எனக்கு செவி கொடுக்கிறவன் எவனோ அவன்
விக்கினமின்றி வாசம் பண்ணி ஆபத்திற்குப்
பயப்படாமல் அமைதியாக இருப்பான்.
நீதிமொழிகள்-1:33
கர்த்தருக்குச் செவிகொடுக்கக்கூடிய தம்முடைய பிள்ளைகளுக்கு கர்த்தர் பாதுகாப்பை கொடுக்க கூடியவராக காணப்படுகிறார். ஈசாக்கின் காலத்தில் தேசத்திலே கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. ஈசாக்கு பெலிஸ்தியரின் ராஜாவாகிய அபிமெலேக்கினிடத்தில் கேராருக்கு போனார். அங்கேயும் அவர் எதிர்பார்த்த செழிப்பு இல்லாமல் இருந்திருக்க வேண்டும். ஆண்டவர் தரிசனத்திலே ஈசாக்கோடு, நீ எகிப்துக்கு போகாமல் நான் உனக்கு சொல்லும் தேசத்திலே குடியிரு; இந்த தேசத்திலே வாசம் பண்ணு, நான் உன்னோடு கூட இருந்து உன்னை ஆசீர்வதிப்பேன் என்றார்.
சூழ்நிலைகள் எதுவுமே அவருக்கு சாதகமாக இல்லை. தேசம் பஞ்சத்தினாலே பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஈசாக்கு அடுத்தபடியாக தன்னுடைய முகத்தை செழிப்புமிக்க எகிப்துக்கு நேராக திருப்பிவிடாதபடி கர்த்தர் முன்கூட்டியே தரிசனத்திலே அவருக்கு எச்சரிக்கையும் வாக்குத்தத்தங்களையும் கொடுத்து அதே தேசத்திலே தங்கி இருக்கும்படி கேட்டுக்கொண்டார். ஈசாக்கு கர்த்தருடைய வார்த்தைக்கு செவிகொடுக்கக் கூடியவராக காணப்பட்டார்.
எத்தகைய கொடிய பஞ்சத்திலும் ஜனங்கள் விதை தானியத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். பஞ்சகாலம் முடிந்த பிற்பாடு உணவுப் பயிர்களை உற்பத்தி செய்வதற்கு விதை தானியம் மிகவும் அவசியம். விதை விதைத்தால் எந்த விதத்திலும் அறுவடை வரப்போவதில்லை, வறட்சியான பஞ்சமான சூழ்நிலையில் யாரும் விதை விதைக்க துணிவதில்லை. தேசத்திலே அவ்வளவு அனுகூலமான சூழ்நிலைகள் இல்லாத போதிலும் தேசத்திலே வாசம் பண்ண கர்த்தர் கட்டளையிட்டிருந்தபடியினாலே தைரியமாக அந்த தேசத்திலே ஈசாக்கு விதை விதைத்தார். அந்த ஆண்டு அவர் 100 மடங்கு அறுவடையை கண்டடைந்தார்.
தனக்கு கீழ்படிந்த ஈசாக்கை கர்த்தர் மென்மேலும் ஆசீர்வதித்தார். அந்த தேசத்தில் இருந்த மற்ற ஜனங்கள் ஈசாக்கை பார்த்து பொறாமைபடக்கூடிய அளவுக்கு அவருடைய வளர்ச்சி பெரிதாய் இருந்தது. நீ எங்களை விட பெரியவனானாய் ஆகவே நீ எங்களோடு இருக்கக் கூடாது என்று சொல்லி அந்த தேசத்தார் அவனை அனுப்பி விடக்கூடிய அளவுக்கு அவர் ஆசீர்வதிக்கப்பட்டார்.
ஈசாக்கின் வாழ்க்கையில் இத்தகைய எல்லா ஆசீர்வாதங்களுக்கும் தொடக்கப் புள்ளியாக இருந்த காரியம் அவர் கர்த்தருடைய வார்த்தைக்கு செவிகொடுத்ததே ஆகும். நாம் கர்த்தருடைய வார்த்தைக்கு செவி கொடுக்கிறவர்களாக கீழ்ப்படிகிறவர்களாக முக்கியத்துவம் கொடுக்கிறவர்களாக காணப்பட வேண்டியது அவசியமாய் இருக்கிறது. கர்த்தர் தம்முடைய பிள்ளைகளை பாதுகாக்கிறவராக, போஷிக்கிறவராக வழி நடத்துகிறவராக காணப்படுகிறார். தைரியமாய் இருங்கள் கர்த்தர் உங்களோடு இருக்கிறார்.
No comments:
Post a Comment