Tuesday, January 31, 2023

கர்த்தர் தரும் நன்மைகள் நிரந்தரமானவை.!

 என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்.
எரேமியா 31:14

            குறிப்பிட்ட சூழ்நிலையில் ஆகார் மற்றும்  அவளது குமாரன் ஆகியோர் ஆபிரகாமின் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டனர். ஆபிரகாம் அதிகாலையிலே எழுந்து ஒரு துருத்தி தண்ணீரையும் அப்பத்தையும் எடுத்து ஆகாரிடத்தில் கொடுத்து அவர்களை வழி அனுப்பி வைத்தார். அவர்கள் எங்கு செல்வது என்று தெரியாமல் பெயர்சேபா வனாந்தரத்தில் அலைந்து திரிந்தார்கள். துருத்தியிருந்த தண்ணீர் முழுவதுமாக செலவழிந்து போயிற்று. இப்போது அவர்களது உயிரை காப்பாற்றிக்கொள்ள தண்ணீர் தேவை. ஆகாரை விட  ஆகாரின் குமாரனாகிய இஸ்மாயிலுக்கு  அந்தத் தேவை  அதிகமாக இருந்தது. 

            தன் சொந்த குமாரனுக்கு உதவி செய்ய முடியாதவளாக ஆகார் திகைத்து நின்று கொண்டிருந்தாள். தன்னுடைய குமாரனை ஒரு செடியின் நிழலில் விட்டு விட்டு சற்று தொலைவில் சென்று, என் குமாரன் சாவதை நான் பார்க்க மாட்டேன் என்று சப்தமிட்டு அழத்துவங்கினாள். பிள்ளையின் சத்தத்தை கர்த்தர் கேட்டார் என்பதாக வசனம் சொல்லுகிறது. யார் கூப்பிடுகிறார்கள்? எவ்வளவு சத்தமாக கூப்பிடுகிறார்கள்? என்பதை எல்லாம் விட யார் உண்மையான மனவேதனையோடு  கூப்பிடுகிறார்கள் என்பது இங்கு அதிக முக்கியத்துவத்தை பெறுகிறது. 

            மனிதர்கள் தங்களுடைய தகுதிக்கு ஏற்ப  தங்களால் இயன்ற அளவு உதவியை செய்வார்கள். அந்த உதவி ஒருவேளை உதவி பெறுபவரின் தேவையை நிறைவேற்றக் கூடியதாக இருக்கும். அநேக நேரங்களில் அவ்வாறு இருப்பதில்லை.  மனிதர்கள் கொடுக்கும் வாக்குறுதிகள் அவற்றை நம்பி பயணம் செய்யக் கூடியவர்களுக்கு அநேக நேரங்களில் நடுவழியில் சிக்கலை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கக்கூடும். மனிதர்கள் சில நேரங்களில் வாக்கு மாறக் கூடியவர்கள். சில நேரங்களில் நமக்கு உதவி செய்ய விரும்புபவர்கள் நினைக்கக்கூடிய விதத்திலே காரியங்கள் இருக்காது. ஏதோ ஒரு விதத்தில் அவர்கள் உதவி செய்ய முடியாதவர்களாக மாற்றப்பட்டு விடுவார்கள்.

             திரளான செல்வங்களை உடைய ஆபிரகாமால் குறிப்பிட்ட அந்த சூழ்நிலையில் கொடுக்க முடிந்தது ஒரு துருத்தி தண்ணீரும்  அப்பவும் மட்டுமாக இருந்ததை நாம் கவனிக்க முடியும்.  பிள்ளையின் சத்தத்தை கேட்ட கர்த்தர் ஒரு துரவைக் காட்டினார். ஆகார் ஓடிச்சென்று அந்த துரவிலிருந்து துருத்தியிலே தண்ணீரை நிரப்பி தன் மகனுக்கு கொடுத்தார். ஆபிரகாமால் ஒரு துருத்தி தண்ணீர் தான் கொடுக்க முடிந்தது. அது வனாந்தரத்தில் தீர்ந்தும் போய்விட்டது. கர்த்தர் காட்டின துரவிலிருந்து ஆயிரக்கணக்கான துருத்திகளை நிரப்பிக் கொள்ள முடியும். 

ஆபிரகாம் கொடுத்த நீர் தீர்ந்து போய்விடக் கூடியது ஆனால் கர்த்தர் கொடுத்த அந்த துரவு வற்றாத நீரூற்றாக காணப்படக்கூடியது. எத்தனை காலம் அந்த இடத்திலே குடியிருந்தாலும் அத்தனை காலத்துக்கும் போதுமான தண்ணீர் அந்த துரவிலே வந்து கொண்டே இருக்கும். கர்த்தர் தரக்கூடிய உதவிகளும் இப்படிப்பட்டவைதான் அது ஏதோ கொஞ்ச நேரத்திற்கு என்று அல்லாமல் அது நிரந்தரமாக நம்முடைய வாழ்க்கையிலே காணப்படும். 

            நொறுங்குண்ட இருதயம் உள்ளவர்களுக்கு கர்த்தர் சமீபமாய் இருக்கிறார்.  ஆண்டவர்  உங்களுக்கு சமீபமாக இருக்கிறார். நிச்சயமாகவே நிரந்தரமான ஒரு தீர்வை கட்டளையிடுவார். 

Monday, January 30, 2023

பொறுமையோடு காத்திருங்கள். பெரிய நன்மைகள் நிச்சயம்.!

கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன். அவர் என்னிடமாய் சாய்ந்து என் கூப்பிடுதலைக் கேட்டார்.
சங்கீதம் 40:1 

            நம்முடைய தேவன் தம்முடைய பிள்ளைகளின் கூப்பிடுதலை செவிகொடுத்துக் கேட்கும் தேவன். நம்முடைய வாழ்க்கையிலே கர்த்தருடைய கிரியைகள், செயல்கள் நமக்கு அனுகூலமாக வெளிப்படும் படிக்கு நாம் பொறுமையோடு காத்திருக்க வேண்டியது அவசியம்.  நாம் பொறுமையோடு இருக்கும்போது கர்த்தர் நமக்கு நன்மை செய்வார் என்பதான விசுவாசத்தை உடையவர்களாக இருக்கிறோம் என்பதை நம்மையும் அறியாமல் வெளிப்படுத்துகிறோம். ஒரு காரியம் நடக்கவே வாய்ப்பு இல்லை என்று தெரிந்த பிற்பாடு அது நடக்கும் என்று யாரும் காத்திருப்பதில்லை. நிச்சயமாக தேவன் நன்மையை செய்வார் என்ற  விசுவாசம் நமக்கு இருப்பதால் மட்டுமே நம்மால் பொறுமையாக இருக்க முடிகிறது.

             கர்த்தருக்காக பொறுமையோடு காத்திருந்த அநேகர் அவர்களுடைய தகுதிக்கும் திறமைக்கும் அப்பாற்பட்ட உயர்வுகளை கர்த்தருடைய கரத்திலிருந்து பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.  யோசேப்புக்கு தகப்பன் கொடுத்த பல வருட அங்கியை சகோதரர்கள் பிடுங்கிக் கொண்டார்கள். அவனை குழியிலே போட்டார்கள். 20 வெள்ளிக்காசுக்கு அடிமையாக விற்று போட்டார்கள். அவர் எகிப்துக்கு அடிமையாக கொண்டு செல்லப்பட்டார். எஜமான் கொடுத்த அடிமை வஸ்திரத்தை எஜமானின் மனைவியே பிடுங்கிக் கொண்டாள். செய்யாத தவறுக்கு அவர் குற்றம் சாட்டப்பட்டவராக தண்டனை அனுபவிக்க கூடியவராக மாற்றப்பட்டார். சிறைச்சாலையில் போடப்பட்டார். கர்த்தரோ யோசேப்போடு இருந்தார் என்று வேதம் சொல்லுகிறது. 

            என்றைக்கு விடுதலை என்று தெரியாவிட்டாலும் கர்த்தர் அவரோடு இருக்கிறார் என்ற விசுவாசத்தோடு அந்த இடத்தில் உண்மையுள்ளவராக காணப்பட்டார். குறிப்பிட்ட நாள் வந்தபோது  கர்த்தர் அவருக்கு ராஜரிக வஸ்திரத்தை கொடுத்தார் கடைசிவரை யாரும் அதை பிடுங்கிக் கொள்ள முடியவில்லை. ராஜரிகம் பண்ணுகிறவராக முழு எகிப்து தேசத்திற்குமே அதிகாரியாக அவர் மாற்றப்பட்டார். 

            யோசேப்பை போல உங்கள் வாழ்க்கையில் நீங்கள் பெற்றிருக்கக் கூடிய நன்மைகளை அநியாயமாக இழந்து போனவர்களைப் போல நீங்கள் காணப்பட்டாலும், என்ன இழப்புகள் உங்களுடைய வாழ்க்கையில் நேரிட்டிருந்தாலும் கர்த்தர் அனைத்தையும் கவனித்துக் கொண்டிருக்கிறார் நல்ல ஈவுகள் உங்களுடைய வாழ்க்கையிலே கடந்துவரும் யாரும் பறித்துக் கொள்ள முடியாதபடி சிறப்பு வாய்ந்த காரியங்களை கர்த்தர் உங்களுக்கு நல்ஈவாக தருவார்.  

