Thursday, February 16, 2023

உங்களுக்கு எதிரானவர்கள் சத்தியத்துக்கு எதிரானவர்கள்.!

சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கிவைக்கிற மனுஷருடைய எல்லாவித அவபக்திக்கும் அநியாயத்துக்கும் விரோதமாய், தேவகோபம் வானத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.
ரோமர் 1:18

            மனிதர்கள் உண்மையான இரட்சிப்பை அடையும்படி தேவ வசனம் பிரசிங்கிக்கப்படுவதும் அவற்றை கேட்டு மனிதர்கள் மனம் திரும்புவதும் அவசியமாக இருக்கிறது. கர்த்தருடைய வசனமே சத்தியம். மேலோட்டமாக பார்த்தால் தேவ வசனம் பிரசங்கிக்கப்படுவதை தடுப்பவர்களுக்கு மேலாக தேவகோபம் வரும் என்பதைப்போல தோன்றினாலும் கர்த்தரை ஆவியோடும் உண்மையோடும் ஆராதிக்க கூடிய ஒவ்வொரு மனிதர்களுக்கும் எதிராக வரக்கூடிய சகலவித போராட்டங்களும் கர்த்தருடைய வசனத்திற்கு எதிரான அடக்குமுறைகளாகவே கர்த்தரால் பார்க்கப்படுகிறது.

 ஆச்சரியமாக இருக்கிறதா? 

            முதலாவது நூற்றாண்டில் வாழ்ந்த அப்போஸ்தலர்கள் முதற்கொண்டு இன்றைய நாள்வரையுள்ள தேவமனிதர்கள் கர்த்தருடைய வார்த்தையை, சத்தியத்தை மனிதர்களுக்கு தங்களுடைய வார்த்தையினாலே எடுத்துக் கூறுவதன் மூலமாக அவர்களை இரட்சிப்பு நேராக வழிநடத்தக்கூடியவர்களாக காணப்படுகிறார்கள். ஆனால் திரள்கூட்டமான ஜனங்கள் அவரை பின்பற்றக் கூடியவர்கள்; ஆராதிக்கக் கூடியவர்கள்,  வசனத்தை பிரசங்கிக்கிறவர்களாக இல்லாவிட்டாலும்கூட வசனத்தின்படி வாழ்கிறவர்களாக அந்த வசனத்தை தங்கள் வாழ்க்கையின் மூலமாக வெளிப்படுத்தக் கூடியவர்களாக காணப்படுகிறார்கள். சுவிசேஷமே நுழைய முடியாத இடத்திலும்கூட ஆண்டவருடைய பிள்ளைகள் வசனத்தின் படி வாழ்கிறவர்களாக; நீதி நேர்மை உள்ளவர்களாக; சாட்சியுள்ள வாழ்க்கை வாழ்கிறவர்களாக காணப்படும் போது, அங்கு அவர்களையும் அறியாமல் அவர்களது வாழ்க்கையில் மூலமாக கிறிஸ்துவின் வார்த்தை (அ) சத்தியம் வெளிப்படுத்தப்படுகிறது. அந்த வகையில் தங்கள் வாழ்க்கையின் மூலமாக சத்தியத்தை வெளிப்படுத்துகிறவர்களுடைய எண்ணிக்கை இந்த உலகில் அதிகமாக இருக்கிறது என்று கூற முடியும். 

  • இன்றைய காலகட்டத்திலே தங்களுடைய முன்னேற்றத்திற்காக மற்றவர்கள் மீது பொய்யான காரியங்களை உண்மை போன்று கூறக்கூடிய மனிதர்கள் பெருகி இருக்கிறார்கள். இப்படிப்பட்ட பொய்யர்கள் தங்களுடைய நடக்கையின் மூலமாக தேவனுடைய பிள்ளைகளுக்கு எதிராக செயல்படும் போது அவர்கள் சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கி வைக்கிற மனிதர்களாக மாறி விடுகிறார்கள். 

  • தங்களுடைய கையிலே அதிகாரம் இருப்பதினாலே தாங்கள் சொல்லக்கூடிய காரியங்களை மற்றவர்கள் கேட்கிறார்கள் என்பதினாலே வசனத்தின் படி வாழுகிற தம்முடைய பிள்ளைகளுக்கு எதிராக செயல்படுபவர்கள் சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கி வைக்கிற மனுஷராக மாறுகிறார்கள்.

  •  தங்களுக்கு பிடித்தவர்கள், தங்களை சார்ந்தவர்களை முன்னிறுத்துவதற்காக உண்மையும் நேர்மையுமுள்ள  சத்தியத்தின்படி வாழுகிற தேவனுடைய பிள்ளைகளுக்கு எதிராக செயல்படுகிறவர்கள் சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கி வைக்கிறார்களாக காணப்படுகிறார்கள்.

             நீங்கள் தேவனை ஆராதிக்கிறவர்களாக கர்த்தருடைய வசனத்தின் படி வாழுகிறவர்களாக உங்கள் நற்சாட்சி உள்ள நடக்கையின் மூலமாக வாழ்க்கையின் மூலமாக சத்தியத்தை பிரதிபலிக்கிறவர்களாக காணப்படும் போது, உங்களை ஒடுக்குவதற்காக ஒதுக்குவதற்காக ஓரங்கட்டுவதற்காக செய்யப்படக்கூடிய எல்லா மனித செயல்களும் வசனத்துக்கு எதிரானதாக சத்தியத்துக்கு எதிரானதாக இயேசு கிறிஸ்துவுக்கு எதிரானதாக காணப்படுகிறது. அநீதியாக உங்களை துன்பப்படுத்துகிறவர்களுக்கு எதிராக தேவகோபம் வானத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்டு இருக்கிறது என்று வசனம் நிகழ்காலத்தை குறித்து கூறுகிறது. உலகமே உங்களுக்கு எதிராக இருந்தாலும் கர்த்தர் மட்டும் உங்கள் பட்சத்தில் இருந்தால் நீங்கள் தான் நிச்சயமாக வெற்றி பெறுவீர்கள். தைரியமாக கர்த்தருடைய முகத்தை நோக்கி பாருங்கள் அவர் உங்களுக்காக அற்புதங்களை செய்வார். 

Wednesday, February 15, 2023

கர்த்தர் உங்களுக்காக பாதைகளை செவ்வையாக்குவார்.!

நான் உனக்கு முன்னே போய் கோணலானவைகளை செவ்வையாக்குவேன்.
ஏசாயா 45:2 

            கர்த்தர் தம்முடைய பிள்ளைகளுக்கு பாதை காட்டுகிறவராக மட்டுமல்லாமல் அவர்களுக்கு முன்னே செல்லுகிறவராக பாதைகளை உருவாக்குபவராக சீர்படுத்துகிறவராக காணப்படுகிறார். ஆகவே நீங்கள் செல்லக்கூடிய பாதைகளிலே எத்தகைய தடைகள் எதிர்ப்புகள் போராட்டங்கள் வந்தாலும் தைரியமாக கர்த்தருடைய முகத்தை நோக்கிப் பாருங்கள் அவர் உங்களை விடுவித்து ரட்சித்து வழிநடத்த வல்லவராக தான் நிச்சயதார்த்திருக்கக்கூடிய உயர்வுகளில் கொண்டு சேர்க்கக் கூடியவராக இருக்கிறார்.

            இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தருடைய வார்த்தையின் படியே எகிப்திலிருந்து கானானை நோக்கி புறப்பட்டார்கள். அவர்களது பாதையிலே செங்கடல் குறுக்கிட்டது. செங்கடலை விட பிரச்சனைக்குரிய விஷயமாக பார்வோனும் சேனையும் அவர்களை பின்தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. முன்னே செங்கடல் பின்னே பார்வோனும் சேனைகளும்.! ஜனங்கள் மிகவும் கலங்கி போனார்கள். ஒரு கட்டத்திலே மோசேக்கு எதிராக முறுமுறுக்க துவங்கினார்கள். இஸ்ரேலர்கள் எகிப்தை விட்டு புறப்படுவதற்கு முன் கர்த்தர் எகிப்தில் பலவிதமான அற்புதங்களை இஸ்ரவேல் ஜனங்களின் கண்களுக்கு முன்பதாக செய்தார். எகிப்தியரையும் பார்வோனையும் 10 விதமான வாதைகளால் வாதித்தார். அவர்கள் இப்போது சந்தித்து இருக்கக்கூடிய இக்கட்டான சூழ்நிலை முன்காலங்களிலே தேவன் அவர்களுக்கு கொடுத்த நன்மைகளை, வெற்றிகளை மறக்கப்பண்ணக் கூடியதாக மாறிப்போனது. எத்தகைய சூழ்நிலைகள் நம்முடைய வாழ்க்கையிலே வந்தாலும் நம்மை அழைத்த தேவன் உண்மையுள்ளவர். அவர் நிச்சயமாகவே தன்னுடைய வார்த்தைகளை நிறைவேற்ற வல்லவராய் இருக்கிறார். 

