அந்தப்படியே: இதோ, தெரிந்துகொள்ளப்பட்டதும் விலையேறப்பெற்றதுமாயிருக்கிற மூலைக்கல்லை சீயோனில் வைக்கிறேன்;அதின்மேல் விசுவாசமாயிருக்கிறவன் வெட்கப்படுவதில்லை.
1பேதுரு 2:6
அனேக மனிதர்கள் தங்களுடைய வாழ்க்கையில் ஏதோ ஒரு விதத்திலே உதவி செய்த மனிதர்களை நேசிக்கிறார்கள், அவர்கள் மீது விசுவாசம் வைக்கிறார்கள். இன்னும் சிலர்: இந்த மனிதர், இந்த நண்பர், இந்த உறவினர் எனக்கு உதவி செய்வார், எனது இக்கட்டிலே எனக்கு உறுதுணையாக இருப்பார் என்றெல்லாம் பலவிதமாக சிலரைக் குறித்து நம்புகின்றனர். சில நேரங்களில் அவர்கள் நம்பிக்கைகள் பொய்த்துப் போகும் போது மனதுடைந்தவர்களாக சோர்ந்து போகிறவர்களாக காணப்படுகிறார்கள். யார் உங்களுக்கு உதவி செய்தாலும், நீங்கள் மகிழத்தக்க விதத்திலே நடந்து கொண்டாலும், உங்களை யார் மதிப்பதாக நீங்கள் நம்பிக் கொண்டு இருந்தாலும் உங்களது நம்பிக்கை கர்த்தர் மேல் மட்டுமே இருப்பதாக.
பவுலும் பர்னபாவும் லீஸ்திரா பட்டணத்தில் ஊழியம் செய்துகொண்டிருந்தபோது பிறந்தது முதல் ஊனமுற்றவராக இருந்த மனிதர் குதித்தெழுந்து நடந்தார். ஜனங்கள் இதைக் கண்டு மிகவும் ஆச்சரியப்பட்டார்கள். அவர்கள் பவுலையும் பர்னபாவையும் சூழ்ந்து கொண்டார்கள். கடவுள்கள் மனித வடிவம் எடுத்து நம் நடுவில் இறங்கி இருக்கிறார்கள் என்று உரக்கக் கத்தினார்கள். பவுலை மெர்க்குரி என்றும் பர்னபாவை யூபித்தர் என்றும் அவர்கள் நம்பினார்கள். பட்டணத்து வாசலில் இருந்த யூபித்தர் கோவிலின் பூஜாசாரி எருதுகளோடும் மாலைகளோடும் அவர்களுக்கு பலிசெலுத்த தயாராக இருந்தார். நாங்கள் உங்களைப் போன்ற சாதாரண மனிதர்கள் தான்; இயேசு கிறிஸ்துவே மெய்யான தேவன்;அவர் மூலமாகவே இத்தகைய அற்புதங்கள் நடக்கிறது என்பதை அந்த ஜனங்களுக்கு புரிய வைக்க அவர்கள் வெகு பாடுபட வேண்டியிருந்தது.
பவுலும் பர்னபாவும் அந்த பட்டணத்திலே மதிக்கப்பட தக்கவர்களாக காணப்பட்டனர். தங்கு தடையின்றி சுவிசேஷம் பிரசங்கிக்கப்பட்டது. அநேக பட்டணங்களுக்கு அவர்கள் செல்லும்போது அவர்களுக்கு எதிர்ப்பு எழும்புவது வழக்கம் ஆனால் இங்கு அவர்கள் சென்றபோது அவர்களை மதிக்கிறவர்களாக பட்டணத்து ஜனங்கள் காணப்பட்டனர். அந்தியோக்கியா, இக்கோனியா பட்டணத்தை சார்ந்த சில யூதர்கள் அந்த பட்டணத்துக்கு கடந்து வந்தார்கள். அவர்கள் ஜனங்களோடு பேசினார்கள். அவ்வளவுதான் சூழ்நிலை அப்படியே மாறிப் போனது. எந்த பட்டணத்து ஜனங்கள் அப்போஸ்தலர்களை கடவுள்கள் என்று நினைத்தார்களோ அதே பட்டணத்தில் பவுல் கல்லறியப்பட்டு மரித்துப் போனார் என்று எண்ணப்பட்டவராக மிருகத்தைப் போல பட்டணத்துக்கு வெளியே இழுத்துச் செல்லப்பட்டார்.
யாரோ நமக்கு விரோதமாக எழும்புகிறார்கள்; யாரோ நமக்கு விரோதிகளாக இருக்கிறார்கள் என்பது அதிகமாக நம்மை காயப்படுத்தாது. நம்மை நேசித்தவர்கள் நமக்கு உறுதுணையாக இருப்பார்கள் என்று நாம் நம்பிக் கொண்டு இருந்தவர்கள்; நேற்று வரை நமக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர்கள் நமக்கு விரோதிகளாக மாறும்போது இவனா? இவளா? இவர்களா? என்று அதிர்ந்துபோகக் கூடியவர்களாக சோர்ந்துபோகக் கூடியவர்களாக காணப்படுகிறோம்.பவுலும் பர்னபாவும் சோர்ந்து போகவில்லை சில நாட்களுக்கு முன்பாக நம்மை கடவுளுக்கு நிகராக மதித்த பட்டணமா இது என்று அங்கலாய்த்து கொண்டிருக்கவில்லை. அவர்கள் குதித்து எழுந்து அடுத்த பட்டணத்தை நோக்கி தங்கள் ஊழியத்தை நிறைவேற்றும் படி கடந்து போனார்கள்.
இன்றைக்கு உங்களை புகழ்ந்து பேசக் கூடியவர்கள் அன்பு செலுத்தக் கூடியவர்கள் உதவி செய்யக் கூடியவர்கள் ஒரே நாளில் ஒரே நிமிடத்தில் ஒரே நொடியில் கூட உங்களுக்கு எதிரானவர்களாக மாறக்கூடும். சூழ்நிலைகள் எப்படிப்பட்டதாக இருந்தாலும் தெரிந்துகொள்ளப்பட்டதும் விலையேறப்பெற்றதுமாயிருக்கிற மூலைக்கல்லாகிய இயேசு கிறிஸ்துவின் மீது நம்பிக்கை வைத்தவர்களாக, விசுவாசம் வைத்தவர்களாக சூழ்நிலைகளை அணுகும் போது திடமனதுடையவர்களாக, மேற்கொள்ளுபவர்களாக மாறிவிடுவீர்கள்.ஆகவே பிரியமானவர்களே உங்கள் விசுவாசம் உங்கள் நம்பிக்கை யாவும் கர்த்தர் மேல் மட்டுமே இருப்பதாக.
No comments:
Post a Comment