            கர்த்தர் உங்களுக்கென்று வைத்திருக்கக்கூடிய உயர்வுகள் நிச்சயமாகவே ஏற்ற வேளையிலே நிறைவேறும். அதை கொடுக்கிறவர் கர்த்தராக இருக்கிறபடியினாலே அதை யாரும் உங்களிடத்தில் இருந்து பறித்துக் கொள்ள முடியாது.ஆகவே கர்த்தருக்கென்று பொறுமையோடு காத்திருங்கள். கர்த்தர் உங்களுக்கென்று ஆயத்தப்படுத்தி வைத்திருக்க கூடிய பெரிய உயர்வுகளை நிச்சயமாகவே பெற்றுக் கொள்வீர்கள். 

Sunday, January 29, 2023

எந்தப் பிரயாசத்துக்கும் பலன் உண்டு.! அவர் அளிக்கும் பலன் அவரோடே கூட வருகிறது.

....இதோ அவர் அளிக்கும் பலன் அவரோடே கூட வருகிறது; அவர் கொடுக்கும் பிரதிபலன் அவருடைய முகத்துக்கு முன்பாக செல்லுகிறது.  ஏசாயா 40:10

            பிரயாசப்படுகிற எல்லா மனிதர்களும் ஏதோ ஒரு பலனை எதிர்பார்த்து தான் பிரயாசப்படுகிறார்கள். ஒரு மரத்தை நடுகிறவர்கள் அந்த மரத்திலிருந்து ஒரு கனியை எதிர்பார்க்கிறார்கள். விதையை விதைக்கிறவர்கள் அறுவடையை எதிர்பார்க்கிறார்கள். எந்த பிரயாசங்களை மேற்கொண்டாலும் ஒரு குறிப்பிட்ட காலம் வரைக்கும் அதன் பலனை பெற்றுக் கொள்ளும்படி காத்திருக்க நேரிடுகிறது. 

             தேவனுடைய ஜனங்கள் பரலோக ராஜ்யத்திற்கென்று படக்கூடிய அனேக பிரயாசங்கள் மனித கண்களுக்கு நகைப்புக்குரிய காரியமாக காணப்படலாம். நோவா என்று ஒரு மனிதர் இருந்தார் அவர். அந்த காலகட்டத்திலே வாழ்ந்த எல்லா மனிதர்களையும்விட நீதிமானாக காணப்பட்டார். அந்த காலத்திலே இருந்த ஜனங்கள் தேவனை துக்கப்படுத்தக்கூடிய விதத்திலே அநேக காரியங்களை செய்தார்கள். ஆகவே தேவன் இந்த உலகத்தை அழிக்கும்படி முடிவு செய்தார். நோவாவை கூப்பிட்டு அநேக காரியங்களை அவர் சொன்னார். அதன்படி நோவா செயல்பட தொடங்கினார். 

            அவர் கொப்பேர் மரத்தினாலே ஒரு பேழையை உருவாக்கினார். சகல விதமான மிருகங்களையும் அந்த பேழைக்குள்ளாக அவர் சேர்த்துக் கொண்டார். தேவையான உணவுப் பொருட்களை எல்லாம் பேழைக்குள்ளே சேர்த்துக் கொண்டார். நோவாவின் செயல்கள்  மனிதர்களுடைய கண்களுக்கு முன்பாக வேடிக்கையாக வினோதமானதாக இருந்திருக்கும். ஒரு பைத்தியக்காரனை போல அநேகராலே பார்க்கப்பட்டிருந்திருப்பார் . ஆனால் அவர் கர்த்தர் சொன்ன காரியங்களை மாத்திரம் கருத்தாக செய்து கொண்டிருந்தார். குறிப்பிட்ட நாள் வந்தபோது நோவாவும் குடும்பத்தினரும் கர்த்தருடைய வார்த்தையின் படியே அந்த பேழைக்குள்ளாக ஏறிக் கொண்டார்கள். உலகம் முழுவதும் தண்ணீரால் நிரம்பத்தக்கதாக பேரழிவு உண்டானது. நோவாவும் குடும்பமும் அந்த பேழையிலிருந்த ஜீவஜந்துக்களும் மாத்திரம் உயிர் தப்பினார்கள். 

            இன்றைக்கும் கூட நம்முடைய செயல்கள் உலக பிரகாரமான மனிதர்களுடைய கண்களுக்கு முன்பதாக வேடிக்கை பொருளைப் போல காணப்படலாம். கர்த்தரை நோக்கி ஜெபிக்க கூடிய அனுபவம்; வேதத்தை அதிகமாக வாசித்து தியானிக்க கூடிய அனுபவம்; ஓய்வு நாட்களிலே நேரத்தை வீணாக செலவிடாமல் தேவனுடைய ஆலயத்திற்கு சென்று அவரை ஆராதிக்க கூடிய  அனுபவம். இப்படிப்பட்ட காரியங்கள் உலக வாழ்க்கையின் இன்பங்களை நுகரத்தெரியாத மனிதர்கள் என்று தேவனுடைய பிள்ளைகளை பார்த்து உலக மனிதர்கள் சொல்லத்தக்கதான சூழலை உருவாக்குகிறது. ஆனாலும் நீங்கள் இப்படிப்பட்ட காரியங்களை கேட்கும்போது நாம் திரும்பிப் பார்க்க வேண்டிய இடம் நோவாவின் வரலாறு.

             அன்றைய நோவா தாத்தாவைப் போல நம்முடைய செயல்கள் இன்றைக்கு நாம் பேழையை கட்டிக் கொள்ளக்கூடிய ஒரு அனுபவமாக இருக்கிறது. நாள் ஒன்று வரும் அந்த நாளிலே நாம் இன்று பட்ட பிரயாசங்கள் நம்மை நித்திய நியாயத்தீர்ப்புக்கு விலக்கி மீட்டுக் கொள்ளக் கூடியதாக காணப்படும். ஆகவே சபை கூடி விடுதலை சிலர் விட்டு விடுகிறது போல நாமும் விட்டு விடாமல் ஒருவருக்கொருவர் புத்தி சொல்லக்கடவோம். நாம் இன்று கர்த்தருக்கு என்று செய்யக்கூடிய காரியங்களின் பலனை உணராவிட்டாலும் கூட நிச்சயமாகவே ஆபத்து காலங்களிலே கர்த்தருடைய பாதுகாப்பு நம்மை காக்கக்கூடியதாக இருக்கும் ஆகவே உலக கவலைகளை மறந்து தைரியமாக கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம். கர்த்தர் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக.

Saturday, January 28, 2023

கொடியவர்களின் சீறலின் நடுவேயும் எளியவர்களுக்கு திடனளிப்பவர்.!

 கொடூரமானவர்களின் சீறல் மதிலை மோதியடிக்கிற பெருவெள்ளத்தை போல் இருக்கையில் நீர் ஏழைக்கு பெலனும் நெருக்கப்படுகிற எளியவனுக்கு திடனும் வெயிலுக்கு ஒதுங்கும் நிழலுமானீர். ஏசாயா -25 :4

            வானத்தை பூமியையும் சகலத்தையும் சர்வ வல்லமையுள்ள தேவன் துன்பப்படுகிற பிள்ளைகளுக்கு பெலனாக திடனாக வெயிலுக்கு ஒதுங்கும் நிழலாக இருக்கிறார் என்றால் எவ்வளவு பெரிய பாதுகாப்புக்கு உள்ளாக அவர்கள் இருக்கிறார்கள் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும் . ஆகவே அய்யோ எல்லாரும் எதிராக இருக்கிறார்களே என்றெல்லாம் எண்ணி அங்கலாக்க வேண்டியதில்லை. கர்த்தர் உங்களுக்கு பாதுகாப்பு அரணாக காணப்படுகிறார். 

            இஸ்ரவேல் தேசத்தின் எல்லைகளில் எல்லாம்  ஓடி ஓடி ஒளிந்து சோர்ந்து போனவனாக பெலிஸ்தியரின் தேசத்து காத்தின் ராஜாவின் இடத்தில் சென்று அடைக்கலம் புகுந்தார். காத்தின் ராஜாவாகிய ஆகீஸ் அவருக்கு சிக்லாக் என்னும் பகுதியை குடியிருக்கும் படி கொடுத்தார். வெகு நாட்கள் நன்றாக சென்று கொண்டிருந்தது குறிப்பிட்ட ஒரு சூழ்நிலையிலே தாவீது காத்தின் ராஜாவை சந்திக்கச் சென்று திரும்பி வந்து பார்க்கும்போது சிக்லாக் சுட்டெரிக்கப்பட்டதாக அதில் உள்ள அனைத்து பொருட்களும் கொள்ளையிடப்பட்டதாக தாவீது மற்றும் அவரது மனிதர்களுடைய குடும்பத்தினர் குழந்தைகள் அனைவரும் சிறைபிடிக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டிருப்பதை கண்டு அதிர்ந்து போனார்கள். தாவீதுக்கு என்ன பிரச்சனையோ அதே பிரச்சினை தான் தாவீதோடு கூட இருந்த 600 பேருக்கும் காணப்பட்டு இருக்கும் ஆனால் அவர்கள் எல்லாம் தாவீதுக்கு எதிராக முறுமுறுக்கக் கூடியவர்களாக தாவீதை கல்லறிய வேண்டும் என்று ஆலோசனை செய்பவர்களாக மாறி போனார்கள். 