            பாதையிலே எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் எவ்வளவு போராட்டங்கள் வந்தாலும் எல்லாவற்றுக்கும் மேலே கர்த்தர் சர்வ வல்லமை உடையவராக இருக்கிறார். அவரால் செய்யக்கூடாத எந்த ஒரு அதிசயமான காரியமும் இல்லை. 

            பின்தொடர்ந்து வரக்கூடிய பார்வோனும் சேனையும் யுத்தங்களில் பழக்கப்பட்டவர்கள். ஆனால் செங்கடலின் கரையில் நின்று அங்கலாத்துக் கொண்டிருக்கக்கூடிய இஸ்ரவேலர்கள் 400 ஆண்டுகளாக அடிமைகளாக மட்டுமே இருந்தவர்கள் அவர்களுக்கு ஆயுதங்களை பயன்படுத்தத் தெரியாது ஆயுதங்களும் கிடையாது அப்படியே இருந்தாலும் வலிமை மிகுந்த எகிப்து ராணுவத்தை அவர்களால் என்ன செய்ய முடியும்? எந்த திசையிலும் நோக்கி பார்க்க முடியாத மிகுந்த இக்கட்டுக்குள்ளே அந்த ஜனங்கள் அகப்பட்டிருந்தார்கள்.   அருமையானவர்களே எப்படிப்பட்ட சூழ்நிலைகளுக்குள்ளே அகப்பட்டிருந்தாலும் எல்லா பாதைகளும் அடைந்தது போல காணப்பட்டாலும் எல்லா நாளும் எந்நேரமும்  நாம் நோக்கி பார்க்கத் தக்க வாசலாக தேவனுடைய சிங்காசனம் காணப்படுகிறது. கர்த்தரை நோக்கி பாருங்கள் அவர் உங்களுக்கு வழிகளை திறப்பார். பாதைகளை செவ்வை படுத்துவார். 

            இஸ்ரவேல் ஜனங்களுக்கு முன்பதாக நின்ற செங்கடல் இரண்டாக பிளந்து போனது. இஸ்ரவேல் ஜனங்கள் அதன் நடுவே நடந்து மறு கரையை அடைந்தார்கள். அதே சமுத்திரம் பார்வோனையும் சேனைகளையும்  மூழ்கடிக்க கூடியதாக மாறியது. கர்த்தரை ஆராதிக்ககூடிய கர்த்தருடைய வார்த்தைக்கு பயப்படக்கூடிய நீங்கள் எந்த சூழ்நிலையிலும் தனிமையானவர்கள் அல்ல. கர்த்தர் உங்களோடிருந்து உங்களை வழிநடத்தக் கூடியவர். உங்களுக்கு முன் சென்று கோணலானவைகளை செவ்வாயாக்குவார். எல்லா வாசல்களும் அடைந்து விட்டது என்று அங்கலாய்த்து கொண்டிருந்தாலும் கூட அவர் இயற்கைக்கு அப்பாற்பட்ட அற்புதங்களை செய்து உங்களை வழிநடத்த வல்லவராக இருக்கிறார்.

Monday, February 13, 2023

கர்த்தர் உங்களை விடுவிப்பார். நம்பிக்கையோடு கூப்பிடுங்கள்.!

கூப்பிடுகிற எளியவனையும் உதவியற்ற 
சிறுமையானவனையும் அவர் விடுவிப்பார்.
 சங்கீதம்-72:12

            என்னை நோக்கி கூப்பிடு நான் உன்னை விடுவிப்பேன் நீ என்னை மகிமைப்படுத்துவாய் என்று வேதம் சொல்லுகிறது. எந்த சூழ்நிலையிலும் தன்னை நோக்கி கூப்பிடுகிறவர்களுடைய குரலை கேட்கிறவராக அவர்களுக்கு பதில் கொடுக்கிறவராக கர்த்தர் காணப்படுகிறார். அநேக நேரங்களில் பலர் கர்த்தரை நோக்கி கூப்பிட்டும் வெற்றிகளை தங்களுடைய தேவைகளை பெற்றுக் கொள்ள முடியாததற்கு காரணம் அவர்கள்  கூப்பிடுகிறார்களே தவிர கர்த்தரை நோக்கி கூப்பிடாதே ஆகும். 

            ஆபிரகாமின் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட ஆகார் துருத்திலிருந்த தண்ணீர் செலவான பின்பு அவள் தன் பிள்ளையை ஒரு செடியின் கீழே விட்டு விட்டு பிள்ளை சாகிறதை நான் பார்க்க மாட்டேன் என்று எதிராக அம்பு பாயும் தூரத்தில் போய் உட்கார்ந்து சத்தமிட்டு அழுதாள். வேதம் சொல்லுகிறது, 'தேவன் பிள்ளையின் சத்தத்தை கேட்டார்'  சத்தமிட்டு அழுததாக அடையாளப்படுத்தப்பட்டது ஆகாராக இருந்தபோதிலும் தேவன் கேட்டது பிள்ளையின் சத்தம். காரணம் என்ன ஆகாருக்கு வனாந்தரத்தின் சூழ்நிலை தெரியும். வனாந்தரத்திலே யாருமே இருக்க மாட்டார்கள்; தனக்கு உதவி கிடைக்க வாய்ப்பே இல்லை; ஆகவே தன்னுடைய பிள்ளையும் தானும் சாவது நிச்சயம்;   இப்படித்தான் இருக்கும் என்பதாக மனதிலே ஒரு முடிவை நிச்சயித்து கொண்டவளாக கொண்டவளாக அழுது கொண்டிருந்தாள்.

             பிள்ளையைப் பொறுத்தவரை கைக்குழந்தை அல்ல ஆகார் இஸ்மாவேலை பெறும்போது ஆபிரகாமுக்கு வயது 86 ஈசாக்கை பெறும்போது 100 வயது. ஈசாக்கு பிறக்கக்கூடிய காலகட்டத்தில் இஸ்மவேலுக்கு 14 வயது என்று நாம் கணக்கிட முடியும். ஆகாரும் மகனும் ஆபிரகாமின் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட காலகட்டம் ஈசாக்கு பால் மறந்த பிற்பாடு என்பதையும் வேதம் நமக்கு சொல்லுகிறது எப்படி கணக்கிட்டாலும் 17 அல்லது 18 வயது சிறுவனாக இஸ்மவேல் காணப்படுகிறார். வனாந்திரம் எப்படிப்பட்டது என்பதை அறியாததினாலே பிள்ளையின் மனம் எங்களுக்கு ஒரு வாசல் திறந்து விடாதா எப்படியாகிலும் நாங்கள் தப்பிக்கொள்ளும்படி எங்களுக்கு ஒரு வழி ஏற்பட்டு விடாதா என்று சொல்லி ஒரு எதிர்பார்ப்போடு கூடிய கவலையை மனதில் கொண்டிருந்தது. ஆகவே தேவன் பிள்ளையின் சத்தத்தை கேட்டார். கர்த்தருடைய தூதன் வானத்திலிருந்து ஆகாரை கூப்பிட்டு அவளுடைய அவநம்பிக்கைப் போக்கி உயிர் பிழைக்கும்படியான வழியைக் காட்டினார். 

            பிரியமானவர்களே நாம் எப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்தாலும் விடுவிக்கப்படும்படிக்கு நாம் நம்பிக்கை உடையவர்களாக கர்த்தரை நோக்கி கூப்பிட வேண்டியது அவசியமாக இருக்கிறது. நம்பிக்கை உள்ள துக்கம்; அழுகை; கண்ணீர்; கர்த்தருடைய சமூகத்திலிருந்து நமக்கு சாதகமான நீதியுள்ள பதிலை கொண்டு வருகிறதாக; ஆசீர்வாதங்களை கொண்டு வருகிறதாக காணப்படுகிறது. ஆகவே விசுவாசத்தோடு கர்த்தரை நோக்கி கூப்பிடுங்கள்.அவர் உங்களை விடுவிப்பார். 

