தீமை செய்கிறவர்களுடைய பேரை பூமியில் இராமல் அற்றுப்போக பண்ண கர்த்தருடைய முகம் அவர்களுக்கு விரோதமாய் இருக்கிறது.
சங்கீதம் 34:16
தீமை என்ற சொல் எல்லா மனிதர்களுக்கும் மிகவும் நன்றாக அறிமுகமான ஒரு சொல். அனேகர் மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்க கூடிய செயல்களை துணிந்து செய்கிறவர்களாக காணப்படுகின்றனர். கர்த்தருடைய பிள்ளைகளுடைய வாழ்க்கையிலே தேவனுடைய சித்தத்துக்கு விரோதமான காரியங்களை திணிக்க கூடியவர்கள் மனிதர்களுடைய பார்வையில் மட்டுமல்ல கர்த்தருடைய பார்வையிலும் கூட தீமை செய்கிறவர்களாக காணப்படுகின்றனர். தீமை செய்கிறவர்களுடைய பேரை பூமியில் இராதபடி அற்றுப்போக பண்ண கர்த்தருடைய முகம் அவர்களுக்கு விரோதமாய் இருக்கிறது.
ஏரோது ராஜா சபையில் சிலரை துன்பப்படுத்த தொடங்கினார். அப்போஸ்தலன் யாக்கோபை அவர் பட்டயத்தினாலே கொலை செய்தார். அது யூதர்களுக்கு மகிழ்ச்சி அளிக்க கூடிய செயலாக இருந்தபடியால் பேதுருவையும் கொலை செய்ய வேண்டும் என்று அவைரை பிடித்து சிறைச்சாலையிலே போட்டார். அன்பான கர்த்தருடைய ஜனமே.! ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ஆண்டவர் ஒவ்வொரு விதமான திட்டங்களை வைத்திருக்கிறார். உங்கள் வாழ்க்கையில் நீதி நேர்மையோடு நல்ல ஒரு தொழிலை செய்யக்கூடியது ஆண்டவருடைய திட்டமாக இருக்கலாம். கல்வி கற்று உயர்ந்த நிலையிலே தேவனுக்கு நற்சாட்சி பகரக்கூடியவர்களாக நீங்கள் காணப்படுவது ஆண்டவருக்கு சித்தமாக இருக்கலாம். ஆனால் அப்போஸ்தலர்களை பொறுத்தவரை தேவனுக்கென்று பாடுகளை அனுபவிப்பது தேவனுடைய திட்டமாக இருந்தது.
யாக்கோபை பொருத்தவரை ஏரோதால் கொல்லப்படுவது தேவனுடைய சித்தமாக இருந்திருக்கலாம். பேதுருவைப் பொறுத்தவரை அவர் ரத்த சாட்சியாக மரிப்பது தேவனுடைய சித்தமாக இருந்த போதிலும் அதற்கான நேரமும் காலமும் வராதபடியினாலே ஏரோதின் செயல் தேவனுக்கு விரோதமான செயலாக, அது ஒரு தீமையாக காணப்பட்டது. ஆகவே தேவன் தன்னுடைய தூதனை அனுப்பி பேதுருவை விடுதலை செய்தார்.
ஏரோது தேவனுடைய சித்தத்துக்கு விரோதமாக செயல்படுபவராக மட்டுமல்லாமல் தேவனுக்கு மகிமை செலுத்தாதவராகவும் தேவனுக்குரிய மகிமையை எடுத்துக் கொள்பவராகவும் காணப்பட்டார். ஆகவே குறுகிய காலத்துக்குள் தேவதூதனால் அடிக்கப்பட்டவனாக புழு புழுத்து செத்தான்.
பிரியமானவர்களே உங்களுக்கு விரோதமாக எத்தகைய தீமைகள் துன்மார்க்கரால் ஏற்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தாலும் கர்த்தர் உங்களை பாதுகாக்கிறவராக, துன்மார்க்கருக்கு விரோதமாக யுத்தம் செய்கிறவராக காணப்படுகிறார். ஆகவே கலங்காதீர்கள் தைரியமாக இருங்கள். கர்த்தர் பெரிய காரியங்களை செய்வார்.
No comments:
Post a Comment