            சில சூழ்நிலைகள் எப்பேர்பட்ட நண்பர்களையும் பகைவர்களாக மாற்றி விடக் கூடியது எப்பேர்பட்ட உறவினர்களையும் விரோதிகளாக மாற்றி விடக் கூடியது. இங்கே 600 பேர் ஒருமித்து தாவீதுக்கு எதிராக எழும்பி இருக்கிறார்கள். தாவீது தனி ஒருவனாக அவர்கள் நடுவிலே காணப்படுகிறார். தாவீதோடிருந்த 600 பேரும் இஸ்ரவேலின் பிரமுகர்களோ பிரபுக்கள் வம்சத்தை சார்ந்தவர்களோ அல்லர். அவர்கள் ஒடுக்கப்பட்டவர்களாக கடன்பட்டவர்களாக இஸ்ரேலில் தேசத்துக்குள்ளே குடியிருக்க முடியாதவர்களாக தாவீதோடு கூட சேர்ந்து கொண்டவர்கள். ஆனால் சூழ்நிலை தாவீதிடத்தில் இருந்து பெற்ற நன்மைகளை எல்லாம் மறக்க பண்ணி அவர்களை சத்துருக்களாக மாற்றிவிட்டது.  

            யாரோ சிலர் நமக்கு எதிராக எழும்புகிறார்கள் என்பதெல்லாம் நம்மை பெரிய அளவில் பாதிப்பதில்லை ஆனால் நாம் நம்பியிருக்கக்கூடிய நம்மை நேசிக்க கூடிய மனிதர்கள் நமக்கு எதிராக எழும்புவது நம்மை மிகவும் சோர்வடையச் செய்வதாகக் காணப்படும். இந்த இக்கட்டான சூழ்நிலையிலே தாவீது தன்னை கர்த்தருக்குள் திடப்படுத்திக் கொண்டார். அவ்வளவுதான் கல்லெறிந்து கொல்ல வேண்டும் என்றெல்லாம் தாவீதுக்கு எதிராக ஆலோசனை பண்ணிக் கொண்டிருந்த மனிதர்கள் தாவீதோடு கூட சேர்ந்து சத்துருக்களை பின்தொடர்ந்து செல்ல துவக்கினார்கள். அவர்கள் இழந்த அனைத்தையும் திருப்பிக் கொண்டார்கள்.

             பெருவெள்ளத்தைப் போல உங்களை மோதி அடிக்கக்கூடிய சூழ்நிலைகள், சுற்றி இருக்கக்கூடிய அனைவருமே சத்துருக்களாக மாறக்கூடிய சூழ்நிலைகளின் வழியாக கூட நீங்கள் கடந்து போனாலும் கர்த்தரை மட்டுமே நோக்கி பாருங்கள். அவர்கள் அவரை நோக்கி பார்த்து பிரகாசம் அடைந்தார்கள் என்று வேதம் சொல்லுகிறது.

Friday, January 27, 2023

உங்களைக் குறித்த கர்த்தருடைய திட்டத்தை, யாரோ சிலருடைய தவறான முடிவுகள் மாற்றுவதில்லை.!

மனுஷனுடைய இருதயத்தின் எண்ணங்கள் அநேகம்; 
ஆனாலும் கர்த்தருடைய யோசனையே நிலை நிற்கும்.
நீதிமொழிகள் 19:21

            மனிதர்கள் ஒவ்வொருவரும் தங்களை குறித்தும் தாங்கள் சார்ந்த மற்றவர்களை குறித்தும் பல விதமான எண்ணங்களை வைத்திருப்பார்கள். சிலர் மற்றவர்களுடைய உயர்வுக்கு ஏதுவான எண்ணங்களை மனதில் வைத்துக் கொண்டிருக்கக் கூடிய நேரத்தில் வேறு சிலர் எப்படி தீங்கு செய்வது என்பதான கொடிய எண்ணங்களோடும் காணப்படுகின்றனர். கர்த்தருடைய யோசனையே நிலைநிற்கும் என்று வேதம் சொல்லுகிறது. கர்த்தருடைய யோசனைகளுக்கு விரோதமாக சுய திட்டங்களை முன்னிறுத்தக்கூடியவர்கள் தங்களை அறியாமலே தங்களுக்கு பெருத்த அழிவையும் இழப்புகளையும் ஏற்படுத்திக் கொள்கின்றனர். 

            அப்போஸ்தலனாகிய பவுல் ராயனுக்கு முன்பாக நிற்க வேண்டும் என்பது தேவனுடைய சித்தமாக இருந்தது. அவர் ஒரு நூற்றுக்குஅதிபதியின் தலைமையில் கப்பலில் இத்தாலியாவை நோக்கி கொண்டுசெல்லப்பட்டுக் கொண்டிருந்தார். அவர் அந்த கப்பலில் இருந்தவர்களுக்கு தேவனுடைய ஆலோசனையை தெரிவித்தார். மனுஷரே இந்த யாத்திரையினாலே சரக்குக்கும் கப்பலுக்கு மாத்திரமல்ல நம்முடைய ஜீவனுக்கும் வருத்தமும் மிகுந்த சேதமும் உண்டாயிருக்கும் என்று காண்கிறேன் என்பதாக அந்த எச்சரிக்கை இருந்தது.

            ஆதி கிறிஸ்தவர்களுக்கும் நமக்கும் தான் பவுல் ஒரு மிகப்பெரிய அப்போஸ்தலர். நூற்றுக்கு அதிபதிக்கும் கப்பல் எஜமானுக்கும் மாலுமிக்கும் எல்லாம் அவர் ஏதோ ஒரு சாதாரண கைதி தானே!. தேவனுடைய ஆலோசனை, கர்த்தருடைய எச்சரிப்பு புறக்கணிக்கப்பட்டது. கப்பல் எஜமான் மற்றும் மாலுமின் யோசனையின்படி அவர்கள் முன்னேறிச் செல்ல தொடங்கினார்கள். சிறிது நேரத்தில் யூரோகிலிதோன் என்னும் கொடுங்காற்று அந்த கப்பலில் மோதியது.  கப்பலில் இருந்தவர்கள் மரண பயத்தினால் நிறைந்தவர்களாக, நடுக்கத்தோடும், திகிலோடும் உணவு கூட அருந்தாமல் நடுங்கிக் கொண்டிருந்தார்கள். தேவனுடைய யோசனைக்கு எதிரான ஒரு யோசனை அந்த யோசனை கூறின மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் கப்பலில் இருந்த அனைவருக்கும் ஆபத்தாக முடிந்தது. 

            அந்த நேரத்தில் பவுல் எழுந்து அனைவருக்கும் ஆறுதலையும் தைரியத்தையும் கொடுக்கக்கூடிய வார்த்தைகளை சொன்னார். காரணம் என்ன? கர்த்தருடைய தூதன் ராத்திரியிலே பவுலை சந்தித்து பவுலே பயப்படாதே , நீ ராயனுக்கு முன்பாக நிற்க வேண்டும். இதோ உன்னுடனே கூட யாத்திரைப் பண்ணுகிற யாவரையும் தேவன் உனக்கு தயவு பண்ணினார் என்றான். 

            கர்த்தருடைய வார்த்தையின் படியே கப்பல் ஒரு தீவின் அருகாமையில் சென்று தரைதட்டியது. பலத்த அலைகளினாலே கப்பலின் ஒரு பகுதி உடைந்து போனது. அதில் இருந்த பயணிகள் பவுல் உட்பட அனைவரும் தீவில் கரைஏறி தங்களை காப்பாற்றிக் கொண்டார்கள்.   தேவனுடைய ஆலோசனையை புறக்கணித்து தன்னுடைய ஆலோசனையின் படி செயல்பட முடிவெடுத்த கப்பல் எஜமான் தன் கப்பலை இழந்து நிராதரவாக நின்று கொண்டிருந்தார்.   அங்கிருந்து சில காலங்களுக்குப் பின்பு பவுல் வேறு கப்பலில் ஏறி ரோமை நோக்கி சென்றார்.  அவர் வெற்றிகரமாக தேவன் தனக்கு நிர்ணயித்து வைத்திருந்த அந்த இலக்கை அடைந்தார். தேவனுடைய திட்டம் நிறைவேறியது.