Friday, February 10, 2023

மனத் தாழ்மையுள்ளவர்கள் கர்த்தரால் உயர்த்தப்படுவார்கள்.!


மனுஷனுடைய அகந்தை அவனை தாழ்த்தும்
 மனத் தாழ்மை உள்ளவனோ கனமடைவான்.
 நீதிமொழிகள் 29:23 

            வேதம் மனத்தாழ்மையைக் குறித்து அதிகமாக போதிக்கிறது. தம்மை பின்பற்றக்கூடிய ஜனங்களிடத்தில் கர்த்தர் எதிர்பார்க்கக் கூடிய முக்கியமான ஒரு குணம் தாழ்மை. நியாயம் செய்து இரக்கத்தை சிநேகித்து உன் தேவனுக்கு முன்பாக மனத் தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தை கர்த்தர் கேட்கிறார் என்று மீகா தீர்க்கதரிசியின் மூலமாக கர்த்தர் தம்முடைய ஜனங்களோடு பேசுகிறார். மனத்தாழ்மை என்ற நற்குணம் மனிதர்களை ஜீவனுக்கு நேராக வழிநடத்தக் கூடியதாக இருக்கக்கூடிய அதே நேரத்தில் அகந்தை மனிதனை அழிவுக்கு நேராக வழிநடத்தக் கூடியதாக காணப்படுகிறது. 

            எஸ்தரின் புஸ்தகத்திலே ஆமான் என்ற மனிதரை காண முடியும். இந்து தேசம் முதல் எத்தியோபியா தேசம் வரையிலான 127 நாடுகளை ஒரே குடையின் கீழ் ஆளக்கூடிய அகஸ்வேரு ராஜாவுக்கு அடுத்த உயர்ந்த நிலையிலே காணப்பட்ட மனிதர் அவர். 'ஆமான்' யூதர்களை அழிக்க முயற்சித்தவர், மொர்தேகாயின் சத்துரு என்ற ஒரு கோணத்தில் மாத்திரம் நாம் அவரை ஒதுக்கி விட முடியாது. தகுதியின் திறமையும் இல்லாத ஒரு மனிதனை எந்த ஒரு ராஜாவும் இவ்வளவு உயர்வான இடத்தில் நிச்சயமாக வைத்திருக்க மாட்டார்கள்.  உலகப் பிரகாரமாக ஆமானின் திறமைகளை தகுதிகளை நாம் குறை சொல்லிவிட முடியாது. 

            எவ்வளவு சிறந்த படகாக இருந்தாலும் அதில் காணப்படக்கூடிய ஒரு சிறிய துவாரம் அதை மூழ்கடித்து விடும் என்பதை போல சிற்சில சுபாவங்கள் மனிதர்களை அழிக்கக்கூடியதாக இருந்ததை வரலாற்றின் பக்கங்களில் நாம் திரளாக காணமுடியும். மிகப்பெரிய பொறுப்பு வாய்ந்தவர் ஆக இருந்தபடியினாலும் ராஜாவுக்கு அடுத்த நிலையிலே  அதிகாரம் மிக்கவராக இருந்தபடியினாலும் ராஜாவின் ஊழியக்காரர்கள் யாவரும் அவரை நமஸ்கரிக்க கூடியவர்களாக பணிந்து கொள்ளக் கூடியவர்களாக காணப்பட்டார்கள். ஆனால் மொர்தேகாய் அவரை வணங்கவும் இல்லை நமஸ்கரிக்கவும் இல்லை. ஆமானுக்கு அது மிகவும் உறுத்தலாக இருந்தது அதை அவரால் கொஞ்சமும் சகித்துக் கொள்ள முடியவில்லை. சில இடங்களில் உரிய அங்கீகாரங்கள் மரியாதைகள் கிடைக்காததை போல உணரும் போது மனத்தாழ்மை உள்ளவர்களாக அந்த இடத்தை விட்டு கடந்து போவது தேவனுடைய பிள்ளைகளுக்கு அழகு, மேலும் வேதம் சொல்லுகிறது தன்னை தாழ்த்துகிறவன் எவனும் உயர்த்தப்படுவான். 

            மொர்தகாய்க்கு மட்டும் தீங்கு செய்வது ஆமானுக்கு மிகவும் எளிய காரியமாக காணப்பட்ட படியினாலே மொர்தகாயின்.  இனத்தாராகிய யூதர்கள் அனைவரையும் அழித்து விட வேண்டும் என்ற கொடிய எண்ணத்தோடு ஆமான் காய் நகர்த்தத் தொடங்கினார். தன்னுடைய உலக பிரகாரமான செல்வாக்கை மட்டுமே நம்பி அவர் இதில் இறங்கினார். யூதர்கள் யார்? அவர்களது பின்னணி என்ன? தேவனுக்கும் அவர்களுக்குமான தொடர்பு எப்படிப்பட்டது? ஏன் அவர்கள் இந்த அகஸ்வேருவின் தேசத்தில் இருக்கிறார்கள் என்பதெல்லாம் ஆமானுக்கு தெரியாது. கர்த்தர் தன்னுடைய பிள்ளைகளை சிட்சித்தாலும் அவர்கள் மீது மிகவும் கரிசனையுள்ளவராக காணப்படக்கூடிய தேவன். எல்லா யூதர்களும் தங்கள் ஜீவனை காப்பாற்றிக் கொள்ளும்படிக்கு உபவாசம் இருந்து கர்த்தரை நோக்கி கூப்பிட தொடங்கினார்கள். காரியம் மாறுதலாக  முடியத் துவங்கியது. 

            மிகப்பெரிய ராஜாவுக்கே உதவி செய்யக் கூடியவராக இருந்தபோதிலும் தன்னுடைய அகந்தையின் மிகுதியினாலே சாதாரண ஒரு மனிதனுக்கு எதிராக தன்னுடைய அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த ஆமான் அழிவுக்கு நேராக கடந்து சென்றார். அவருடைய அகந்தை அவரை அழித்து போடக்கூடியதாக காணப்பட்டது. கூடுமானால் உங்களால் ஆன மட்டும் எல்லாம் மனுசரோடும் சமாதானமாய் இருங்கள். எப்படிப்பட்ட மனிதர்களாக இருந்தாலும் ஒடுக்கப்படுகிறவர்களுக்கு கர்த்தர் ஆதரவாக நிற்கிறவர் ஆகவே தாழ்மையுள்ளவர்களாக காணப்படுங்கள். கர்த்தருடைய கரம் உங்களுக்கு அனுகூலமாய் இருக்கும்.

Thursday, February 9, 2023

நூறு மடங்கு ஆசீர்வாதங்களை பெற்றுக் கொள்ளுங்கள்.!

எனக்கு செவி கொடுக்கிறவன் எவனோ அவன் 
விக்கினமின்றி வாசம் பண்ணி ஆபத்திற்குப் 
பயப்படாமல் அமைதியாக இருப்பான்.
நீதிமொழிகள்-1:33 

            கர்த்தருக்குச் செவிகொடுக்கக்கூடிய தம்முடைய பிள்ளைகளுக்கு கர்த்தர் பாதுகாப்பை கொடுக்க கூடியவராக காணப்படுகிறார். ஈசாக்கின் காலத்தில் தேசத்திலே கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. ஈசாக்கு பெலிஸ்தியரின்  ராஜாவாகிய அபிமெலேக்கினிடத்தில் கேராருக்கு போனார். அங்கேயும் அவர் எதிர்பார்த்த செழிப்பு இல்லாமல் இருந்திருக்க வேண்டும். ஆண்டவர் தரிசனத்திலே ஈசாக்கோடு, நீ எகிப்துக்கு போகாமல் நான் உனக்கு சொல்லும் தேசத்திலே குடியிரு; இந்த தேசத்திலே வாசம் பண்ணு, நான் உன்னோடு கூட இருந்து உன்னை ஆசீர்வதிப்பேன் என்றார். 

