தன் சொந்த சகோதரர்களால் 20 வெள்ளிக்காசுக்கு விற்கப்பட்ட யோசேப்பு அடிமையாக எகிப்துக்கு கொண்டு செல்லப்பட்டார். சொப்பனக்காரன் யோசேப்பின் சொப்பனம் எப்படி முடியும் பார்ப்போம் என்று ஏளனம் செய்தவர்களாக; ஐயோ! யோசேப்புக்கு இப்படி துரோகம் செய்கிறோமே என்ற எண்ணம் சிறிதும் இல்லாதவர்களாக; அவரது சகோதரர்கள் கடந்து சென்றார்கள். மறுபக்கத்தில் யோசேப்பு தன் தகப்பன் வீட்டை குறித்த நினைவுகளோடு; வேதனைகளோடு; எதிர்காலத்தை குறித்த நிச்சயமற்றவனாக; ஒரு அடிமையாக; தன்னை விலை கொடுத்து வாங்கின மனிதர்களோடு எகிப்தை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார்.
காலங்கள் மாறினது. கர்த்தர் யோசேப்போடு இருந்தார். அவர் ஆசீர்வதிக்கப்பட்டார். யோசேப்பை பொறுத்தவரையில் அவருடைய துக்கம் நீங்கி அவர் ஆறுதல் அடைந்தார். சொப்பனக்காரன் என்று ஏளனம் செய்யப்பட்ட யோசேப்புக்கு, சொப்பனத்தின் நிமித்தமாகவே அடிமையாக விற்கப்பட்ட யோசேப்புக்கு, சொப்பனத்தை கொடுத்த தேவன், அவன் கடந்து வந்த பாதைகளை மறக்கவில்லை.
தேசத்திலே கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. எந்த பாதை வழியாக யோசேப்பு அடிமையாக , ஆதரவற்றவனாக நடந்து சென்றாரோ; அதே பாதை வழியாக யோசேப்பினிடத்தில் தானியம் கொள்ளும்படி அவரது சகோதரர்கள் கானானில் இருந்து எகிப்தை நோக்கி கடந்து வந்தார்கள். இவர்தான் யோசேப்பு என்பதை அறியாதவர்களாக முகங்கு பெற தரையிலே விழுந்து அவரை வணங்கினார்கள். அவரிடத்தில் ஆகாரம் வாங்கி தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ளக்கூடியர்களாக மாறிப்போனார்கள். அன்பான சகோதரனே சகோதரியே உங்கள் கண்ணீர் அவருடைய துருத்தில் இருக்கிறது அவர் உங்களையும் நீங்கள் பட்ட துன்பங்களையும் நினைவு கூருகிற தேவன்.
வெளி-22:12 "இதோ, சீக்கிரமாய் வருகிறேன், அவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது."
No comments:
Post a Comment