             உங்களுடைய சூழ்நிலைகளை பார்த்து ஐயோ! கர்த்தருடைய யோசனை என்னுடைய வாழ்க்கையில் நிறைவேற முடியாதபடி அனேகர் தடையாக இருக்கிறார்கள். மற்றவர்களுடைய தவறான முடிவுகளால் நான் பாதிப்படைந்து கொண்டிருக்கிறேனே என்றெல்லாம் எண்ணி கலங்காதிருங்கள். தைரியமாக கர்த்தரை நோக்கிப் பாருங்கள் கர்த்தர் உங்களுக்காக தன்னுடைய கிரியைகளை வெளிப்படுத்துவார். நிச்சயமாகவே கர்த்தர் உங்களுக்கு என்று வைத்திருக்கக்கூடிய உயர்வுகளை அடைவீர்கள்.

Thursday, January 26, 2023

கர்த்தருடைய வழியில் நடந்தால் வெற்றி மட்டுமே.!

கர்த்தாவே உம்முடைய வழிகளை எனக்குத் தெரிவியும்; உம்முடைய பாதைகளை எனக்கு போதித்தருளும்.
சங்கீதம் 25 :4 

             சேனைகளின் கர்த்தரை நோக்கி பக்தன் தாவீது ஏறெடுக்கும் ஒரு விண்ணப்பமாக இந்த வசனம் காணப்படுகிறது. கர்த்தருடைய வழிகள் ஆச்சரியமானவைகள்; அவை மனித சிந்தைக்கு அப்பாற்பட்டவைகள்; திசை தெரியாமல், முன்னேற வழி தெரியாமல் அங்கலாய்த்துக் கொண்டிருக்கும் தம்முடைய பிள்ளைகளுக்கு அவை காரிருளில் வெளிச்சம்போல நம்பிக்கை தரக்கூடியவை; கண்ணீரைத் துடைத்து ஆறுதல் தரக்கூடியவை.

             இஸ்ரவேல் ஜனங்கள் 400 ஆண்டு அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டவர்களாக கானானை நோக்கி சென்று கொண்டிருந்தார்கள். விடுதலை கொடுத்து விட்டாலும் கூட பார்வோனால் அந்த விடுதலையை சகித்துக் கொள்ள முடியவில்லை. அடிமைகள் சென்று விட்டால் இனி யார் சம்பளம் இன்றி கடினமான வேலைகளை செய்வார்? அடிமைகள் தங்களுக்கென்று ஒரு ராஜ்ஜியத்தை உருவாக்கி அதில் சந்தோஷமாக சுதந்திரமாக வாழ்வதா? என பல்வேறு கேள்விகள் அவரது மனதை துளைத்தெடுத்தது. அடிமைகளிடத்தில் ஏது ஆயுதம் ? அடிமைகளுக்கு ஏது போர் பயிற்சி? ஆகவே நிச்சயமாகவே மேற்கொண்டு விடலாம் என்று எண்ணி இஸ்ரவேல் ஜனங்களை பின்தொடர்ந்து செல்ல முடிவு செய்தார். ஆனால் அவர் சிந்திக்க மறந்த ஒரு காரியம் இருந்தது.இஸ்ரவேல் ஜனங்கள் தங்களுக்கென்று தாங்கள் ஏற்படுத்திக் கொண்ட பாதையில் செல்லவில்லை. மாறாக கர்த்தர் காட்டின வழியில் கானானை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள் என்பதே அது.

 பார்வோனும் சேனையும் இஸ்ரவேலை நெருங்கினது. முன்னால் செங்கடல், பின்னால் பார்வோனும் சேனையும் என்ற இக்கட்டான நிலையில் காணப்பட்டார்கள். ஆண்டவர் தங்களுக்கு அடுத்து என்ன செய்யப் போகிறார் என்பதை அறியாததினாலே அவர்கள் கலங்கிப் போயிருந்தார்கள்.  மோசே கர்த்தரை நோக்கி கூப்பிட்டார். கர்த்தர் காட்டின பாதையில் நடந்து கொண்டிருந்த ஜனங்களுக்காக உலகம் தோன்றினது முதல் நடக்காத பெரிய அற்புதத்தை அவர்கள் கண்களுக்கு முன்பாக கர்த்தர் செய்தார். செங்கடல் இரண்டாகப் பிளந்து அவர்களுக்கு வழி கொடுத்தது. அவர்கள் மறுகரையை அடைந்தார்கள்.

            கர்த்தர் காட்டும் பாதையிலே; வசனம் காட்டும் பாதையிலே; நீதியில் பாதையிலே நடக்கும் தம்முடைய பிள்ளைகளுக்கு வழிகாட்ட எப்போதும் கர்த்தர் அவர்கள் மீது கண்ணோட்டமாக இருக்கிறார். எப்படிப்பட்ட பார்வோனின் சேனை உங்களை பின் தொடர்ந்தாலும், எப்படிப்பட்ட செங்கடல்கள் உங்களுக்கு எதிராக நின்று கொண்டு இருந்தாலும் நீங்கள் கர்த்தரை நோக்கி கூப்பிடுங்கள். அவர் தமது வழிகளை உங்களுக்குத் தெரிவிப்பார் பாதைகளை காட்டுவார்.

Wednesday, January 25, 2023

கர்த்தர் உங்களுக்கு துணை நிற்கிறார். !

ஏசாயா 41:14 யாக்கோபு என்னும் பூச்சியே இஸ்ரவேலின் சிறு கூட்டமே பயப்படாதே நான் உனக்கு துணை நிற்கிறேன் என்று கர்த்தரும் இஸ்ரவேலின் பரிசுத்தரும் ஆகிய உன் மீட்பர் உரைக்கிறார்.

               மனிதர்கள் வெளித் தோற்றத்தைப் பார்த்து, உலகப் பிரகாரமான சிறப்புகளை பார்த்து ஒரு மனிதனை மதிப்பிடுகின்றனர். கர்த்தர் வெளித்தோற்றத்தை பார்க்கிற தேவன் அல்ல. அவர் இருதயங்களையும் உள்ளிந்திரியங்களையும் சோதித்தறிகிற தேவன். மற்றவர்களுடைய பார்வையில் மட்டுமல்ல தங்கள் சொந்த பார்வையிலேயே சிறியவர்களும் அற்பமானவர்களும் என்று எண்ணிக் கொண்டிருந்த, நம்பிக்கொண்டிருந்த மனிதர்களை அவர் கைதூக்கி எடுத்து அவர்கள் மூலமாக பெரிய காரியங்களை செய்தவராக இருக்கிறார். ஆகவே கலங்காதீர்கள் அவர் உங்களுக்கு துணை நிற்கிறார். பயப்படாதே நான் உனக்கு துணை நிற்கிறேன் என்று கர்த்தருடைய வசனம் சொல்லுகிறது. 

            வானத்தையும் பூமியையும் நாம் காணும் யாவற்றையும் ஞானமாய் படைத்த நம் ஆண்டவர் நமக்கு துணை நிற்கிறார் என்பது சாதாரண விஷயமா? எவ்வளவு பெரிய பாக்கியம் அது. 

  • சவுல் இஸ்ரவேலின் ராஜாவாக அபிஷேகம் பண்ணப்படுவதற்கு முன்பு அவர் நான் இஸ்ரவேல் கோத்திரத்திலே சிறிதான பென்னியமின் கோத்திரத்தான் அல்லவா? பென்னியமின் கோத்திரத்து குடும்பங்களிலெல்லாம் என் குடும்பம் அற்பமானது அல்லவா? என்று சாமுவேல் தீர்க்கதரிசியை பார்த்து கூறினார்.
  • ராஜாவாக அபிஷேகம் பண்ணப்படும்படி தேடினபோது தன் தகுதியைப் பற்றி சந்தேகப்பட்டவராக என்னால் இது கூடுமா? என்று அச்சப்பட்டவராக ஓடி ஒளிந்து கொண்டார்.
  • அவர் ராஜாவாக அபிஷேகம் பண்ண பட்ட பிற்பாடு பலர் இந்த சவுலா நம்மை இரட்சிக்கப் போகிறான்.? இந்த சவுலா நமக்கு ராஜாவாக இருக்கப் போகிறான்? என்றவர்களாக அவனை அசட்டை பண்ணினார்கள்.

             சவுல் அவருடைய பார்வையில் எப்படி அற்பமாக இருந்தாரோ அப்படியே அநேக ஜனங்களது பார்வையிலும் இருந்தார். சில மாதங்களுக்குள்ளாக நாகாஸ் என்னும் அம்மோனியன் வந்து இஸ்ரவேலின் ஒரு பட்டணத்துக்கு விரோதமாக முற்றுகை போட்டான். அந்த பட்டணத்து மனிதர் மிகவும் கலங்கினார்கள். கர்த்தருடைய ஆவியானவர் சவுலின் மீது இறங்கினார். கர்த்தர் அவருக்கு துணை நின்றார் அவர் சத்துருக்களுக்கு எதிராக பெரிய வெற்றியை பெற்றுக் கொண்டார். இந்த சவுலா நமக்கு ராஜாவாக இருக்கப் போகிறான் என்ற ஜனங்கள் நடுநடுங்கத்தக்க விதத்தில், தேவன் தெரிந்து கொண்ட தன்னையே அற்பமாக எண்ணின சவுல் ஆச்சரியப்படத்தக்கவிதத்தில் காரியங்கள் மாறுதலாக முடிந்தது. 