             சூழ்நிலைகள் எதுவுமே அவருக்கு சாதகமாக இல்லை. தேசம் பஞ்சத்தினாலே பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஈசாக்கு அடுத்தபடியாக தன்னுடைய முகத்தை செழிப்புமிக்க எகிப்துக்கு நேராக திருப்பிவிடாதபடி கர்த்தர் முன்கூட்டியே தரிசனத்திலே அவருக்கு எச்சரிக்கையும் வாக்குத்தத்தங்களையும் கொடுத்து அதே தேசத்திலே தங்கி இருக்கும்படி கேட்டுக்கொண்டார். ஈசாக்கு கர்த்தருடைய வார்த்தைக்கு செவிகொடுக்கக் கூடியவராக காணப்பட்டார். 

            எத்தகைய கொடிய பஞ்சத்திலும் ஜனங்கள் விதை தானியத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். பஞ்சகாலம் முடிந்த பிற்பாடு உணவுப் பயிர்களை உற்பத்தி செய்வதற்கு விதை தானியம் மிகவும் அவசியம். விதை விதைத்தால் எந்த விதத்திலும் அறுவடை வரப்போவதில்லை, வறட்சியான பஞ்சமான சூழ்நிலையில் யாரும் விதை விதைக்க துணிவதில்லை. தேசத்திலே அவ்வளவு அனுகூலமான சூழ்நிலைகள் இல்லாத போதிலும் தேசத்திலே வாசம் பண்ண கர்த்தர் கட்டளையிட்டிருந்தபடியினாலே தைரியமாக அந்த தேசத்திலே ஈசாக்கு விதை விதைத்தார். அந்த ஆண்டு அவர் 100 மடங்கு அறுவடையை கண்டடைந்தார். 

             தனக்கு கீழ்படிந்த ஈசாக்கை கர்த்தர் மென்மேலும் ஆசீர்வதித்தார். அந்த தேசத்தில் இருந்த மற்ற ஜனங்கள் ஈசாக்கை பார்த்து பொறாமைபடக்கூடிய அளவுக்கு அவருடைய வளர்ச்சி பெரிதாய் இருந்தது.  நீ எங்களை விட பெரியவனானாய் ஆகவே நீ எங்களோடு இருக்கக் கூடாது என்று சொல்லி அந்த தேசத்தார் அவனை அனுப்பி விடக்கூடிய அளவுக்கு அவர் ஆசீர்வதிக்கப்பட்டார். 

            ஈசாக்கின் வாழ்க்கையில் இத்தகைய எல்லா ஆசீர்வாதங்களுக்கும் தொடக்கப் புள்ளியாக இருந்த காரியம் அவர் கர்த்தருடைய வார்த்தைக்கு  செவிகொடுத்ததே ஆகும்.  நாம் கர்த்தருடைய வார்த்தைக்கு செவி கொடுக்கிறவர்களாக கீழ்ப்படிகிறவர்களாக முக்கியத்துவம் கொடுக்கிறவர்களாக காணப்பட வேண்டியது அவசியமாய் இருக்கிறது. கர்த்தர் தம்முடைய பிள்ளைகளை பாதுகாக்கிறவராக, போஷிக்கிறவராக வழி நடத்துகிறவராக காணப்படுகிறார். தைரியமாய் இருங்கள் கர்த்தர் உங்களோடு இருக்கிறார்.

Wednesday, February 8, 2023

கர்த்தரிடத்தில் விசுவாசமாய் இருக்கிற நீங்கள் அசைக்கப்படுவதில்லை.!

அந்தப்படியே: இதோ, தெரிந்துகொள்ளப்பட்டதும் விலையேறப்பெற்றதுமாயிருக்கிற மூலைக்கல்லை சீயோனில் வைக்கிறேன்;அதின்மேல் விசுவாசமாயிருக்கிறவன் வெட்கப்படுவதில்லை.
1பேதுரு 2:6  

            அனேக மனிதர்கள் தங்களுடைய வாழ்க்கையில் ஏதோ ஒரு விதத்திலே உதவி செய்த மனிதர்களை நேசிக்கிறார்கள், அவர்கள் மீது விசுவாசம் வைக்கிறார்கள். இன்னும் சிலர்: இந்த மனிதர், இந்த நண்பர், இந்த உறவினர் எனக்கு உதவி செய்வார், எனது இக்கட்டிலே எனக்கு உறுதுணையாக இருப்பார் என்றெல்லாம் பலவிதமாக சிலரைக் குறித்து நம்புகின்றனர். சில நேரங்களில் அவர்கள் நம்பிக்கைகள் பொய்த்துப் போகும் போது மனதுடைந்தவர்களாக சோர்ந்து போகிறவர்களாக காணப்படுகிறார்கள்.  யார் உங்களுக்கு உதவி செய்தாலும், நீங்கள் மகிழத்தக்க விதத்திலே நடந்து கொண்டாலும், உங்களை யார் மதிப்பதாக நீங்கள் நம்பிக் கொண்டு இருந்தாலும் உங்களது நம்பிக்கை கர்த்தர் மேல் மட்டுமே இருப்பதாக. 

            பவுலும் பர்னபாவும் லீஸ்திரா பட்டணத்தில் ஊழியம் செய்துகொண்டிருந்தபோது பிறந்தது முதல் ஊனமுற்றவராக இருந்த மனிதர் குதித்தெழுந்து நடந்தார். ஜனங்கள் இதைக் கண்டு மிகவும் ஆச்சரியப்பட்டார்கள். அவர்கள் பவுலையும் பர்னபாவையும் சூழ்ந்து கொண்டார்கள். கடவுள்கள் மனித வடிவம் எடுத்து நம் நடுவில் இறங்கி இருக்கிறார்கள் என்று உரக்கக் கத்தினார்கள். பவுலை மெர்க்குரி என்றும் பர்னபாவை யூபித்தர் என்றும் அவர்கள் நம்பினார்கள். பட்டணத்து வாசலில் இருந்த யூபித்தர் கோவிலின்  பூஜாசாரி எருதுகளோடும் மாலைகளோடும் அவர்களுக்கு பலிசெலுத்த தயாராக இருந்தார். நாங்கள் உங்களைப் போன்ற சாதாரண மனிதர்கள் தான்; இயேசு கிறிஸ்துவே மெய்யான தேவன்;அவர் மூலமாகவே இத்தகைய அற்புதங்கள் நடக்கிறது என்பதை அந்த ஜனங்களுக்கு புரிய வைக்க அவர்கள் வெகு பாடுபட வேண்டியிருந்தது. 

            பவுலும் பர்னபாவும் அந்த பட்டணத்திலே மதிக்கப்பட தக்கவர்களாக காணப்பட்டனர். தங்கு தடையின்றி சுவிசேஷம் பிரசங்கிக்கப்பட்டது. அநேக பட்டணங்களுக்கு அவர்கள் செல்லும்போது அவர்களுக்கு எதிர்ப்பு எழும்புவது வழக்கம் ஆனால் இங்கு அவர்கள் சென்றபோது அவர்களை மதிக்கிறவர்களாக பட்டணத்து ஜனங்கள் காணப்பட்டனர்.  அந்தியோக்கியா, இக்கோனியா பட்டணத்தை சார்ந்த சில யூதர்கள் அந்த பட்டணத்துக்கு கடந்து வந்தார்கள்.  அவர்கள் ஜனங்களோடு பேசினார்கள். அவ்வளவுதான் சூழ்நிலை அப்படியே மாறிப் போனது. எந்த பட்டணத்து ஜனங்கள் அப்போஸ்தலர்களை கடவுள்கள் என்று நினைத்தார்களோ அதே பட்டணத்தில் பவுல் கல்லறியப்பட்டு மரித்துப் போனார் என்று எண்ணப்பட்டவராக மிருகத்தைப் போல பட்டணத்துக்கு வெளியே இழுத்துச் செல்லப்பட்டார். 

            யாரோ நமக்கு விரோதமாக எழும்புகிறார்கள்; யாரோ நமக்கு விரோதிகளாக இருக்கிறார்கள் என்பது அதிகமாக நம்மை காயப்படுத்தாது. நம்மை நேசித்தவர்கள் நமக்கு உறுதுணையாக இருப்பார்கள் என்று நாம் நம்பிக் கொண்டு இருந்தவர்கள்; நேற்று வரை நமக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர்கள் நமக்கு விரோதிகளாக மாறும்போது இவனா? இவளா? இவர்களா? என்று அதிர்ந்துபோகக் கூடியவர்களாக சோர்ந்துபோகக் கூடியவர்களாக காணப்படுகிறோம்.பவுலும் பர்னபாவும் சோர்ந்து போகவில்லை சில நாட்களுக்கு முன்பாக நம்மை கடவுளுக்கு நிகராக மதித்த பட்டணமா இது என்று அங்கலாய்த்து கொண்டிருக்கவில்லை. அவர்கள் குதித்து எழுந்து அடுத்த பட்டணத்தை நோக்கி தங்கள் ஊழியத்தை நிறைவேற்றும் படி கடந்து போனார்கள். 

