக்கக்கூடிய ராஜாவின் ஊழியக்காரன்  "இதோ பெத்லகேமியனான ஈசாவின் குமாரன் ஒருவனை கண்டிருக்கிறேன் அவன் வாசிப்பதில் தேறினவன், அவன் பராக்கிரமசாலி, யுத்த வீரன், காரியசமர்த்தன், சவுந்தரியமுள்வன், கர்த்தர் அவனோடேகூட இருக்கிறார் என்று சொல்லத் தக்கதாக அவருடைய திறமைகள் வளர்ந்திருந்தது. ஆட்டு மந்தையிலிருந்து நேரடியாக ராஜ அரண்மனைக்கு செல்லக் கூடியவராக ஆண்டவர் அவரை நொடி பொழுதில் மாற்றினார்.

         ஆடு மேய்க்கக்கூடிய ஒரு மனிதர் இவ்வளவு திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியமா என்று யோசித்தால் ஆச்சரியமாக இருக்கும்.!  நீங்கள் இன்று இருக்கிற சூழ்நிலைகளைப் பார்த்து சோர்ந்து போகாதீர்கள். காலத்தை சரியாக பிரயோஜனப்படுத்திக் கொள்ளுங்கள். பெரிய காரியங்களை; நன்மைகளை; உயர்வுகளைை நிச்சயமாய் நீங்கள் கண்டடைவீர்கள்.

எபேசியர் -5:16 "நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக் கொள்ளுங்கள்." 

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

No comments:

Post a Comment

உங்களுக்கு எதிரானவர்கள் சத்தியத்துக்கு எதிரானவர்கள்.!

சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கிவைக்கிற மனுஷருடைய எல்லாவித அவபக்திக்கும் அநியாயத்துக்கும் விரோதமாய், தேவகோபம் வானத்திலிருந்து வெளிப்படுத்தப்...