            மனிதர்கள் உங்களுக்கு எதிராக என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும், ஏளனம் செய்யட்டும், உங்கள் தகுதிகளை திறமைகளை குறித்து கேள்வி எழுப்பட்டும். அமைதியாக இருங்கள். நாளொன்று வரும். கர்த்தர் உங்களுக்கு துணை நிற்பதை, கர்த்தர் உங்களோடு இருப்பதை அவர்கள் சொந்த கண்களாலே காண்பார்கள். நிச்சயமாகவே நீங்கள் அதிசயப்பட்டு பூரிப்பீர்கள். கர்த்தர் பெரிய காரியங்களை செய்வார். 

Tuesday, January 24, 2023

தடைகளுக்கு பின்னால் மறைந்திருக்கும் சிறந்த நன்மைகள்.!

            தாவீதைக் காவல் பண்ணி காலையில் கொலை செய்யும்படி சவுல் அவரது வீட்டுக்கு ஆட்களை அனுப்பினார். அந்த சூழ்நிலையைப் புரிந்து கொண்ட தாவீதின் மனைவி மீகாள் தாவீதுக்கு எச்சரிக்கை கொடுத்தது மட்டுமின்றி அவரது உயிரை காப்பாற்றுவதற்கான ஒரு யோசனையும் கொடுத்தார். அப்படியே தாவீது ஜன்னல் வழியாக இறக்கி விடப்பட்டு தப்பி ஓடி தன் உயிரை காப்பாற்றிக் கொண்டார். கர்த்தர் தாவீதுக்கு அறிவுக் கூர்மையுடைய, நல்லாலோசனை கொடுக்கக்கூடிய அளவுக்கு ஞானமுள்ள, அவனை நேசிக்க கூடிய மனைவியை கொடுத்திருந்தார். அவளது உதவியுடன் தேவன் அவனை அபிஷேகம் பண்ணின நோக்கத்தை நிறைவேற்ற முடியாதபடி சத்துரு உருவாக்கிய தடையை அவர் மேற்கொண்டார்.

            இப்படிப்பட்ட ஆசீர்வாதமான ஒரு குடும்பத்தை அடைவதற்கு தாவீது கடந்து வந்த பாதைகள் ரோஜா மலர்கள் தூவப்பட்டவையாக இருக்கவில்லை. மாறாக துரோகத்தின் முட்களும், நிந்தையின் கற்களும், திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஏமாற்றத்தின் குழிகளும் நிறைந்தவையாக இருந்தது. கர்த்தரை மட்டுமே அவர் நம்பி இருந்ததால் கடந்து வந்த பாதைகள் அவரது பயணத்தை தடைபடுத்தவில்லை. மாறாக தடைகள் யாவும் நன்மைக்கு ஏதுவாக மாறிப்போனது.

  • கோலியாத்தை மேற்கொள்பவனுக்கு ராஜாவின் மகள், அவன் தகப்பன் குடும்பத்துக்கு இஸ்ரவேலிலே சர்வமானியம் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அப்படி ஏதும் நடந்ததாக அறிய முடியவில்லை: ஏமாற்றம்.
  •  என் மூத்த குமாரத்தியாகிய மேராவைத் தருவேன் என்று சவுல் சொன்னார். மேராப் தாவீதுக்கு கொடுக்கப்படும் நாட்கள் வந்த போது மேகோலாத்தியனாகிய ஆதரியேலுக்கு மனைவியாக கொடுக்கப்பட்டாள்: துரோகம், திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஏமாற்றம். 
  • இவையெல்லாம் ஏதோ ஊர் பேர் தெரியாத இரண்டு குடும்பங்களுக்கிடையே அல்லது இரு நபர்களுக்கு இடையே நடந்த சம்பவங்கள் அல்ல. தாவீது கோலியத்தை வீழ்த்தியதினாலே முழு இஸ்ரவேல் தேசத்துக்கும் நன்கு அறிமுகமான நபர்.சவுல் இஸ்ரவேலின் ராஜா. இந்த நிகழ்வுகள் முழு இஸ்ரவேல் தேசத்திலும் பேசப்பட்டிருக்கும்: மிகுந்த நிந்தை.

            இவற்றை எல்லாம் கடந்துதான் கர்த்தர் கொடுத்த ஈவாக மீகாள் தாவீதின் வாழ்க்கையில் கடந்து வந்தாள். ஏதோ சில காரியங்களில் மிகுந்த தடை, மிகுந்த ஏமாற்றம், துன்பங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கலாம் தைரியமாக அப்படிப்பட்ட காரியங்களை கடந்து செல்லுங்கள். கர்த்தருக்கு தெரியாமல்  உங்கள் வாழ்க்கையில் எதுவும் நடந்து விட முடியாது. எப்படிப்பட்ட தீமையான காரியங்கள் நடந்தாலும் கர்த்தர் அதை உங்கள் நன்மைக்கு ஏதுவாக முடியப்பண்ணுவார்.

ரோமர்-8:28
 அன்றியும் அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்பு கூறுகிறவர்களுக்கு சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறது என்று அறிந்திருக்கிறோம்.

Monday, January 23, 2023

உங்கள் நீதியை வெளிச்சத்தைப் போல விளங்கப்பண்ணுவார்!

மனிதர்களுடைய வார்த்தைகள் அவர்களது சமூக அந்தஸ்தைப் பொறுத்தே மதிக்கப்படுகின்றன. ஏழைகள் கூறும் உண்மைகளை விட அந்தஸ்தில் உயர்ந்தவர்கள் கூறும் பொய்கள் மெய்களென கொண்டாடப்படும் அவலத்தையும் சமூகத்திலே காண முடியும். பொய்கள் ஆயிரம் இருந்தாலும் விடியற்காலத்து வெளிச்சத்திற்கு முன் ஓடி ஒளியும் இருளைப் போல ஒரே ஒரு உண்மைக்கு முன்பாக அது அகன்று போகும். கர்த்தர் உண்மைக்கும் உண்மையுள்ளவர்களுக்கும் துணை செய்கிறவர். உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான். 

அடிமையாக எகிப்துக்கு சென்ற யோசேப்பை அவரது எஜமான் தனது வீட்டுக்கு அதிகாரியாகி வீட்டு விசாரணைக்காரன் என்ற உயர்ந்த பொறுப்பை கொடுத்து நல்ல விதமாக நடத்தினார். அமைதியாக சென்ற அவரது வாழ்க்கையில் திடீரென்று புயல் வீசியது. பாவம் செய்ய மறுத்ததால், யோசேப்பு செய்யாதவற்றை செய்ததாக கூறினார் அவரது எஜமானின் மனைவி. பார்வோனின் பிரதானியும் தலையாரிகளுக்கு அதிபதியுமான போத்திப்பரின் மனைவியின் வார்த்தையா? அல்லது ஊர் பெயர் தெரியாத ஒரு எபிரேய அடிமையின் வார்த்தையா? யாருடைய வார்த்தையை உலகம் நம்பும்? யோசேப்பு சிறைச்சாலையிலே அடைக்கப்பட்டார். அவரது நியாயம் எடுபட்டு போனது. இந்த செய்தியை கேள்விப்படும் எந்த ஒரு மனிதனும் யோசேப்புக்கு ஆதரவாக நிற்கமாட்டான். ஆனால் கர்த்தரோ யோசேப்போடு இருந்தார் என்று வேதம் சொல்லுகிறது.

 நாட்கள் சென்றது எந்த தேசத்திலே நிந்தைக்குரியவனாக பழிச்சொற்களுக்கு உரியவனாக யோசேப்பு காணப்பட்டாரோ அந்த தேசத்திற்கே கர்த்தர் அவரை அதிகாரியாக மாற்றிவிட்டார். உங்களை சுற்றி காணப்படும் பொல்லாத மனிதர்களாலே பரப்பப்படும் பொய்கள் அவதூறுகளைக் கண்டு கலங்காதிருங்கள். கர்த்தர் உண்மைக்கு துணை நிற்கிற தேவன். அவர் உங்களைப் பரிபூரண ஆசீர்வாதங்களாலே நிரப்புவார்.

சங்கீதம் 37:6 "உன் நீதியை வெளிச்சத்தை போலவும் உன் நியாயத்தை பட்ட பகலை போலவும் விளங்க பண்ணுவார்."

Sunday, January 22, 2023

துன்பத்தின் மத்தியிலும் உங்கள் தகுதியை உயர்த்திக்கொள்ளுங்கள்.!