            ன்றைக்கு உங்களை புகழ்ந்து பேசக் கூடியவர்கள் அன்பு செலுத்தக் கூடியவர்கள் உதவி செய்யக் கூடியவர்கள் ஒரே நாளில் ஒரே நிமிடத்தில் ஒரே நொடியில் கூட உங்களுக்கு எதிரானவர்களாக மாறக்கூடும். சூழ்நிலைகள் எப்படிப்பட்டதாக இருந்தாலும் தெரிந்துகொள்ளப்பட்டதும் விலையேறப்பெற்றதுமாயிருக்கிற மூலைக்கல்லாகிய இயேசு கிறிஸ்துவின் மீது நம்பிக்கை வைத்தவர்களாக, விசுவாசம் வைத்தவர்களாக சூழ்நிலைகளை அணுகும் போது திடமனதுடையவர்களாக, மேற்கொள்ளுபவர்களாக மாறிவிடுவீர்கள்.ஆகவே பிரியமானவர்களே உங்கள் விசுவாசம் உங்கள் நம்பிக்கை யாவும் கர்த்தர் மேல் மட்டுமே இருப்பதாக.

Monday, February 6, 2023

உங்கள் கண்ணீரின் ஜெபத்துக்கு நிச்சயமான, பிரமிக்கத்தக்க பதில் உண்டு. !

உன் விண்ணப்பத்தை கேட்டேன், கண்ணீரைக் கண்டேன்; 
இதோ நான் உன்னை குணமாக்குவேன்.
2 ராஜாக்கள் 20:5 

            எசேக்கியா ராஜா வியாதிப்பட்டு மரணப்படுக்கையில் இருக்கக்கூடிய நேரத்திலே ஏசாயா தீர்க்கத்தரிசி அவரிடத்தில் வந்து, உம்முடைய வீட்டுக் காரியத்தை ஒழுங்கு படுத்தும் நீர் பிழைக்க மாட்டீர், மரித்துப் போவீர் என்றார். சர்வ லோகத்தையும் ஆளக்கூடிய சர்வ வல்லமையுள்ள தேவன் தன்னுடைய தீர்க்கதரிசியை அனுப்பி எசேக்கியா ராஜாவிடத்தில்  நீர் மரித்துப் போவீர் என்று சொல்லுவதை இங்கே நாம் காண முடியும். அதைக் கேட்ட உடனே எசக்கியா ராஜா தன் முகத்தை சுவருக்கு நேராக திருப்பி கண்ணீரோடு கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணினார்.

         சாதாரண மனிதர்களே தங்கள் ஒருமுறை சொன்ன காரியத்தை மாற்றி சொல்வதற்கு யோசிப்பார்கள்.  வேதத்திலே பிலாத்து என்ற மனிதரை நாம் பார்க்க முடியும். சிலுவையில் அறையப்படும் படி இயேசு கிறிஸ்துவின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு என்ன என்பதை ஜனங்கள் அறிந்து கொள்ளும்படியாக நான்கு மொழிகளில் "நசரேனாகிய இயேசு யூதருடைய ராஜா" என்ற மேல் விலாசத்தை எழுதி சிலுவைக்கு மேலாக பிலாத்து வைத்தார். இதைக் கண்ட யூத பிரமுகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பிலாத்துவிடம் சென்று  இவர் யூதருடைய ராஜா என்று தன்னை சொல்லிக் கொண்டார் என்பதாக எழுதும் என்று கேட்டுக் கொண்டார்கள்.  பிலாத்து அமைதியாக  நான் எழுதினது எழுதினதே என்று சொல்லி அவர்களை அனுப்பி விட்டார்.  மிகப்பெரிய ரோம பேரரசின் மிகச்சிறிய யூதேயா பகுதியின் ஒரு ஆளுநர் தன்னுடைய வார்த்தையை மாற்றுவதற்கு மறுத்துவிட்டார். 

            கர்த்தருடைய வார்த்தையை கொண்டு வந்த அந்த ஏசாயா தீர்க்கதரிசி ராஜாவின் வீட்டு முற்றத்தை தாண்டுவதற்கு முன்பதாக மீண்டும் கர்த்தர் தீர்க்கதரிசியை கூப்பிட்டு, உன் விண்ணப்பத்தை கேட்டேன் உன் கண்ணீரை கண்டேன் உன்  நாட்களோடு பதினைந்து வருடத்தை கூட்டுவேன் என்றார். அப்படியே எசேக்கியா ராஜா பிழைத்துக் கொண்டார். சர்வ வல்லமை உள்ள தேவனாக இருந்தபோதிலும் தன்னுடைய எளிய பக்தன் மனமுருகி கூப்பிட்ட போது ஆண்டவர் மனமிரங்க்கூடியவராக காணப்படுகிறார்.

             உங்களுடைய வாழ்க்கையிலும் கூட ஏதோ சில காரியங்களைக் குறித்து நீங்கள் நம்பிக்கை இழந்தவர்களாக காணப்படலாம். உங்கள் சூழ்நிலைகளின் அடிப்படையில் சிலவற்றை அல்லது யாரோ சிலர் சொன்ன வார்த்தைகளை நீங்கள் நம்பிக் கொண்டு இருக்கலாம், எவ்வளவு பெரிய மனிதர் உங்களை உடைக்கக்கூடிய; உங்கள் நம்பிக்கை அடியோடு அற்றுப்போகத்தக்க வார்த்தையை உங்களிடத்தில் சொன்னாலும் நீங்கள் நோக்கி பார்ப்பதற்கான ஒரு இடம் உண்டு. அது கர்த்தருடைய சமூகம், கர்த்தரை நோக்கி கூப்பிடுங்கள் அவர் மனமிரங்கக் கூடியவராக காணப்படுகிறார். யார் இல்லை என்று சொன்னாலும் கர்த்தர் ஆம் என்று சொல்லும் வல்லமை படைத்தவர். பக்தனுடைய வேண்டுகோளுக்காக தன் முடிவையே மாற்றின தேவன் உங்கள் ஜெபத்திற்கு பதில் தராமல் இருப்பாரா? நிச்சயமாய் பதில் தருவார். உங்கள் வாழ்க்கையில் கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்.

Sunday, February 5, 2023

கர்த்தர் தீமை செய்பவர்களுக்கு விரோதமாய் இருக்கிறார்.! நீங்கள் நிச்சயமாகவே விடுவிக்கப்படுவீர்கள். !

தீமை செய்கிறவர்களுடைய பேரை பூமியில் இராமல் அற்றுப்போக பண்ண கர்த்தருடைய முகம் அவர்களுக்கு விரோதமாய் இருக்கிறது.
சங்கீதம் 34:16 

             தீமை என்ற சொல் எல்லா மனிதர்களுக்கும் மிகவும் நன்றாக அறிமுகமான ஒரு சொல். அனேகர் மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்க கூடிய  செயல்களை துணிந்து செய்கிறவர்களாக காணப்படுகின்றனர். கர்த்தருடைய பிள்ளைகளுடைய வாழ்க்கையிலே தேவனுடைய சித்தத்துக்கு விரோதமான காரியங்களை திணிக்க கூடியவர்கள் மனிதர்களுடைய பார்வையில் மட்டுமல்ல கர்த்தருடைய பார்வையிலும் கூட தீமை செய்கிறவர்களாக காணப்படுகின்றனர். தீமை செய்கிறவர்களுடைய பேரை பூமியில் இராதபடி அற்றுப்போக பண்ண கர்த்தருடைய முகம் அவர்களுக்கு விரோதமாய் இருக்கிறது.