            உரிய முக்கியத்துவம் அளிக்கப்படாத போது; புறக்கணிக்கப்படுவதாக, துன்பப்படுத்தப்படுவதாக உணரும்போது; சோர்ந்து போய் விடுவது மனித இயல்பு. நம்முடைய தேவன் சோர்ந்து போகிறவர்களுக்கு பெலன் அளித்து சத்துவம் இல்லாதவர்களுக்கு சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறவர்.

            புறக்கணிப்புகளை, துன்பங்களை எப்படி கையாள வேண்டும்? என்பதை வேதம் நமக்கு நன்கு கற்றுத் தருகிறது. 

            தாவீதின் சகோதரர்களில் பலர் ராணுவத்திலும் மற்ற பல வேலைகளிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது, தாவீது மட்டும் வனாந்தரத்திலே ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். ராஜாவை விட மதிக்கப்படக்கூடிய சாமுவேல் தீர்க்கதரிசி, ஈசாயின் வீட்டுக்கு வந்தபோது, தாவீது என்று ஒரு குமாரன் இருக்கிறார் என்பதையே மறந்து விட்டவர்களாக அவரது பெற்றோரும் சகோதரர்களும் காணப்பட்டனர். அபிஷேகிக்கப்பட்ட பின்பும் கூட குறிப்பிட்ட காலம் வரை அவரை ஆட்டுமந்தையிலே தான் நாம் பார்க்க முடிகிறது.

            பொதுவாக பலர் புறக்கணிப்புகள், தோல்விகள் போன்ற கடந்தகால கசப்பான அனுபங்களைை நினைத்து, தங்களது நிகழ்காலத்தில் செய்ய வேண்டிய காரியங்களை செய்யாமல் சோர்ந்து போனவர்களாக; தங்களை தாங்களே வருத்திக் கொள்கிறவர்களாக; வேதனைப்படுபவர்களாக மாறிவிடுகின்றனர்.  தாவீதை குறித்து நாம் பார்க்கும் போது அவர் எதைக்குறித்தும் கவலைப்படாமல் தன்னுடைய பொறுப்புகளை சரியாக நிறைவேற்றுகிறவராக காணப்பட்டார்.  ராஜ சமூகத்திலே இருக்கக்கூடிய ராஜாவின் ஊழியக்காரன்  "இதோ பெத்லகேமியனான ஈசாவின் குமாரன் ஒருவனை கண்டிருக்கிறேன் அவன் வாசிப்பதில் தேறினவன், அவன் பராக்கிரமசாலி, யுத்த வீரன், காரியசமர்த்தன், சவுந்தரியமுள்வன், கர்த்தர் அவனோடேகூட இருக்கிறார் என்று சொல்லத் தக்கதாக அவருடைய திறமைகள் வளர்ந்திருந்தது. ஆட்டு மந்தையிலிருந்து நேரடியாக ராஜ அரண்மனைக்கு செல்லக் கூடியவராக ஆண்டவர் அவரை நொடி பொழுதில் மாற்றினார்.

         ஆடு மேய்க்கக்கூடிய ஒரு மனிதர் இவ்வளவு திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியமா என்று யோசித்தால் ஆச்சரியமாக இருக்கும்.!  நீங்கள் இன்று இருக்கிற சூழ்நிலைகளைப் பார்த்து சோர்ந்து போகாதீர்கள். காலத்தை சரியாக பிரயோஜனப்படுத்திக் கொள்ளுங்கள். பெரிய காரியங்களை; நன்மைகளை; உயர்வுகளைை நிச்சயமாய் நீங்கள் கண்டடைவீர்கள்.

எபேசியர் -5:16 "நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக் கொள்ளுங்கள்." 

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

Saturday, January 21, 2023

கிபியோனியர்களுக்கும் நியாயம் செய்த கர்த்தர்.!

            கர்த்தர் நியாயம் செய்கிற தேவன். ஐயோ! எனக்கு நீதி மறுக்கப்படுகிறதே! நான் அநியாயமாக துன்பப்படுத்தப்பட்டு கொண்டிருக்கிறேனே! நிந்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறேனே! என்று கலங்கிக்கொண்டு இருக்கிறீர்களா? தைரியமாக இருங்கள். கர்த்தர் உங்களுக்கு நியாயம் செய்வார்.

            இஸ்ரவேல் தேசத்தில் கிபியோனியர்கள் என்ற சிறு கூட்டம் ஜனங்கள் வெகு காலமாக வசித்து வந்தார்கள். அவர்கள் இஸ்ரவேலர்கள் அல்ல. இஸ்ரவேலின் தேவனை ஆராதிக்க கூடியவர்களும் அல்ல. ராஜாவாகிய சவுலின் காலகட்டத்தில் அவர்கள் மிகக்கடினமாக நடத்தப்பட்டனர். அவர்களில் அநேகர் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். விளைவு, இஸ்ரவேல் தேசத்திலே கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. அநீதி செய்த சவுலின் குடும்பத்தார் தண்டிக்கப்படும் வரை பஞ்சம் தேசத்தில் நீடித்தது.

தான் அபிஷேகித்த சவுல் என்றோ தான் தெரிந்து கொண்ட இஸ்ரவேல் ஜனங்கள் என்றோ கர்த்தர் பாரபட்சம் பார்க்கவில்லை. தேவனை அறியாத, அவரை ஆராதிக்காத, ஒரு சிறு கூட்டம் ஜனங்களுக்காக தன் சொந்த ஜனமாகிய இஸ்ரவேலர்களிடத்திலேயே நியாயம் விசாரித்த தேவன்; இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினாலே மீட்கப்பட்ட தேவனுடைய பிள்ளைகளாக மாற்றப்பட்டு இருக்கக்கூடிய உங்களுக்கும் எனக்கும் நியாயம் செய்யாமல் இருப்பாரா? நிச்சயமாய் செய்வார். ஆண்டவர் இரக்கம் உள்ள தேவனே தவிர அநீதிக்கு துணை நிற்கக்கூடிய தேவன் அல்ல.

 அவர் (கர்த்தர்) பட்சபாதம் பண்ணுகிறவரும் அல்ல. பரிதானம் வாங்குகிறவரும் அல்ல. என்று உபாகமம் 10 :13 இல் நாம் காண முடியும். வெள்ளை அங்கி போட்ட ஐயா ஆயிற்றே; வாத்தியக்கருவிகளை இசைத்து பாடுகிறவர் ஆயிற்றே; ஒழுங்காக சபைக்கு வருகிறவர் ஆயிற்றே; அதிகமாக காணிக்கை போடுகிறவர் ஆயிற்றே என்றெல்லாம் கர்த்தர் வித்தியாசம் பார்ப்பதில்லை. யாராக இருந்தாலும் அவர் நீதியுள்ள நியாயாதிபதியாக இருக்கிறார். அவரை ஆராதிக்க கூடியவர்களாக இருந்தாலும் ஆராதிக்காதவர்களாக இருந்தாலும் கர்த்தர் நீதியாக நியாயம் தீர்க்கக்கூடிய தேவன். நீங்கள் யாராக இருந்தாலும் ஒடுக்கப்படுகிறவர்களாக நீதி மறுக்கப்பட்டவர்களாக காணப்படுவீர்களேயானால் கர்த்தர் உங்களுக்கு நியாயம் செய்யக் கூடியவராக இருக்கிறார்.

        லூக்கா-18: 7,8 வசனங்களில் இயேசு கிறிஸ்து சொல்லுகிறார், "அந்தப்படியே தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுபவர்களாகிய தம்மால் தெரிந்து கொள்ளபட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயம் செய்யாமல் இருப்பாரோ? சீக்கிரத்திலே அவர்களுக்கு நியாயம் செய்வார்".

Friday, January 20, 2023

தாழ்மை உள்ளவர்களாக இருங்கள் உயர்வுகளை பெற்றுக் கொள்வீர்கள்

மனிதர்கள் பலர் உயர்வுகளை, வெற்றிகளைப் பெற்று மற்ற அனேகரை விட தலை சிறந்தவர்களாக விளங்கும்போது அவர்கள் மனங்களிலே பெருமை எட்டிப் பார்ப்பது இயல்பு. நேபுகாத்நேசர் என்று ஒரு ராஜா இருந்தார். அவர் பல நாடுகளை வென்று தனது பாபிலோன் தேசத்தை அன்றைய காலகட்டத்தில் ஒரு வல்லரசு நாடாக மாற்றி இருந்தார். அவர் தனது அரண்மனையின் மேல் உலாவிக் கொண்டிருக்கும்போது, இது என் வல்லமையின் பராகிரமத்தினால் என் மகிமை பிரதாபத்திற்கென்று நான் கட்டின மகா பாபிலோன் அல்லவா? என்றார். இந்த வார்த்தையை அவர் சொல்லி முடிப்பதற்கு முன்பாக அவர் மீது கர்த்தருடைய தண்டனை வந்தது. மிருகங்களைப் போல புல்லை மேய்கிறவராக மாறினார். 