             ஏரோது ராஜா சபையில் சிலரை துன்பப்படுத்த தொடங்கினார். அப்போஸ்தலன் யாக்கோபை அவர் பட்டயத்தினாலே கொலை செய்தார். அது யூதர்களுக்கு மகிழ்ச்சி அளிக்க கூடிய செயலாக இருந்தபடியால் பேதுருவையும் கொலை செய்ய வேண்டும் என்று அவைரை பிடித்து சிறைச்சாலையிலே போட்டார். அன்பான கர்த்தருடைய ஜனமே.! ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ஆண்டவர் ஒவ்வொரு விதமான திட்டங்களை வைத்திருக்கிறார். உங்கள் வாழ்க்கையில் நீதி நேர்மையோடு நல்ல ஒரு தொழிலை செய்யக்கூடியது ஆண்டவருடைய திட்டமாக இருக்கலாம். கல்வி கற்று உயர்ந்த நிலையிலே தேவனுக்கு நற்சாட்சி பகரக்கூடியவர்களாக நீங்கள் காணப்படுவது ஆண்டவருக்கு சித்தமாக இருக்கலாம். ஆனால் அப்போஸ்தலர்களை பொறுத்தவரை  தேவனுக்கென்று பாடுகளை அனுபவிப்பது தேவனுடைய திட்டமாக இருந்தது. 

            யாக்கோபை பொருத்தவரை ஏரோதால் கொல்லப்படுவது தேவனுடைய சித்தமாக இருந்திருக்கலாம். பேதுருவைப் பொறுத்தவரை அவர் ரத்த சாட்சியாக மரிப்பது தேவனுடைய சித்தமாக இருந்த போதிலும் அதற்கான நேரமும் காலமும் வராதபடியினாலே ஏரோதின் செயல் தேவனுக்கு விரோதமான செயலாக, அது ஒரு தீமையாக காணப்பட்டது. ஆகவே தேவன் தன்னுடைய தூதனை அனுப்பி பேதுருவை விடுதலை செய்தார். 

            ஏரோது தேவனுடைய சித்தத்துக்கு விரோதமாக செயல்படுபவராக மட்டுமல்லாமல்  தேவனுக்கு மகிமை செலுத்தாதவராகவும் தேவனுக்குரிய மகிமையை எடுத்துக் கொள்பவராகவும் காணப்பட்டார். ஆகவே குறுகிய காலத்துக்குள் தேவதூதனால் அடிக்கப்பட்டவனாக புழு புழுத்து செத்தான்.

            பிரியமானவர்களே உங்களுக்கு விரோதமாக எத்தகைய தீமைகள் துன்மார்க்கரால் ஏற்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தாலும் கர்த்தர் உங்களை பாதுகாக்கிறவராக, துன்மார்க்கருக்கு விரோதமாக யுத்தம் செய்கிறவராக காணப்படுகிறார். ஆகவே கலங்காதீர்கள் தைரியமாக இருங்கள். கர்த்தர் பெரிய காரியங்களை செய்வார். 

Saturday, February 4, 2023

கர்த்தர் உடைந்த உள்ளங்களைத் தேற்றுகிறார்.!

இருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார்,
 அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறார்.
சங்கீதம் 147:3

             நம்முடைய கர்த்தர், தம்முடைய படைப்புகளும், கையின் கிரியைகளுமாகிய நம்மை கண்ணோக்கி பார்க்கிறவர், நம்முடைய கண்ணீரை காண்கிறவர், உள்ளத்தின் வேதனைகளை அறிந்திருக்கிறவர். எந்தவிதமான காரியமும் கர்த்தருடைய பார்வைக்கு மறைவானது அல்ல. நம்முடைய அனேக துக்கங்களை நாம் மற்றவர்களுக்கு தெரியாமல் மறைத்துக் கொள்ளலாம், ரகசியமாக கண்ணீர் விட்டு அழுது கொண்டிருக்கலாம், ஆனால் அவையெல்லாம் கர்த்தருடைய கண்களுக்கு முன்பதாக வெளியரங்கமாக இருக்கிறது. அவர் இருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிற தேவன். அவர் உடைந்த உள்ளங்களை தேற்றுகிறவர். நம்முடைய காயங்களை கட்டுகிறவர்.நாம் ஆராதிக்கிற தேவன் எவ்வளவு நல்ல தேவன். 

            யோசேப்பு எகிப்துக்கு கொண்டு போகப்பட்டார். மிகவும் துக்கமான சூழ்நிலை. அவன் நேசிக்க கூடிய சொந்த சகோதரர்களே அவருக்கு எதிராக செய்த சதி, துரோகம், கொலை முயற்சி இப்படி பலவிதமான காரியங்களினால் வந்த மனவேதனை, செய்யாத தவறுக்காக அவர் சிறைச்சாலையில் போடப்பட்டார். மற்றொரு மனிதனுடைய முகத்தில் விழிக்க முடியாத அளவுக்கு மிகுந்த நிந்தையை கொண்டு வரக்கூடிய குற்றச்சாட்டு அது.ஆனால் கர்த்தர் யோசேப்போடு இருந்தார். சூழ்நிலைகள் அப்படியே சென்றுகொண்டிருக்கவில்லை. வெகு விரைவிலே எகிப்தின் ராஜாவுக்கு முன்பதாக நிற்கக் கூடியவராக, முழு எகிப்து தேசத்துக்குமே அதிகாரியாக மாற்றப்பட்டார். 

            அடிமையாக ஆதரவற்றவராக எகிப்துக்கு வந்த அவருக்கு எகிப்து தேசத்தின் ராஜாவே முன் நின்று திருமணம் செய்து வைத்தார். என் வருத்தம் யாவையும் என் தகப்பனுடைய குடும்பம் யாவையும் நான் மறக்கும் படி தேவன் பண்ணினார் என்று சொல்லி மூத்த குமாரனுக்கு மனசே என்று பெயரிட்டார். நான் சிறுமைப்பட்டிருந்த தேசத்திலே என்னை பலுகப்பண்ணினார் என்று சொல்லி இளையவனுக்கு எப்ராயீம் என்று பெயரிட்டார். கர்த்தர் யோசேப்பை மகிழ்ச்சியினாலே நிரம்பினவராகவே மாற்றிவிட்டார்.

            நீங்கள் எப்படிப்பட்ட காரியங்களின் வழியாக கடந்து சென்றாலும் அது ஒரு முடிவு அல்ல என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். கர்த்தர் நியமித்த ஓட்டம் வரை நாம் ஓடிக்கொண்டே இருக்கப் போகிறோம். யோசேப்பை போல கடந்த நாட்களிலே உங்கள் வாழ்க்கையில் வந்த கசப்பான நினைவுகளை பார்த்து, துரோகங்களை பார்த்து, அநீதிகளை பார்த்து, நொறுங்குண்ட இருதயத்தோடு காணப்பட்டுக் கொண்டிருக்கலாம். எந்த காயமாக இருந்தாலும் எப்படிப்பட்ட வேதனையாக இருந்தாலும் கர்த்தர் உங்கள் காயங்களை கட்டுகிறவராக, அவர் உங்களை குணமாக்குகிறவராக இருக்கிறார். யோசேப்பின் வாழ்க்கையில் எல்லா துக்கங்களையும் மறக்க பண்ணின தேவன் உங்கள் வாழ்க்கையிலும் காணப்படக்கூடிய எல்லா துக்கங்களையும் நீக்கி போடுவார். அவர் உங்களை மகிழ்ச்சியினாலே நிரப்புவார். ஆகவே ஆண்டவரை மட்டுமே நோக்கிப் பாருங்கள் அவர் உங்களுக்காக அற்புதங்களை செய்வார்.

Friday, February 3, 2023

துன்பமான சூழ்நிலைகளிலும் கர்த்தரை தேடுங்கள்.! கனமடைவீர்கள்.

கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்தரிப்பேன்; 
அவர் துதி எப்போதும் என் வாயில் இருக்கும்.
சங்கீதம் 34:1

            கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்தரிப்பேன் என்ற வார்த்தை மிகவும் ஆழமான அர்த்தங்களை உடையது. சமாதானமான, சந்தோஷமான ஒரு வாழ்க்கை வாழும் போது ஆண்டவரைத் துதிப்பது மிகவும் எளிய ஒரு காரியம், ஆனால் நம்முடைய துன்பமான நேரங்கள்; நம்முடைய வாழ்க்கையில் நாம் கடந்து வந்த கசப்பான நினைவுகள்; துக்கங்களை சுமந்து கொண்டு ஆண்டவரைத் துதிப்பது என்பது மிகவும் கடினமான ஒரு காரியம். ஒரு கசப்பான பொருளை நாம் தவறுதலாக நம்முடைய வாயிலை போட்டுக் கொண்டால் சற்று நேரத்துக்குத் தான் அது அந்த கசப்பு சுவையை தரும். வாழ்க்கை தரக்கூடிய வலிகள், இழப்புகள், அடைந்த நம்பிக்கை துரோகங்கள் மூலமாக இருதயத்திலே பதிந்து போன கசப்பான நினைவுகள் நம்மை மிகவும் சோர்வடையச் செய்வதாக காணப்படும்.