பெருமைக்கு எதிர்ச்சொல் தாழ்மை. தாழ்மை உள்ளவர்களுக்கு கர்த்தர் கிருபை அளிக்கிறார். பெருமையை குறித்து தனி மனிதர்கள் ஒவ்வொருவரும் எச்சரிக்கையாக இருக்க கடமைப்பட்டிருக்கிறோம். பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார் என்று வேதம் சொல்லுகிறது. கர்த்தர் ஒருவருக்கு சத்துருவாக இருப்பாரானால் அவருக்கு யார் உதவி செய்ய முடியும்? யார் அவருக்கு துணை நிற்க முடியும்?அவர்களுடைய நிலைமை மிகவும் பரிதாபகரமாக மாறிவிடும்.

 நல்ல வீடு, கல்வி, செல்வம், செல்வாக்கு, அன்பான மனைவி அறிவில் சிறந்த பிள்ளைகள், நல்ல குடும்பத்தார், நல்ல நண்பர்கள், நல்ல உடல்நலம் என எல்லாவற்றிலும் அல்லது அவற்றில் சிலவற்றில் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக இருக்கலாம். அவற்றையெல்லாம் பார்க்கும் போது என்னுடைய திறமை, என்னுடைய அறிவு, என்னுடைய அதிர்ஷ்டம் என்றெல்லாம் மனதில் கூட நினைத்து விடாதீர்கள். எல்லாவற்றிற்கும் ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள். அனைவருக்கும் இல்லாத சிலவற்றை உங்களுடைய கரங்களிலே ஆண்டவர் தந்திருப்பாரே ஆனால் அவருக்கு நீங்கள் எந்த அளவுக்கு நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும்? 

உபாகமம் 8: 17 வது வசனம் என் சாமர்த்தியமும் என் கைப்பெலனும் இந்த ஐசுவரியத்தை எனக்கு சம்பாதித்தது என்று நீ உன் இருதயத்தில் சொல்லிக் கொள்ளாமல் இருக்க எச்சரிக்கையாக இருக்கும்படி சொல்கிறது. உபாகமம்-8:18 கர்த்தர் தான் ஐசுவரியத்தை சம்பாதிக்க கூடிய பெலனை உனக்கு கொடுக்கிறவர் என்று கூறுகிறது. நம் வாழ்க்கையில் சிறப்பான காரியங்களை பார்க்கும்போது தலைகளை தாழ்த்தி நன்றியுள்ள இருதயத்தோடு அவருக்கு நன்றி செலுத்துங்கள். உங்களை அவருடைய சமூகத்தில் தாழ்மைப்படுத்துங்கள். நீங்கள் உயர்த்தப்படுவீர்கள்.

 நீதிமொழிகள்-22:4  தாழ்மைக்கும் கர்த்தருக்கு பயப்படுதலுக்கும் வரும் பலன் ஐசுவரியமும் மகிமையும் ஜீவனுமாம். 

என்று சொல்லுகிறது.
 கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

Thursday, January 19, 2023

தள்ளப்பட்டவர்களை தலைசிறந்தவர்களாக மாற்றும் தேவன்!

அநேக ஜனங்கள் ஏதோ ஒரு விதத்திலே புறக்கணிப்புகளை சந்திக்கிறார்கள். புறக்கணிக்கப்பட்டவர்களுக்குத் தான் புறக்கணிப்பின் வலி தெரியும். யார் உங்களை புறக்கணித்தாலும், ஓரங்கட்டினாலும், ஒதுக்கித் தள்ளினாலும் கலங்காதீர்கள். கர்த்தர் உங்களைச் சேர்த்துக் கொள்வார். அவர் உங்களை மகிமையினாலும் கனத்தினாலும் முடி சூட்டுவார்.

கானாவூர் கல்யாண வீட்டில் ஆறு கற்ச்சாடிகள் இருந்தன. மனிதர்கள் தங்களைச் சுத்திகரித்துக்கொள்ளும்படி  தண்ணீர் நிரப்பி வைக்கும் பாத்திரங்கள் அவை. விருந்தினர்களை உபசரித்து அமர வைக்கும் அறைக்கு வெளியே அவை வைக்கப்பட்டிருக்கும். அவை அவ்வளவு கனத்துக்குரிய பாத்திரங்கள் அல்ல. ஒரே கிணற்றிலிருந்து எடுக்கப்படும் நீர் மற்ற பாத்திரங்களில் ஊற்றப்படும் போது அது சமையலறைக்குச் செல்லும் ஆனால் இந்த கற்பாத்திரத்தில் ஊற்றப்படும் நீர் சமையலறையைப் பார்ப்பதே இல்லை. அந்த கற்சாடிகளிலே சேர்வதெல்லாம் புறக்கணிக்கப்பட்டதாக மாறிவிடுகிறது.

அந்த கானாவூர் கல்யாண வீட்டுக்கு இயேசுவும் சீஷர்களும்  அழைக்கப்பட்டிருந்தார்கள். இயேசு கிறிஸ்து அங்கு தனது முதல் அற்புதத்தைச் செய்தார். அந்த வீட்டிலே அநேக விலையேறப்பெற்ற பாத்திரங்கள் இருந்திருக்கக் கூடும் ஆனால் கர்த்தர் அற்புதம் செய்யும்படி புறக்கணிக்கப்பட்ட கற்ச்சாடியைத் தெரிந்துகொண்டார். அதிலே ஊற்றப்பட்ட தண்ணீரைத் திராட்சை ரசமாக மாற்றினார். புறக்கணிக்கப்பட்ட கற்சாடி கனத்துக்குரிய பாத்திரமாக மாறிப்போனது. நீங்கள் எத்தகைய நிந்தைகளையும் அவமானங்களையும் புறக்கணிப்புகளையும் சந்தித்துக் கொண்டிருக்கிறவர்களாக இருந்தாலும் அதே இயேசு கிறிஸ்து உங்கள் வாழ்க்கையை ஆசீர்வாதமானதாக மாற்ற விரும்புகிறவராக இருக்கிறார்.

செப்பனியா-3:19- "தள்ளுண்டவனைச் சேர்த்துக் கொள்வேன். அவர்கள் வெட்கம் அனுபவித்த சகல தேசங்களிலும் அவர்களுக்கு புகழ்ச்சியும் கீர்த்தியும் உண்டாகச் செய்வேன்."

Wednesday, January 18, 2023

உங்களைப் பலவந்தரின் கைக்கு நீங்கலாக்கி விடுவிக்கும் தேவன்.!

துன்பங்களை, துன்பப்படுத்துகிற கொடிய, இரக்கமற்ற மனிதர்களை பார்க்கும்போது எவ்வளவு காலம் இப்படிப்பட்ட துன்பம் நீடிக்கும் என்பதை அறியாதவர்களாக இருப்பதினாலே அனேகர் சோர்ந்து போய்விடுவது உண்டு. எவ்வளவு இருள் சூழ்ந்த இரவாக இருந்தாலும் வெளிச்சம் நிறைந்த பகல் வருவது நிச்சயம். எவ்வளவு பெரிய புயலாக இருந்தாலும் குறிப்பிட்ட நாட்கள் வரை தான் அது காணப்படும்; ஆண்டு கணக்கில் மாதக் கணக்கில் நீடிப்பது இல்லை. துன்பங்களும் துன்பப்படுத்துகிறவர்களும் கூட அப்படித்தான்.

சங்கீதம் 37:35-ல் சங்கீதக்காரன் கண்ட ஒரு துன்மார்க்கனைப் பற்றி அவர் கூறுவதைக் காண முடியும். "கொடிய பலவந்தனான ஒரு துன்மார்க்கனைக் கண்டேன்; அவன் தனக்கேற்ற நிலத்தில் முளைத்திருக்கிற பச்சைமரத்தை போல் தழைத்தவனாயிருந்தான் ஆனாலும் அவன் ஒழிந்து போனான்" என்று கூறுகிறார். 

கொடியவன், பலவந்தனான துன்மார்க்கன்: தன் பலத்தினாலே வலுக்கட்டாயமாக அநீதியை துணிந்து செய்யக்கூடிய மனிதன். தனக்கு ஏற்ற நிலத்தில் முளைத்திருக்கிற பச்சைமரம்: வறட்சியான பிரதேசங்களில் வளரக்கூடிய வறட்சியை தாங்க கூடிய மரங்கள் உண்டு அது அந்த மரத்திற்கு ஏற்ற நிலம். அது பட்டுப்போவதற்கு வாய்ப்பே இல்லை. ஆனாலும் அவன் நிலை நிற்கவில்லை அழிந்து போனான்.