            லூக்கா 2: 37-ல் அன்னாள் என்பதான தீர்க்கதரிசியை பார்க்க முடியும் ஏறக்குறைய 84 வயது உள்ள அந்த விதவை தேவாலயத்தை விட்டு நீங்காமல் இரவும் பகலும் ஜெபம் பண்ணி ஆராதனை செய்து கொண்டு இருந்தாள். அந்த விதவையின் வாழ்க்கையை நாம் பார்க்கும் போது ஆண்டவரை ஆராதிக்கத்தக்க மகிழ்ச்சியான ஒரு சூழ்நிலைகளையும் நாம் அங்கு பார்க்க முடியாது. வயது முதிர்ந்த  ஸ்திரி, இளம் வயதிலேயே விதவையானவள் இந்த இரண்டு சம்பவங்களுக்கும் இடைப்பட்ட நெடிய வாழ்க்கை எவ்வளவு துன்பங்களை கொண்டு வந்திருக்கலாம் என்பதை உங்களுடைய சிந்தனைக்கே விட்டு விடுகிறேன். தன்னுடைய வாழ்க்கை தனக்கு கொடுத்த கசப்புகளுக்கு அப்பால் அவள் கர்த்தரை நேசிக்க கூடியவளாக, இரவும் பகலும் அவரை ஆராதிக்க கூடியவளாக, ஸ்தோத்தரிக்க கூடியவளாக காணப்பட்டார்.அவளுக்கு இயேசு கிறிஸ்து தம்மை வெளிப்படுத்தினார். சர்வலோகத்தையும் படைத்த ஆண்டவர் ஒரு ஏழை விதவையின் கையிலே இருந்து புன்முறுவலோடு அவருடைய முகத்தை பார்க்க கூடிய அந்த காட்சியை நீங்கள் மன கண்களிலே சிந்தித்துப் பாருங்கள்.

             உலகத்தின் கடைசி நாளிலே நீதியுள்ள நியாயாதிபதியாக எழுந்தருளும் போது அநேக மனிதர்கள் ஆண்டவரிடத்தில் வந்து உம்மோடு கூட போஜன பானம் பண்ணினோமே, நீர் எங்கள் வீதிகளில் போதகம் பண்ணினீரே; உமது நாமத்தினாலே பிசாசுகளை துரத்தினோம் அல்லவா? வியாதியஸ்தர்களை சொஸ்தம் ஆக்கினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அனேக அற்புதங்களை செய்தோம் அல்லவா? என்றெல்லாம் சொல்லி இரக்கத்திற்காக கெஞ்சியும் பரலோகத்தை சுதந்தரித்துக் கொள்ள முடியாத போது, உலகப்பிரகாரமாக எந்த நன்மையும் காணாத துரதிஷ்டம் நிறைந்த  பெண் என்று மனிதர்களால் பார்க்கப்படத்தக்க வாழ்க்கை வாழ்ந்த இந்த ஏழை விதவை ஒரு சிறிய புன்முறுவலோடு ஆண்டவருடைய சமூகத்திலே ஆண்டவரை மகிமைப்படுத்தும் போது எவ்வளவு சந்தோஷமாக இருக்கும்.

            அநேக ராஜாக்கள் உலகத்தையே அடக்கி ஆண்ட சக்கரவர்த்திகள் இன்னும் பெரிய பெரிய மனிதர்களுக்கெல்லாம் கிடைக்காத ஒரு பாக்கியத்தை நாம் பெற்றுக் கொள்வதற்கான ஒரு வாய்ப்பு நம்முடைய கண்களுக்கு முன்பே இருக்கிறது. மரித்த மனிதர்கள் இனி ஒருபோதும் மனம் திரும்பி ஆண்டவரை அறிந்து கொள்ள, இரட்சிக்கப்பட முடியாது. ஆனால் அதற்கான வாசல் நம்முடைய வாழ்க்கையில் திறந்தே இருக்கிறது. ஆகவே வாழ்க்கையில் இருக்கக்கூடிய துக்கம் கசப்புகளை எல்லாம் தூக்கிப் போட்டுவிட்டு இந்த அனுகூலமான சூழ்நிலையை பயன்படுத்தி நாம் ஆண்டவரை ஸ்தோத்தரிக்க, துதிக்க, ஆராதிக்க தொடங்குவோம். கர்த்தர் நம்மை பாக்கியவான்களாக மாற்றுவார்.

Thursday, February 2, 2023

கர்த்தருடைய பார்வையில் நீங்கள் விசேஷித்தவர்கள்.!

நான் உன்னை பேர் சொல்லி அழைத்து நீ என்னை அறியாதிருந்தும் உனக்கு நாமம் தரித்தேன்.
ஏசாயா 45:4 

            நாம் ஆண்டவரை மிகவும் நெருங்கி அறிந்திருக்காவிட்டாலும் கூட கர்த்தர் நம்மை அறிந்திருக்கிறவராக, நம்மை பெயர் சொல்லி அழைக்கிறவராக காணப்படுகிறார். மனிதர்களுடைய முகத்துக்கு முன்பாக அவர்களது பெயரை சொல்லி கூப்பிடக்கூடிய அநேகர் முதுகுக்குப் பின்பாக வேறு பலவற்றையும் சொல்லி அவர்களை அழைப்பதுண்டு. அவை பொதுவாக அந்த மனிதர்களை மட்டம் தட்ட கூடிய பெயராக, ஏதோ ஒரு குறையை சொல்லிக் காட்டக்கூடிய ஒரு பெயராக காணப்படும். ஆனால் நம்முடைய கர்த்தர் அவற்றுக்கு அப்பால் நம்மை விசேஷித்த பெயர் சொல்லி அழைக்கக் கூடியவராக காணப்படுகிறார். 

            லூக்கா - 13:11 ல் - பதினெட்டு ஆண்டுகளாக பலவீனப்படுத்தும் ஆவியை கொண்ட ஒரு ஸ்திரீயை நாம் பார்க்க முடியும். அந்த ஸ்திரியினுடைய பெயர் அங்கு சொல்லப்படவில்லை. அந்த நற்செய்தியை எழுதிய சீஷன்கூட கண்டுபிடிக்க முடியாதபடி அவளுடைய பெயர் மறக்கப்பட்டு அவளுடைய பலவீனமே அவளுடைய அடையாளமாக மாறிப் போயிருந்தது. 
 18 ஆண்டுகளாக வேதனைப்படுத்திக் கொண்டிருக்கும் பிசாசின் கட்டுகள் ஒருபக்கம், உண்மையான பெயர் தெரியாத அளவுக்கு அவளுடைய வேதனையை அடையாளம் ஆக்கிய ஜனங்கள் ஒருபக்கம், மற்றொரு பக்கத்திலே ஓய்வு நாளிலே இந்த ஸ்திரியை இயேசு குணமாக்குவாரா ?அப்படியானால் எப்படியாகிலும் அவர் மீது நாம் குற்றம் சாட்ட வேண்டும் என்று சொல்லி பார்த்துக்கொண்டிருக்கக்கூடிய பரிசேயர்களின் கூட்டம் ஒரு பக்கம். இப்படி பலவிதமான சூழ்நிலைகளின் நடுவிலே இயேசுவும் அந்த ஸ்திரீயும் நின்று கொண்டிருந்தனர்.

            இயேசு அந்த ஸ்திரியை குறித்து "இதோ சாத்தான் 18 வருஷமாய் கட்டி இருந்த ஆபிரகாமின் குமாரத்தியாகிய இவளை ஓய்வு நாளில் இந்த கட்டில் இருந்து அவிழ்த்து விட வேண்டியது இல்லையா?" என்று அவர்களுக்கு எதிராக ஒரு கேள்வியை முன்வைத்தார். பரிசேயர்கள் பதிலின்றி பரிதவித்துக் கொண்டிருந்தார்கள்.  உலகத்தின் பார்வையிலே அவள் ஒரு நிமிர்ந்து பார்க்கக்கூடாத கூனியாயிருக்கலாம், ஆனால் நம்முடைய கர்த்தரும் இரட்சிகரமாய் இருக்கிற இயேசு கிறிஸ்துவினுடைய பார்வையிலே அவள் ஆபிரகாமின் குமாரத்தியாக காணப்படுகிறார். 

            உலகம் உங்களை பலவிதமான குறைகளை, பலவீனங்களை சொல்லி அடையாளப்படுத்த கூடும். ஆனால் நம்முடைய ஆண்டவர் உங்களைப் பார்த்து இவன் ஆபிரகாமின் குமாரன், இவன் என்னுடைய இரத்தத்தால் மீட்கப்பட்ட என்னுடைய பிள்ளை என்று உரிமை பாராட்டி அழைக்கிறவராக, உங்களை எல்லா நிந்தைக்கும் நீங்கலாக்கி விடுவிக்கிறவராக காணப்படுகிறார். ஆகவே கர்த்தர் உங்களைக் குறித்து என்ன சொல்லுகிறார் என்பதை கர்த்தருடைய வசனத்தின் மூலமாக தெரிந்து கொள்ளுங்கள்.  உலகம் உங்களைக் குறித்து சொல்ல கூடிய வசை மொழிகளை, ஏளனங்களை தூக்கி ஓரத்திலே போட்டு விடுங்கள். ஏனென்றால் ஆண்டவர் சொல்லுவது தான் நிறைவேறும், அதுதான் இறுதியானது, ஆகவே தைரியமாக இருங்கள் கர்த்தர் பெரிய காரியங்களை செய்வார்.

Wednesday, February 1, 2023

வேண்டிக்கொள்கிற உங்களுக்கு நன்மையானவைகளையே கர்த்தர் தருவார்.!

பரலோகத்தில் இருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்கிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?
மத்தேயு - 7:11 

            தம்முடைய பிள்ளைகள் தம்மிடத்திலே வேண்டிக் கொள்கிற காரியங்களில் கர்த்தர் மிகவும் கரிசனை உள்ளவராக இருந்து நன்மையான ஈவுகளை ஏற்ற வேளையிலே கொடுக்கக் கூடியவராக இருக்கிறார். நீங்கள் வெகு காலமாக ஏதோ சில காரியங்களுக்காக ஜெபித்துக் கொண்டிருக்கலாம், இவ்வளவு நாட்களாக நான் ஜெபித்தும் அந்த காரியத்தில் ஒரு மாற்றம் ஏற்பட வில்லையே, வெற்றியை நான் கைப்பற்றிக் கொள்ள முடியவில்லையே என்று நீங்கள் சிந்தித்து கொண்டு இருக்கலாம்.

            ஒரு நான்கு வயது குழந்தை, தகப்பனே உம்முடைய வாகனத்தை எனக்கு கொடும் நான் ஓட்டி பார்த்துவிட்டு தருகிறேன் என்று சொல்லி கேட்டால் எந்த ஒரு பாசமுள்ள தகப்பனும் அதை அனுமதிப்பதே இல்லை. இது என்னுடைய பிள்ளைக்கு நன்மையை தருமா என்று சிந்தித்து சிலவற்றை அவர் மறுக்கக் கூடியவராக இருக்கிறார். தகுதியான காரியங்களை ஏற்ற வேளையிலே அவர் கொடுப்பார் தீங்கான காரியங்களை எந்த தகப்பனும் மகன் கேட்கிறானே என்பதற்காக அந்த மகனுடைய வாழ்க்கையிலே அனுமதித்து விடுவதில்லை. தன் மகனுடைய எதிர்காலத்தைபற்றி  மகனை விட அதிகமாக தகப்பன் கவலைப்படுகிறவராக இருக்கிறார். 

            கர்த்தர் தம்முடைய பிள்ளைகளுக்கு எப்பொழுதுமே நல்ல ஈவுகளையே கொடுக்கிறவர். அனேக பக்தர்களுடைய வாழ்க்கையை நாம் பார்க்கும் போது, தேவன் அவர்களோடு இருந்தபோதிலும் அவர்களுடைய வாழ்க்கையில் சில நெருக்கடியான காலகட்டங்களை அவர்கள் கடந்து வந்ததை நாம் பார்க்க முடியும். அந்த நேரங்களில் தேவன் அவர்களோடு இருந்த போதிலும் அவர்களுடைய ஜெபத்திற்கு பதில் இல்லாமல் இருப்பதைப் போன்ற தோற்றம் காணப்பட்டிருக்கிறது. 

யோசேப்புடைய பல வர்ண அங்கியை சகோதரர்கள்  பறித்துக் கொண்டார்கள்: அங்கி திருப்பி கிடைத்தால் நன்றாக இருக்குமே என்று யோசித்து இருப்பார். 

யோசேப்பை தண்ணீரற்ற கிணற்றிலே தூக்கி போட்டார்கள்:அங்கி போனாலும் பரவாயில்லை கிணற்றிலிருந்து தப்பி விட மாட்டோமா என்று எண்ணியிருப்பார்.

அவர் அடிமையாக விற்கப்பட்டார்: எப்படியாவது இந்த சூழ்நிலையில் இருந்து நான் தப்பி என்னுடைய தகப்பன் வீட்டை அடைந்தால் நன்றாக இருக்குமே என்று அவர் கலங்கியிருப்பார்.

யோசேப்பு அடிமையாக எகிப்திலே வாழ்ந்தார்: அந்த சூழ்நிலையில்  என்றாவது ஒருநாள் எனக்கு பலவர்ணஅங்கி தைத்துதந்த அந்த பாசமான தகப்பனுடைய முகத்தை பார்க்க முடியுமா என்று ஏங்கி இருப்பார்.

            அவர் கடந்து வந்த மேற்குறிப்பிட்ட எல்லா சூழ்நிலைகளிலும் அவர்  ஆண்டவரை நோக்கி கூப்பிட்டிருப்பார். அவர் விரும்பிய முடிவுகளை அடைவதற்காக அவர் ஜெபித்து இருப்பார். தேவன் அவரோடு இருக்கக்கூடியவராக இருந்தும், கர்த்தரிடமிருந்து உயர்ந்த சொப்பனங்களை பெற்றுக் கொள்ளக் கூடியவராக இருந்தபோதிலும் கூட அவருடைய ஜெபம் கேட்கப்படாததைப்போலக் காணப்படுகிறது.  கேட்கப்படாத ஜெபங்கள் அவரை எகிப்து சாம்ராஜ்யத்தின் சிங்காசனத்திற்கு முன்பாக நிறுத்த கூடியதாக முழு எகிப்துக்கும் அதிகாரியாக்கக் கூடியதாக மாறியது. 

            ஏதோ சில காரியங்களுக்காக வெகு நாட்களாக நீங்கள் ஜெபித்திருக்கலாம், ஜெபித்த காரியங்கள் உங்களுடைய கண்களுக்கு முன்பதாகவே தோல்விகளாக முடிந்திருக்கலாம். நான் வெகுவாக ஜெபித்தும் அந்த காரியம் நடக்கவில்லையே, நான் வெகுவாக ஆண்டவரை நோக்கி கூப்பிட்டும் கர்த்தர் கொடுக்கவில்லையே என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்களா.?  ஒரு தகப்பனுக்கு தன்னுடைய பிள்ளையை குறித்து ஒரு எதிர்கால திட்டம் உண்டு. நீங்கள் இன்று இருக்கக்கூடிய சூழ்நிலைகளை உங்களால் புரிந்து கொள்ள முடியாவிட்டாலும்கூட கர்த்தர் உங்களுக்கு தரப்போகும் நல்ல ஈவுகளைப் பார்த்து நீங்கள் ஆண்டவரை மகிமைப்படுத்த கூடியதான சூழ்நிலை உங்களுடைய வாழ்க்கையிலே நிச்சயமாக உருவாகும். ஆகவே எந்த சூழ்நிலையிலும் சோர்ந்து போகாதீர்கள். தேவன் பெரிய காரியங்களை செய்வார்.

உங்களுக்கு எதிரானவர்கள் சத்தியத்துக்கு எதிரானவர்கள்.!

சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கிவைக்கிற மனுஷருடைய எல்லாவித அவபக்திக்கும் அநியாயத்துக்கும் விரோதமாய், தேவகோபம் வானத்திலிருந்து வெளிப்படுத்தப்...