துன்பங்கள் வாழ்க்கையில் ஒரு பகுதி மட்டுமே ஆகவே கலங்காதீர்கள். நீங்கள் திராணிக்கு மேலாக சோதிக்கப்படும்படி அவர் ஒருபோதும் அனுமதிப்பதே இல்லை. உங்களை சூழ்ந்திருக்கும் கார்மேகங்கள் அகன்று போகும். கர்த்தருடைய வெளிச்சம் உங்கள் மேல் உதிக்கும். வேதாகமப் பரிசுத்தவான்களுடைய வாழ்க்கையிலும் கூட அனேக துன்பங்கள் வந்தது. ஆனால் அந்த துன்பமான காலங்கள் முடிந்த பின்பு அவர்களுடைய முன் நிலைமையை பார்க்கிலும் அவர்களுடைய பின் நிலைமை ஆசீர்வதிக்கப்பட்டது. அவர்கள் வெற்றி சிறந்தவர்களாக மாறினார்கள். எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் எப்படிப்பட்ட பாதைகளின் வழியாக நீங்கள் கடந்து போய்க் கொண்டிருந்தாலும் உங்களை விடுவிக்கும்படி உங்களை பாதுகாக்கும் படி கர்த்தர் உங்களோடு இருக்கிறார். நீங்கள் நிச்சயமாகவே தோற்றுப் போவதில்லை.

எரேமியா 15:22 வது வசனத்தில் கர்த்தர் சொல்லுகிறார், "நான் உன்னை பொல்லாதவர்களின் கைக்கு தப்புவித்து உன்னை பலவந்தரின் கைக்கு நீங்கலாக்கி விடுவிப்பேன்".

Tuesday, January 17, 2023

நீதி சரிக்கட்டுகிற கர்த்தர்!

            கடந்த நாட்களிலே நீங்கள் பட்ட துன்பங்களை எல்லாம் மறந்து; துன்பப்படுத்தினவர்களை மன்னித்து; அவர்கள் பெயர் முதற்கொண்டு மறந்து போயிருக்கலாம் ஆனால் உங்களை அழைத்த தேவன் அவற்றையெல்லாம் நினைவு கூறுகிறவராக அவற்றிற்கெல்லாம் நீதி சரிக்கட்டுகிறவராக இருக்கிறார். 

            தன் சொந்த சகோதரர்களால் 20 வெள்ளிக்காசுக்கு விற்கப்பட்ட யோசேப்பு அடிமையாக எகிப்துக்கு கொண்டு செல்லப்பட்டார். சொப்பனக்காரன் யோசேப்பின் சொப்பனம் எப்படி முடியும் பார்ப்போம் என்று ஏளனம் செய்தவர்களாக; ஐயோ! யோசேப்புக்கு இப்படி துரோகம் செய்கிறோமே என்ற எண்ணம் சிறிதும் இல்லாதவர்களாக; அவரது சகோதரர்கள் கடந்து சென்றார்கள். மறுபக்கத்தில் யோசேப்பு தன் தகப்பன் வீட்டை குறித்த நினைவுகளோடு; வேதனைகளோடு; எதிர்காலத்தை குறித்த நிச்சயமற்றவனாக; ஒரு அடிமையாக; தன்னை விலை கொடுத்து வாங்கின மனிதர்களோடு எகிப்தை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். 

காலங்கள் மாறினது. கர்த்தர் யோசேப்போடு இருந்தார். அவர் ஆசீர்வதிக்கப்பட்டார். யோசேப்பை பொறுத்தவரையில் அவருடைய துக்கம் நீங்கி அவர் ஆறுதல் அடைந்தார். சொப்பனக்காரன் என்று ஏளனம் செய்யப்பட்ட யோசேப்புக்கு, சொப்பனத்தின் நிமித்தமாகவே அடிமையாக விற்கப்பட்ட யோசேப்புக்கு, சொப்பனத்தை கொடுத்த தேவன், அவன் கடந்து வந்த பாதைகளை மறக்கவில்லை. 

தேசத்திலே கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. எந்த பாதை வழியாக யோசேப்பு அடிமையாக , ஆதரவற்றவனாக நடந்து சென்றாரோ; அதே பாதை வழியாக யோசேப்பினிடத்தில் தானியம் கொள்ளும்படி அவரது சகோதரர்கள் கானானில் இருந்து எகிப்தை நோக்கி கடந்து வந்தார்கள். இவர்தான் யோசேப்பு என்பதை அறியாதவர்களாக முகங்கு பெற தரையிலே விழுந்து அவரை வணங்கினார்கள். அவரிடத்தில் ஆகாரம் வாங்கி தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ளக்கூடியர்களாக மாறிப்போனார்கள். அன்பான சகோதரனே சகோதரியே உங்கள் கண்ணீர் அவருடைய துருத்தில் இருக்கிறது அவர் உங்களையும் நீங்கள் பட்ட துன்பங்களையும் நினைவு கூருகிற தேவன்.

வெளி-22:12  "இதோ, சீக்கிரமாய் வருகிறேன், அவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது."

Monday, January 16, 2023

கர்த்தர் உங்களை பலப்படுத்தி உங்களுக்கு சகாயம் பண்ணுவார்

            ஒரு மனிதன் செழிப்படைவதை ஒரு சிலர் மகிழ்ச்சியோடும் வேறு சிலர் வெறுப்போடும் பார்க்கக்கூடும். வில் அம்புகளால் அவனைத் தாக்க முடியாவிட்டாலும் எப்படியாவது அவனை வீழ்த்தி விட வேண்டும் என்ற ஆழ்ந்த எண்ணத்தோடு சொல் அம்புகளாலே; காயப்படுத்தக்கூடிய வார்த்தைகளினாலே; அவதூறுகளை பரப்புவதினாலே அவனை எப்படியாவது மட்டம் தட்டி விட வேண்டும். அவனது முயற்சியை விட்டு பின்வாங்க வைக்க வேண்டும். என்பதற்காக அதிகமாக பிரயாசப்படுகிறவர்கள் உலகத்திலே உண்டு. 

            கர்த்தர் உங்களுடைய வாழ்க்கையிலே பெரிய ஆசீர்வாதங்களை வைத்திருப்பாரேயானால் உங்களுக்கு சில எதிர்ப்புகள் வரத்தான் செய்யும் ஆனால் நீங்கள் எதிர்ப்புகளை மேற்கொள்ளும்படி வெற்றி சிறந்தவர்களாக மாறும்படி கர்த்தர் உங்களுக்கு உதவி செய்கிறவராக துணை புரிகிறவராக காணப்படுகிறார். 

            கோத்திர பிதாவாகிய யாக்கோபு தம்முடைய குமாரர்களை கூப்பிட்டு இறுதி நாட்களிலே அவர்களுடைய கோத்திரங்களுக்கு சம்பவிப்பதை குறித்து தீர்க்கதரிசனமாக உரைத்தார். அவர் யோசேப்பை குறித்து "யோசேப்பு, கனி தரும் செடி; அவன் நீரூற்றண்டையில் உள்ள கனிதரும் செடி; அதன் கொடிகள் சுவரின் மேல் படரும்" என்றார். கூடவே அவர்களுக்கு வரவிருக்கும் துன்பங்களையும் துன்பங்களுக்கு மேலாக கர்த்தருடைய துணையோடு அவர்கள் அடையப்போகும் வெற்றியையும் குறித்தும் கூட கூறினார்."வில்வீரர் அவனை அவனை மனமடிவாக்கி அவர் மேல் எய்து அவனை பகைத்தார்கள்." என்று யாக்கோபு கூறுகிறார். முன்னேற்றத்திற்கு விரோதமாக செழிப்புக்கு விரோதமாக வில்வீரரை போன்ற மனிதர்கள் தங்களுடைய முழு முயற்சியையும் பயன்படுத்தி அவனை மனமடிவாக்குகிறதை நாம் காண முடியும். ஆனால் தொடர்ந்து நாம் யாக்கோபுடைய வார்த்தைகளை கவனிக்கும்போது போது "அவனுடைய புயங்கள் யாக்கோபுடைய வல்லவரின் கரங்களால் பலத்தன". என்று சொல்லுகிறார்.

            கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே! மனிதர்களுடைய வார்த்தைகளைக் கண்டு, காயப்படுத்தக்கூடிய சொற்களைக் கேட்டு பயப்படாமல், கலங்காமல் தொடர்ந்து முன்னேறிச் செல்லுங்கள். யோசேப்பின் புயங்களை பலப்படுத்தின கர்த்தருடைய கரம் உங்களையும் பலப்படுத்தும். கர்த்தர் உங்களுக்கென்று தந்த வார்த்தைகள், தீர்க்கதரிசனங்கள் உங்களுடைய வாழ்க்கையில் நிறைவேறும்படி அவர் உங்களுக்குத் துணை நிற்கிறவராக காணப்படுகிறார். நீங்கள் மென்மேலும் வளர்ந்து பெருகுவீர்கள்.

ஏசாயா 41:10- நான் உன்னை பலப்படுத்தி உனக்குச் சகாயம் பண்ணுவேன். என் நீதியின் வலது கரத்தினால் உன்னைத் தாங்குவேன். 

தம்முடைய பிள்ளைகளை பலப்படுத்துகிற சகாயம் பண்ணுகிற கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!

உங்களுக்கு எதிரானவர்கள் சத்தியத்துக்கு எதிரானவர்கள்.!

சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கிவைக்கிற மனுஷருடைய எல்லாவித அவபக்திக்கும் அநியாயத்துக்கும் விரோதமாய், தேவகோபம் வானத்திலிருந்து வெளிப்படுத்தப்...